Monday, May 27, 2013

காந்தியை சுட்டவன் கோட்சே அல்ல !

ரஜினி படங்களில் ஏதோ காட்சியில் எப்படியாவது இடம் பெற்றுவிடும் பாம்புகள், என் கனவுகளையும் விட்டு வைத்ததில்லை. உறக்கத்தில் நான் கண்ட கனவுகளில் அதிகமாய் இடம்பெற்றது பாம்புகளே. ஆண்களின் அதுவும் வயதிற்கு வந்த ஆண்களின் கனவுகளில் பாம்புகள் வருவதற்கான உளவியல் காரணங்கள் சுவாரஸ்யமானவை. என் கனவுகளில் வரும் வித விதமான பாம்புகளை உங்களால் ஜூவிலோ, காட்டிலோ, டிஸ்கவரி சேனலிலோ கூட பார்த்திருக்க முடியாது. பெரும்பாலும் ஐந்தடிக்கும் குறைந்த உயரமுள்ள பாம்புகளே வரும், மஞ்சள் நிறத்தில் சிகப்பு புள்ளி வைத்திருக்கும் ராமராஜன் சட்டை கலர் பாம்புகளை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாள் என் கனவிற்குள் எட்டிப் பாருங்கள் பார்க்கலாம். வரும் பாம்புகள் சும்மாவா இருக்குமென்கிறீர்கள்? என் முழங்காலுக்கு கீழான சதை பகுதியை பாம்பொன்று தன் கூறிய பற்களால் ஆம் பற்களால்தான், கவ்விப் பிடித்துக் கொண்டது நான் அதன் வாலை பிடித்து இழுத்ததில், நேர்கோடு போலான சர்ப்பம் இன்னும் இறுக்கமாக கவ்விப்பிடிக்க, பதறி எழுந்தேன். போர்வைக்குள்ளே, கட்டிலின் அடியே எங்கோ பாம்பொன்று ஊர்ந்து கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை. ஒவ்வொரு இரவிலும் பாம்புகளின்  ராஜ்ஜியம்தான். திருமணத்திற்கு பிறகு பாம்புகள் கனவுகளில் வருவதை தவிர்த்துவிட்டன ஏனென தெரியவில்லை.

பொதுவாக கனவுகள் ஏன் வருகின்றன என்கிற அறிவியல் உண்மையை எல்லாம் அறிய எனக்கு ஆர்வமில்லை. வரும் கனவுகளை ரசிக்கவே எனக்கு நேரம் போதுமானதாய் இல்லை. ஒரு நடிகை கூட என் கனவுகளில் வந்ததே இல்லை. ராதா மட்டும் கேட்டிருந்தால், என் கற்பைக் கூட அர்பணிக்க தயாராயிருந்தேன் அப்பேற்பட்ட ராதா கூட வந்ததில்லை, ஆனால் நிறைய பெண்கள் வந்ததுண்டு. கனவில் வந்த எல்லா பெண்களுமே ஒரு தேவதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றவர்களாய் இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.  ஒருமுறை என் மனைவியும் முன்னாள் காதலியும் ஒருசேர வந்தார்கள், காதலி கனிவான கண்களை அப்போதும் வைத்திருந்தாள், மனைவிக்கும் அழகான கருணை மிகு கண்கள்தான் ஏனோ அவ்விடத்தில் அவ்வளவு சாந்தமாக இருந்திருக்கவில்லை. எட்டாவது படிக்கும்போது கேராளாவில் பார்த்த இடது நெற்றியோரத்தில் தழும்பும், ஆண்பிள்ளை போன்ற நெற்றியில் பட்டுத் தெறிக்கும் கூந்தலும் பெற்றிருந்த அந்த பெண் அடிக்கடி கனவில் வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள், தற்போது யார் அவளிடம் துன்புறுகிறார்களோ..... அந்த ஊரின் பெயர், தாடிக்கொம்பு என நினைக்கிறேன் அவ்வூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும்போது பார்த்த அந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த, நீள மூக்கும் அமுங்கிய நெற்றியும், குவிந்த உதடுகளும் பெற்றிருந்த பெண்ணொருத்தி, என் மனைவிக்கு தெரியாமல் இன்றும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. பெண்களால் நிறைந்த கனவுகளை, கலைக்கும் துஷ்ட செயல் புரியும் யாராயிருப்பினும் அவர்களுக்கு இந்த மண்ணில் கருணையே வழங்கக் கூடாது.

நாய் ஒன்று குரைத்ததோடில்லாமல், பாய்ந்தோடி வந்து என்னைக் கடித்தும் வைத்துவிட்டது கனவில்தான். என் போல நாய்களுக்கு பயந்தவனை உங்களால் எங்குமே பார்க்க முடியாது. நான் நாய்களுக்கு பயப்படுவேன் என்பது என்னை விட நாய்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதுதான் என் ஆச்சர்யம், கோவையில் வசித்தபோது, உருவத்தில் வீட்டில் வளர்க்கும் முயல் அளவே இருக்கும் நாயொன்று துரத்தி வந்ததில் கேட்டில் லுங்கி மாட்டி சர்ரென கிழிந்து தொடை வரை வெளியில் தெரிந்துவிட்டது. அந்த என் கவர்ச்சி காட்சியை யாருமே பார்க்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல். கனவில் கடித்த நாயினை பற்றி பாட்டியிடம் கூறி, பலன் என்னவென்று வினவியதில் யாரிடமும் அதிகம் பேசாதே என்றார். அன்றிலிருந்து எந்த நாயும் கனவில் வந்து என்னை கடிக்கவில்லை. ஆனால் நிஜத்தில் நான் நிறையவே பேசுவதால், மனிதர்கள்தான் நாய் போல் கடிக்கிறார்கள். இறக்கை இல்லாத எருமையொன்று என்னை தூக்கிச் சென்று, நடு வானில் கீழே வீசியே கனவுக்கும் அடுத்த நாளே எனக்கு நேர்ந்த ஆக்சிடெண்டுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.

பாலைவனத்தில் பூக்கள் பூப்பது, சுதா ரகுநாதன் நம் வீட்டு ஹாலில் கண்ணன் பாட்டு பாடுவது, இந்திய கிரிக்கட் அணியில் ஒன் டவுன் இறங்கி பிரட் லீ பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுவது, அன்னா கோர்னிகோவா என் லட்சிய புருஷன் இவன்தான் என நம்மை கை காட்டுவது, ரஜினியை தற்செயலாய் ஏர்போர்ட்டில் சந்தித்து, அவரிடம் ஒரு மால்ப்ரோ சிகரட் கடன் கேட்பது, யாருமில்லாத் தீவில் நிர்வாணமாய் திரிவது, நிலவில் முதன்முதலில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் நிலவில் நம்மை பார்த்து அதிசியப்பது, அம்பானி நம் வீட்டு வாட்ச்மேன் வேலைக்கு அப்ளிகேசன் போடுவது, கேட்டதனைத்தும் கொடுக்கும் அலாவுதீன் பூதமொன்றை உடன் வைத்திருப்பது, தேநீர் பருகியபடியே நீரில் மிதப்பது. யாராலோ சாத்தியப்படும் அல்லது சாத்தியப்படவே படாத இம்மாதிரியான நிகழ்வுகளை நமக்கு நிகழ்த்திக் காட்டும் கனவுகளை பிடிக்காதவர்களும் இருப்பார்களா?? இந்த ஒரு கனவை என்னால் மறக்கவே முடியாது. பிரார்த்தனைக்கு இரு இளம்பெண்கள் தோள்களில் கை போட்டபடி வேக வேகமாக நடந்து வருகிறார் காந்தி, நான் ஓரமாக  அதனை படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். காந்தியை மறைத்த கோட்சே அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார், கூட்டம் சிதறியோட காந்தி சிரித்தபடி நிற்கிறார். அப்போது எங்கிருந்தோ வந்த உருவமொன்று கோட்சேவை தள்ளிவிட்டு, காந்தியை சுடுகிறது. நான் பதறிப்போய், காந்தியை கோட்ஸே அல்லவா சுட்டிருக்க வேண்டும் நீ யார்? என அவன் சட்டையை பிடித்துக் கேட்க, என்னை நெட்டித் தள்ளிவிட்டு, என் நெற்றிபோட்டில் துப்பாக்கியை வைக்கிறார்  உருவநாயகன் கமல். !

ஹே ராம்...

    

Monday, March 4, 2013

இரண்டு நிமிடங்கள்...


நான்காவது படிக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை மைதானத்திற்குள் பாம்பு நுழைந்து விட, யார் சொல்லியும் கேளாமல் வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் சவுரியார் அந்த பாம்பினை பெரிய குச்சியினால் அடித்தான். சற்று துடித்த பாம்பு தன் வாயினைஅகல விரித்து சவுரியாரை நோக்கி சீறியது அதே குச்சியைக் கொண்டு அந்த பாம்பை தரையோடு சேர்த்து குத்தி கொன்றே விட்டான். வால் மட்டும் ஆடியபடி இருந்த பாம்பை தூக்கி மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தனலக்ஷ்மியின் கையை நானும், என் கையை தன லக்ஷ்மியும் இறுக பற்றியபடி கூட்டத்தின் நடுவே இதனை கவனித்துக் கொண்டிருந்தோம். தன லக்ஷ்மி கவிழ்த்து வைக்கப்பட்ட நாதஸ்வரத்திற்கு சடை பின்னியது போலிருப்பாள். என்னை விடவும் உயரம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் முடித்து விட்டார்கள். ஐந்தாவது படிக்கும்போதே வயதிற்கு வந்து விட்டாள். பின்னாளில் அவளை சந்தித்தபோது மூன்று குழந்தைகள் என்றாள், மூன்றில் ஒன்றுக்கேனும் என் பெயர் சூட்டியிருப்பாளென குழந்தைகளின் பெயர்களை கேட்டேன். மூன்றுமே பெண் பிள்ளைகள். மதியம் சாப்பிட்ட புளிச்சாதத்தின் வாசனை இப்போதைய ஏப்பத்தில் வெளிப்படுகிறது. புளிச்சாதம் சாப்பிட்டால் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டி இருக்கிறது போதாக்குறைக்கு தொட்டுக்கொள்ள நார்த்தாங்காய் ஊறுகாயும் தேங்காய் தொகையலும் கொடுத்து விடுகிறாள். இனிமேல் புளிச்சாதம் செய்யவே கூடாதென கண்டிசனாக சொல்லிவிட வேண்டும். முடியுமா?? சிரிப்பு வருகிறது. இந்த ஊருக்கு வந்து ஏழு வருடம் ஆகிறது. சாலையின் இடைவிடாத இரைச்சல் பழகி போய்விட்டது. லிப்ஸ்டிக் போட்ட உதடுகளின் மத்தியில் சிகரட்டினை பொருத்தி நெயில் பாலிஸ் விரல்களால் லைட்டரை அழுத்தி சிகரட் பற்ற வைக்கும் பெண்கள், இப்போதெல்லாம் என்னை ஆச்சர்யப் படுத்துவதில்லை. பின் நவீனத்துவம் எந்த உலோகத்தால் ஆனது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்வதாய் பொய் சொல்லி பெண் பார்க்க அழைத்து சென்று விட்டார்கள். இதுவரை நீச்சல் தெரியாமல் இருப்பது ஒருவித கூச்சமாகத்தான் இருக்கிறது. எப்படியும் ஒருநாள் கற்றுக் கொள்ள வேண்டும் கடல் இல்லாத போனாலும் இடுப்பு வரை தண்ணீர் இருக்கும் ஆற்றிலாவது கற்றுக் கொள்ள வேண்டும். இரவில் வரும் கனவுகளை மட்டும் படபிடித்து வைக்க முடிந்தால் நாட்டில் திரைப்படங்கள் உருவாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். கனவுகளில் கூட நிம்மதியாக தூங்குவது போல் கனவு வருவது இன்னும் விந்தை. அரை தோழனின் குறட்டை சத்தத்தில் தூக்கத்தை தொலைத்த இரவுகள் ஏராளம் நல்லவேளை தற்போது சில வருடங்களாக அந்த பிரச்சனை இல்லை. ஆதி பகவான் ____ பகவான். ச்சை விஸ்வரூபமும் பெரிதாக கவரவில்லை. ராஜேந்திரனும் அதைத்தான் சொன்னான். தாலிபான் பற்றிய காட்சிகளிளெல்லாம் என் அருகில் அமர்ந்திருந்தவர் பதிமூன்று கொட்டாவிகள் விட்டார். அந்த ஊஞ்சல் காட்சியில், ஊஞ்சல் கயிற்றை எங்கே கட்டிருப்பார்கள்??. ஆதிரா இப்போதெல்லாம் அழகாக "அம்மா" என்கிறாள். சத்தமாக, மெதுவாக, அதிகாரமாக, ஆர்வமாக, என பலவித பாவங்களில் அம்மா என்ற வார்த்தையை உச்சரிக்க கற்று இருக்கிறாள். பிடிவாதம் அதிகம்தான் அது சரி பிடிவாதம் இல்லாத குழந்தை எப்படி குழந்தையாகும்?? அம்மாவை அருகில் அழைத்து சிரித்தவாறே கன்னத்தில் அடித்து விட்டாள். சும்மானாச்சுக்கும் அழுது கொண்டிருந்த மனைவியை காட்டி அம்மாவை அடிக்க கூடாதுப்பா அதிலும் அப்பாவை அடிக்கவே கூடாது என்றேன். இப்போதெல்லாம் ஒரு இடத்தில் நிற்பதில்லை எந்த விளையாட்டு பொருளும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவளை கவர்வதில்லை. அன்று அப்படித்தான் ஏதோ ஒரு ஆட்டுக்குட்டியை காட்டி அடம்பிடித்து வீட்டிற்கே தூக்கி வரச் செய்துவிட்டாள். இரண்டுமே இளங்கன்றுகள் எங்களுத்துதான் பயமாக இருந்தது. அவள் சரியாக முப்பத்தி இரண்டு நிமிடம் அதனுடன் விளையாடி ஆட்டுக்குட்டியை அம்போவென தவிக்க விட்டு அவள் மாமாவுடன் பைக் ஏறி சுற்றக் கிளம்பி விட்டாள். புதிதாக மாட்டியிருக்கும் திரைச்சீலை மெருன் கலரில் இருக்கிறது புதிதாக மாட்டியது என்றால் பழையதை தூர எறிந்துவிட்டு மாட்டியது அல்ல, பதிதாக அதாவது இப்போதான் மாட்டியே இருக்கிறார்கள் முன்னாடி இல்லவே யில்லை. அடிக்கடி வரும் தலைவலிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கோடரி தைலம் அதன் சக்தியை என் தலையில் வீணடிக்கிறது. படுத்துக் கொண்டே எம்ஜியார் ஆட்சியை பிடித்தாராம் வேடிக்கை, என்னால் படுத்துக் கொண்டே பால் டம்ளரைக் கூட பிடிக்க முடியவில்லை. குஷ்பூவிற்கு கோவில் கட்ட நினைத்தவர்களை தேடிக் கண்டறிந்து டைம்பாஸில் இன்டர்வியு செய்திருந்தார்கள் படித்தேன். அதில் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறானாம், பெரும்பாலும் அங்கே உருப்படாமல் இருந்தவர்கள்தான் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. அண்ணன் தம்பி ரெண்டு பேருங்கிறீங்க வடையும் பிய்க்க கூடாதுங்கிறீங்க காமடிதான் ஞாபகம் வருகிறது. ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்து காணும்போது. என்னை கேட்டால் ஸ்டாலின் அடுத்த திமுகவின் தலைவராக சரியான தேர்வு. நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்.... இப்போது பெப்சி உமா என்ன செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு மிகப்பெரிய க்ரேஸ் இருந்தது குழந்தைத்தனமான முகமும் குழைவில்லாத பேச்சும் இப்போது நினைத்தாலும் அய்யய்யோ ஆனந்தமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே... செம பாட்டு, பாட்டு அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை. எந்தக் காட்சியுளும் அழுத்தமே இல்லை ஒரு கட்டத்திற்கு மேல் தம்பி ராமையா பொறுமையை சோதித்து விட்டார். ப்ளாக் எழுதி மாமாங்கம் ஆகிறது இன்றாவது எதையாவது கிறுக்கிட வேண்டும்!!!

24 மணி நேரத்தில் தனிமை கிடைக்கும் ஒரு இரண்டு நிமிடத்தில் என் மூளை இவ்வளவு மட்டுமே சிந்திக்க பக்குவப்பட்டுள்ளது. இன்னும் மூளை வளர்ச்சி அடைய வேண்டும் போலும் 

Tuesday, December 18, 2012

இந்த உலகம் அழிந்தால்தான் என்ன??


மாயன் காலண்டர் டிசம்பர் 21 ஆம் தேதியோடு நிறைவுற்று உலகை பயமுறுத்திக் கொண்டிருக்க, உலகம் ஏன் அழியக்கூடாது?? 

* லாண்டரிக்கு போட்ட துணியெல்லாம் வர்ற 26 ஆம் தேதிதான் டெலிவரி 

புதுசா ஹமாம் சோப்பும், பேட்டா செருப்பும் வாங்கி ஒரு வாரம் கூட ஆகல 

* எதுத்த வீட்ல தெத்துப்பல் பானுமதி  என்னை திரும்பி பார்க்க ஆரம்பிச்சு 4 நாள்தான் ஆகுது 

* 26 தான் என்னோட சம்பள தேதி 

* எப்போது வேண்டுமானாலும் என்னை கடித்துவிடும் அபாயத்திலிருந்த எங்கள் தெரு நாய்க்கு ஒரு வாரமாய் பிஸ்கட் வாங்கிப் போட்டு இப்போதான் கரக்ட் செஞ்சிருக்கேன் 

* காஃபி பொடி தீர்ந்து போக குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் 

* புது வீடு மாற அட்வான்ஸ் கொடுத்துட்டேன் திருப்பிக் கேட்டா வெலக்குமாத்துலையெ அடிப்பான் 

* புதிதாக கவிதை எழுதத் தொடங்கி இருக்கிறேன் அது புத்தகமாகி வெளிவரும் வரை நீங்கள் இருக்கணுமே (எப்படியும் படித்த பின் இல்லாமல் போய் விடுவீர்கள்)

* புதிதாக எங்க ஊர்ல ரோடு போட்டிருக்கிறார்கள், ரோடு அழிய இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகலாம்

* மனைவி ஊருக்கு போயிருக்கிறாள் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் 

* கடல் படம் இன்னும் ரலீஸ் ஆகல தீவிர ராதா ரசிகனான நான், ராதாவோட ரெண்டாவது பொன்னையும் பாத்துட்டா ஜென்ம சாபல்யம் அடைந்சுடுவேன் 

* இன்னும் தேமுதிகவின் அனைத்து எம் எல் ஏக்களும் அம்மா கூட நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை 

* சென்னையின் மெட்ரோ ட்ரைன் ப்ராஜெக்ட் இன்னும் முடியல 

* நயன்தாராவோட அடுத்த காதலன் யாருன்னு இன்னும் தெளிவா தெரியல 

* இன்னும் ஒருவாட்டி கூட சாகல...

* ரஜினியோட அடுத்த படத்தோட ஹீரோயின் எந்த ஹாஸ்பிட்டல்ல பிறக்கும்னு தெரியல 

* பிரபுவோட புரட்சி போராட்டம் இன்னும் மிச்சம் இருக்கு 

இதே போன்ற காரணங்கள் நிறையவே இருக்கின்றன ஏன் உலகம் அழியக்கூடாது என்பதற்கு, அழிந்தால்தால்தான் என்ன?? என்ற கேள்விக்கு தவணை பணம், கொசுத் தொல்லை, பவர் கட் போன்ற சின்ன சின்ன காரணங்கள் இருந்தாலும், எனக்கு இருக்கும் ஒரே காரணம் மச்சினிச்சிக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி விட்டது 

இந்த உலகம் அழிந்தால்தான் என்ன??





Tuesday, December 11, 2012

ரஜினி! ரஜினி!! ரஜினி!!!


இன்னும் ரசிகர்களுக்கு கல்யாண விருந்து தராமலிருப்பது, ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனையில் அடித்த பல்டி, கர்நாடக்காவில் சொத்து, அரசியல் கண்ணாமூச்சி, இது போன்ற ரஜினி மீதான விமர்சனங்கள் எண்ணிலடங்காதவை இதோடு சேர்த்து இதே போன்ற விமர்சனகள்  அவர் மேல் எனக்கும் உண்டு. அதை எழுதுவதற்கு, இன்று அதற்கான நாளுமல்ல அவசியமும் அல்ல. ரஜினியை ரசிப்பவர்கள் மேலே படியுங்கள், ரஜினியை ரசிக்காதவர்கள் நிச்சியம் மேலே படியிங்கள்.....

ரஜினியினால் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை தன போல் மாற்ற முடிகிறது என்பதை யாரலும் மறுக்கவியலாது. உதாரணமாக, ரஜினி கிழிந்த பேன்ட் போட்டு நடித்தால் தமிழ் நாடே கிழிந்த துணியை ஃபேஷன் ஆக்கிவிடும், ரஜினி ஹேர் கலரிங் செய்தால், கருமையான முடி அவமானமாக கருதப்பட்டுவிடும். ரஜினியினால் மட்டுமே மேலே கோட்டும் கீழே கிழிந்த பேண்ட்டும் அணிந்து அதையும் ரசிக்க வைக்க முடியும். ரஜினி திரையில் செய்யும் கோமாளித்தனங்கள் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன் உண்மையில் கொண்டாடப்பட்டது. ரஜினி வாயாலேயே சொன்ன ரஜினிக்கு பிடித்த படம், "முள்ளும் மலரும்" அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த 'காளி' என்ற கதாபாத்திரத்த்தை ரஜினி செய்த பின் ரஜினியை தவிர்த்து வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் பொருத்தி பார்க்கவே முடியாது ஏன் அப்படி செய்வது பாவமும் கூட. ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் ரஜினி எதார்த்தமாக வெளிப்பட்டு இருப்பார்... எங்கேயோ கேட்ட குரல் படத்தில் அமைதியாக பேசி அமைதியாகவே கோபப்படும் ரஜினி முற்றிலும் வேறொரு அனுபவம். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி முளுத்திறனும் வெளிப்படுத்தக் கூடியவர்தான் என்றாலும் வர்த்தகத்தால் மட்டுமே சூழ்ந்த இவ்வுலகம் ரஜினியை ஒரே மாதிரியான காதாபாத்திரத்தையே திரும்ப திரும்ப செய்ய வைத்தது. ரஜினி செய்யவியலாத அல்லது செய்யாமல் தவிர்த்த கதாபாத்திரங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ரஜினி முதன்முதலில் தயாரித்த மாவீரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியின் கை கால்கள் கட்டப்பட்டு இருக்கும், போதாக்குறைக்கு சவுக்கால் அடித்து சட்டையை வேறு கிழித்து விட்டிருப்பார்கள். வெறும் தலையை மட்டும் ஆட்டி முடியை சிலுப்பி கண்களை குறுக்கி நம் பார்வையை வேறெங்கும் செல்லவிடாமல் தன்பால் மட்டுமே ஈர்த்துக் கொள்ளும் ரஜினிக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாது ஈர்ப்பு சக்தி இருக்கிறதென்பதை மறுக்க முடியவில்லை

அந்த பாடலை காண இங்கே க்ளிக் செய்யவும் 

ஒரு ரஜினி ரசிகனாய் எனக்கு ரஜினியின் புதுக்கவிதை, குசேலன் மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் பிடிக்கவில்லை, அதிலும் எந்திரன் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை,  கதாநாயகியை வம்பிழுத்த ரவுடியை அடித்து நொறுக்காமல் பயந்தோடி பாடல் காட்சியில் பதுங்குவதும், கார்ட்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்த க்ளைமேக்ஸ் காட்சிகளும் முற்றிலும் வெறுப்படைய செய்தன..... ரஜினி படமெனில், ரஜினி ஏதோ ஒரு துரோகத்தையோ, சவாலையோ எதிர்கொள்ள வேண்டும் பின்னாளில் துரோகியை பழி தீர்த்து சவாலை வென்று எதிரியை வீழ்த்தி படம் முடியும் நேரத்தில் சந்தோசமாக சிரிக்கும் ரஜினியுன் முகத்தை பார்த்தே பழக்கப்பட்டுவிட்டோம், ரஜினி பற்றி எழுத இன்னும் நிறையவே இருக்கிறது நேரம் கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருப்பதால் இறுதியாக ஒன்றே ஒன்று என் மகள் ஆதிராவிற்கு வயது ஒன்று முடிந்து மூன்று மாதம் ஆகிறது அவளுக்கு ரஜினி பரிச்சியம் கிடையாது எந்த ஊடகத்திலும் பார்த்ததுமில்லை, ஆனால் எஜமான் படத்தில் ரஜினி தோளில் துண்டினை சுற்றி போடுவது போல் செய்து காட்டினால் கண் இமைக்காமல் பார்த்து கை தட்டி ரசித்து சிரிக்கிறாள் 

அதான் ரஜினி 

Monday, October 8, 2012

நம்பவா போறீங்க??!!



நான் சொல்லப்போவதை நிச்சியமாய் நம்ப மாட்டீர்கள் எனத் தெரிந்தும் நான் சொல்லாமல் விடப்போவதில்லை.

கல்லூரி முடித்து 2 வருடம் எங்கும் செல்லாமல் தண்டச்சோறு, வெட்டிப்பொழுது, பக்கத்து ஊரிலேயே வேலை என ஓடி விட்டது.  பின்னாளில் அப்பாவுடனான ஓர் அழகான சண்டைக்கு பிறகு நான் ஏறிய பஸ் என்னை கோயம்பத்தூரில் இறக்கியது. எவ்வளவு ரம்மியமான ஊர். படித்தது ஊட்டியில் என்பதால் கோவை எனக்கு முன்பே பரிச்சயம்தான். எப்போதும் மிதமான சீதோசன நிலை, ஐந்து மணிக்கெல்லாம் ஆவி பறக்க பரப்பப்படும் மெத்தென்ற  இட்லி, தித்திக்கும் சிறுவாணித் தண்ணீர், கெட்ட வார்த்தை பேசும்போது கூட 'ங்க' (நீங்க ஒரு முட்டாக் டேசுங்க) சேர்த்து மரியாதையாய் திட்டும் பண்பு, அகலமான சாலைகள், பரபரப்பான மனிதர்கள், எல்லாவற்றிற்கும் மேல் உலகின் மொத்த அழகான பெண்களும் கோவையில்தான் பிறப்பார்கள் அல்லது வசிப்பார்கள் எனச் சொல்லுமளவிற்கு கண்களை நிறைக்கும் வண்ண மயமான பெண்கள். கோவையில் எனக்கு பிடித்த முதல் மூன்று விஷயங்கள், பெண்கள்... பெண்கள்...... பெண்கள்........

வேலை தேடி வந்தவனை விதி துரத்தும்  என யார் கண்டது?? கோவையில்  ஒரு வாரத்தை உருட்டித் தள்ளியாகிவிட்டது வேலை கிடைத்தபாடில்லை. அலைச்சல் அதிகமிருப்பினும் சோர்வோ, அவநம்பிக்கையோ எட்டிப் பார்க்காமல் வைத்திருந்தது கோவை. 'கொடீஷியா' மைதானத்தில் கேம்பஸ் இன்டர்வியு என தகவல் சொன்னான் நண்பன் மணி. அங்கு செல்வதால் எனக்கு ஏற்படபோகும் பின் விளைவுகளை அவனோ நானோ அப்போது அறிந்திருக்கவில்லை. மைதானத்தை வந்தடைந்தாயிற்று, அங்கு கூடி இருப்பது பெரிய கூட்டம் எனச் சொல்லி சாதாரணமாக கடந்து விட முடியாதபடி பயங்கரமான கூட்டம். அம்மாடி வேலை தேடி வந்திருப்பவர்களின் எண்ணிக்கை கோவையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையை விட எப்படியும் 500  மடங்கு அதிகமிருக்கும் அவ்வளவு கூட்டம். அங்கிருக்கும் வரிசை கண்டவுடன் எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து அங்கிருந்தவர் யாரோ சோடா வாங்கி தெளித்து தெளியவைத்து வாசல் வரை வந்து வழியனுப்பினார். இக்கூட்டத்தில் எனக்கு வேலை கிடைக்காது எனினும் அந்த வரிசையில் நிற்கும் மனோதைரியம் இல்லாதால் பஸ் ஸ்டாப் வந்தடைந்தேன். அதோ தூரத்துல ஒரு பஸ் வருது பாருங்க அதுலதான் ஏறிக்க போறேன். அது உள்ளார நடந்த சில சம்பவங்களை சொல்லத்தான் உங்களை இவ்ளோ தூரம் கஷ்ட்டப் பட்டு அழச்சிட்டு வந்தேன். உள்ள போலாம் வாங்க.

எப்போதும் முன்பக்கம் ஏறி முன்பக்கமே இறங்க சொல்லி அம்மா அறிவுறுத்தியிருப்பதால் அவ்வாறே செய்தேன். பச் ஒரு பிகர் கூட இல்ல, என்னோட சீனியர் ஒருத்தன் இருந்தான் உள்ள. கண்ணை  பெருசாக்கி வியப்புக் குறி காட்டி சில நிமிட விசாரிப்பிற்கு பின் நண்பரகளுடன் அளவளாவுவதில் மூழ்கி விட்டான். நான் ஒரு கம்பி நோக்கி முன்னேறினேன், என் கையை ஏதோ தடுத்து நிறுத்த என்னவென்று பார்த்ததில் இன்னொரு கை அதை பிடித்திருந்தது, அப்படியே பேசவும் செய்தது அதுவும் பெண் குரலில்,

தம்பி இங்க உட்காருப்பா ......

சொன்ன அந்த பெண்மணிக்கு ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வயதிருக்கும், நல்ல கருப்பு (கருப்பில் என்ன, நல்ல கருப்பு கெட்ட கருப்பு) , வலது கையில் சிலுவை வடிவத்தை பச்சை குத்தியிருந்தாள், பொட்டில்லாத நெற்றி, ரத்தச் சிவப்பில் புடவை அணிந்திருந்தாள், சராசரியை விடக் குள்ளமானவள் என்பது அமர்ந்திருக்கும் நிலையிலேயே கூட தெரிந்தது. அவளின் உருண்டையான பழுப்பு நிறக் கண்கள்தான் சற்று பயம் காட்டியது. பயம் மறைத்து அவள் அருகில் அமர்ந்தேன் 

என் சீனியரை சுட்டிக் காட்டி சொன்னால், அந்தா.... அவன மட்டும் நம்பவே நம்பாத எம காதகன்.... 

இதை எதற்காக என்னிடம் சொல்கிறாள் என்பது தெரியவில்லை இருந்தாலும் அவனை ஆரம்பத்திலிருந்தே எனக்கு தெரியும் அவன் யாரின் நம்பிக்கைக்கும் உரியவன் அல்ல, அவன நம்பி ஒரு 500 ரூவா கடன் வாங்கலாம்னு இருந்தேன் நீங்க சொல்லிட்டீங்கல்ல இனிம்மே நம்ப மாட்டேன் ...

உதடு வலிக்காமல் சிரித்தாள், உங்க அப்பா பேரு, திருப்பதி பகவானோட ஏதோ ஒரு பேராத்தான் இருக்கணும் நான் சொல்றது சரியா??

எப்படி சொல்கிறாள் சும்மா அடிச்சு விடுகிறாளோ, ஆமாங்க R V பெருமாள்  எங்க அப்பா பேரு....

உங்ககூட பிறந்தவங்க மொத்தம் மூணு பேரு அதுல  ஒன்னு பொண்ணு சரியா??

அம்மா ரேசன் காரடை ஏதும் தொலைத்து விட்டாளா சரியாக சொல்லுகிறாளே, ஆமா கரக்ட்டா சொல்லிட்டீங்களே.... நீங்க ஏதாவது ஜோசியக்காரங்களா...

மீண்டும் உதடு வலிக்காமல் சிரித்தாள்,  இல்ல ஆனா உன் முகத்த பாத்தன்னே சில விஷயம் சொல்லனும்னு தோனுச்சு ...

இந்த மூஞ்சிய பாத்தா கண்டிப்பா தோணுங்க, முகத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேன் முக்கியமாய் நெற்றியை அதில்தான் நிறைய எழுதியிருக்கும் 

உன் பேரு என்ன தம்பி??

இவ்ளோ சொன்னவளுக்கு என் பெயர் தெரியாமல் விட்டதில் ஆச்சர்யமே, சொன்னேன். கேட்டவள் என் ராசி, நட்ச்சத்திரம், பிறந்த தேதி, நேரம் முதற்க் கொண்டு துல்லியமாகச் சொன்னாள். அப்போது எனக்கே என் ராசி நட்ச்சத்திரம் எல்லாம் தெரிந்திருக்கவில்லை. பேச்சு வாக்கில் உன் ராசி வீனஸ், உன் நட்சத்திரம் புளூட்டோ, உன்ன மார்ஸ் கெரகம் பிடிச்சு ஆட்டிட்டு இருக்குனு சொன்னாக்கூட நம்பியிருப்பேன். ஒரு வாரத்திற்கு முன் நான் அப்பாவிடம் போட்டிருந்த சண்டையைக் கூட தெரிந்து வைத்திருக்கிறாள்.

அப்பா கூட சண்டை போட்டு வேலை தேடி இங்க வந்தாச்சு, இன்னிக்கு உனக்கு வேலை கிடைச்சு இருக்காதே ...

அந்த நம்பிக்கை எனக்கே இருந்ததால உள்ளயே போகலைங்க ...

போயிருந்தாலும் கிடைச்சு இருக்காது நாளைக்கு போ எந்த கம்பனிக்கு வேணுனாலும் போ கண்டிப்பா வேலை கிடைக்கும்

எப்டி சொல்றீங்க?? சும்மா அடிச்சு விடாதீங்க..... 

தம்பி நான் எதுக்கு சும்மா அடிச்சு விடனும் ?? கண்டிப்பா உனக்கு நாளைக்கு வேலை கிடைக்கும் நம்பு..

சிரித்து வைத்தேன். 

இன்னும் நமபல போல என்ன சொன்னா நம்புவீங்க தம்பி.... ம்ம் உங்க இடது தொடைல கடுகளவுல ரெண்டு மச்சம் இருக்கு சரியா??

தூக்கி வாரிப்போட்டது எனக்கு, அவசரமாக கிளம்பும்போது பேன்ட் போடாமல் வந்துவிட்டேனா இல்லையே போட்டிருக்கேனே இந்த மாதிரி சமயத்திற்கென்றே தைக்கப்பட்ட கருநீலக் கலர் பேன்ட்,

எதுக்குனே தெரியாம அங்க ரெண்டு மச்சம் இருக்குங்க... ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்டி?? நீங்க??, 

பயமும் பரவசமும் கவ்விக்கொண்டது என்னை. இவள் பாட்டுக்கு ஒரு பிளாஸ்பேக் எடுத்துவிடுவாளோ சுமார் 20 வருசத்துக்கு முன்னாடின்னு ஆரம்பிச்சு என் தாத்தா செய்த அத்துணை அக்கிரமங்களையும் சொல்லப் போகிறாள் பச் அப்டி எதுவும் நடக்கவில்லை.

ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்தாள், தம்பி நான் சொல்றத கேளு நான் உன்ன பாக்கத்தான் வந்தேன். உன்ன எனக்கு ரொம்ப வருசமா தெரியும். உனக்கு...... என ஆரம்பித்து அவள் சொன்னது அத்தனையும் அழகான ஆச்சர்யங்கள் மெலிதான புன்னகை துணை கொண்டு எவ்வளவு வலிமையான விஷயங்கள் பேசுகிறாள். என்னைப் பற்றி எல்லாம் சொன்னாள். எந்தக் குறுக்கு கேள்வியும் கேட்காமல் கவனிக்க மட்டுமே செய்தேன் அவ்வளவு ஏன் எனக்கு பின்னாளில், பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் வரை சொன்னாள் ஓர் நம்ப முடியாத பயணம்தான் 

கடைசியாக கேட்டேன், உங்க பேர் என்னங்க???

என்ன தம்பி கேட்ட பேரா??? பேருல என்ன தம்பி இருக்கு??? அந்த பாப்பா பாரு எவ்ளோ அழகா இருக்கு 

அவள் சுட்டிக்காட்டிய திசை பார்த்தேன் அழகான குழந்தை. குழந்தை என்பதே அழகுதானே இதிலென்ன அழகான குழந்தை.... எதேச்சையாய் இருப்பினும் அக்குழந்தையின் அந்த நேரத்து சிரிப்பு ஏதோ ஒன்றைக் குறிப்பால் உணர்த்துவது போல் இருந்தது. குழந்தை நோக்கி சின்னதாய் புன்னைகைத்து விட்டு திரும்பினேன். என் அருகில் அந்த பெண்மணி அமர்ந்திருந்த ஜன்னல் ஓர இருக்கையில் இப்போதிருந்தது ஓர் வெற்றிடம். ஆம் அவளை அங்கு காணவில்லை. எனக்கு தேடித் பார்க்கவும் மனமில்லை

நம்பவா போறீங்க??!!

Sunday, September 23, 2012

ஒரு ப்ளேட் பிரியாணியும், ஒரு (சைடு) ப்ளேட் காதலும்

அவளுடனான சந்திப்பு நிகழ்ந்தது ஒரு பயணத்தில். பயண சந்திப்பில், எழுதும் அளவிற்கு விஷயம் உண்டெனில் அது ரயில் பயணம்தானே. இதுவும் ஒரு ரயில் பயணம்தான். எதிரில் அமர்ந்து குமுதம் படித்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியை மாருதி வரைந்திருந்தால், எனக்கு வர்ணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அப்படியான ஒரு மாருதி வரையும் பெண்ணின் ஓவியம் போல் இருந்தாள். வட்டமான முகம் மாநிறத்துக்கு கொஞ்சம் மேல், கீழ் உதடுக்கு கீழே வலது புறமா சற்றே பெரிய அளவிலான மச்சம் ஒன்றிருந்தது. அது மச்சமாகவும் இருக்கலாம், மருவாகவும் இருக்கலாம். யார் கண்டது அவள் அழகின் ஒரு மிச்சமாகக் கூட இருக்கலாம். கொஞ்சம் பூசின மாதிரியான உடலைப்பில், சரியான அளவிலான அங்கங்களை பெற்றிருந்தாள். பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள், நெற்றியில் சின்னதாய் வட்டமாய் ரத்த நிறத்தில் ஒரு பொட்டு, தலைமுடி நெற்றியில் இருந்தே ஆரம்பித்து இருந்தது அதனை இழுத்துப் பிடித்து ஒற்றைப் பின்னலில் அடக்கி இருந்தாள். எத்தனை நேரம்தான் அவளை பார்த்துக்கொண்டே இருப்பது ரயிலைப்போல் கதையும் நகர வேண்டுமே... ஒரு சிறிய கனைப்பைச் சிந்தி இருப்பை காட்டிக்கொண்டு மெல்லமாக ஆரம்பித்தேன். 

எங்க, இது எந்த ஊரு நீங்க?

புத்தகத்திலிருந்து கண்ணை வெளியே எடுத்து சரியாக அரை வினாடி என்னைப் பார்த்தாள். என்ன நினைத்தாலென்பது அறிய முடியவில்லை. மீண்டும் புததகத்தினுள் தலை விட்டுக்கொண்டே சொன்னாள்,

இறங்கின பின்னாடி, பின்னாடிய வாங்க வீடு வரைக்கும் தெரிஞ்சுக்கலாம்...

ஓ கண்டிப்பா வர்றேன், வேற ஏதாவது புக் இருக்கா??

இருக்கு, உங்களுக்கு தர்ற மாதிரி ஏதும் ஐடியா இல்ல ...

வேற என்ன மாதிரி ஐடியா வச்சுரிக்கீங்க??

.........

ஹலோ உங்களத்தாங்க ...

உங்களுக்கு இப்ப என்னங்க வேணும்? கொஞ்ச நேரம் அனத்தாம வாங்களேன்.....

புக் ஏதும் இருக்கானு கேட்டேன் இல்லைன்னு சொல்லிட்டீங்க, சாப்ட ஏது வச்சுருக்கீங்க?? பிஸ்கட் பழம் இந்த மாறி

..................

தனியாவா போறீங்க திண்டுக்கல் வரைக்கும்....

இந்தக் கேள்வி அவளுக்கு ஒரு தற்காலிக பதற்றத்தை தந்திருக்க வேண்டும்

அட... நான் திண்டுக்கல்னு எப்டி கண்டு பிடிச்சீங்க???

ஒ நீங்க திண்டுக்கலா?? இதெல்லாம்  முல்லா  காலத்து டெக்னிக் பிரியா....

என் பேரு ப்ரியா இல்ல "அபர்ணா"

ஒ... பேரு நல்லா இருக்கு யாரு வச்சாங்க??

தெரிஞ்சுகிட்டு, என்ன செய்ய போறீங்க??

ஆமால... என் பேரு இந்திரன்

உங்க முகத்துக்கும் இந்த பேருக்கும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்ல...

ஒட்டுதோ இல்லையோ இதுதான் என் பேரு......

சும்மா சொன்னேன், நீங்க எந்த ஊரு??

நானும் திண்டுக்கல்தான்..  எங்க படிச்சீங்க??

இம்மாதிரியாக தொடர்ந்த உரையாடலில், அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டாள். வாயைத்தான் மூட மறந்துவிட்டாள். ஊர் வந்து சேரும்வரை உரையாடலை நிறுத்த மனமில்லாமல் பேசிக்கொண்டே வந்தோம். அவ்வப்போது இடையூறு செய்த மௌனங்களையும் சட்டென்று உடைக்க ஏதோவொரு ஜன்னல் வழிக் காட்சி துணை புரிந்தது. அருகில் இருந்த ஆட்களையெல்லாம் கவனித்து எங்கள் பேச்சின் சுவாரஸ்யத்தை போக்கிக்கொள்ள இருவருமே விரும்பவில்லை. அப்படி ஒன்றும்  சுவாரஸ்யமான பெண் இல்லைதான் என்றாலும் பெண் என்ற ஒற்றைத் தகுதி போதாதா, நமக்கு சுவாரஸ்யம் ஏற்ப்பட! ஆனது ஆகட்டுமென கேட்டே விட்டேன்.

உங்க நம்பர் என்ன?

இதற்காகவே காத்திருந்ததுபோல் மடமடவென அவள் நம்பரை ஒப்பித்துவிட்டு மறக்காமல் மிஸ்ட் கால் தரச் சொல்லி என் நம்பரையும் பத்திரப் படுத்திகொண்டாள். அடுத்து வந்த நாட்களில் கால், எஸ்எம்எஸ் என 24 மணி நேரத்தில் கணிசமான நேரத்தையும் பணத்தையும் அந்த நம்பருக்கு செலவழிக்க வேண்டியிருந்தது. சில நாட்கள் கடந்த பின் மீண்டும் அவள் சென்னை செல்வதாய் இருந்தது. மாதம் 25,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அவளுக்கு அங்கே வேலையிருக்கிறது செல்கிறாள். அப்போதுதான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஊர் சுத்திக் கொண்டிருக்கும் சென்னை செல்ல எனக்கென்ன வந்தது, ஆனாலும் சென்றேன். ஒரு பெண் அழைக்கிறாள், தவிர்த்துவிட எந்த மடையனுக்கு ஒவ்வும்.

அவள், நீயும் வாயேன் சென்னை வரைக்கும்..

வந்து என்ன செய்றது? என்ட்ட தம்மடிக்க கூட காசில்ல.. இதுல சென்னையாம் போடி..

அடப்பாவி, எரும மாடு நீ சிகரட் பிடிப்பியா?

ஹ்ம் பிடிப்பேன் ஆனா காசில்லாத போது பிடிக்கிறதில்ல...

மொதல்ல அந்தக் கருமத்த விட்டுத் தொல அந்த வாடை வந்தாலே எனக்கு குமட்டிட்டு வரும் உவ்வே...

சரி கெடக்குது... நீ எப்போ சென்னை போற?

வர்ற  பன்னெண்டாந்தெதி, நீயும் வா நான் டிக்கட் புக் பண்ணிடுறேன்... பழைய துணிக்கு பாத்திரம் விக்கிறவனாட்டம் எங்கயாவது ஊர் சுத்த போய்த் தொலைச்சுறாத

நீங்க, வாங்க, போங்க என்ற மரியாதையான வார்த்தைகள் மறைந்து, போடா, போடி, எரும, லூஸு என்ற ஆர்மார்த்தமான வார்த்தைகளுக்குள் அழகாக சிக்கிக் கொண்டோம்.

சென்னை செல்ல முடிவெடுத்தாகி விட்டது. அரசு குளிர்சாதன பேருந்தில் டிக்கட் புக் செய்திருந்தாள். அவள் வீட்டிலிருந்து வழியனுப்ப பெருங்கூட்டமொன்று வருமென நம்பியிர்ந்த எனக்கு, தனியாக ஒற்றை பைய்யோடு அவள் நடந்து வந்தது அதிசியமாயிருந்தது. இதில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம் இரண்டு வாரம் முன் பார்த்த ஒருத்தி எந்த சம்பந்தமும் இல்லாமல் பழக ஆரம்பித்து, அவளுடன் தனிமையில் ஒரு பயணம் அதுவும் இரவில். பசி வேறு எடுக்கிறது.

சாப்டியா?, வயிற்றில்தான் பசிக்கிறது என்றாலும் முகம் காட்டிக் கொடுத்துவிடும் போல

இன்னும் இல்ல எப்டியும் நீ வாங்கி தருவேன்னு தெரியும் அதான் மத்தியானத்து இருந்து சாப்டாமலே இருக்கேன்.

அய்யே மூஞ்சிய பாரு... சரி வா சாப்ட்டு வல்லாம், இன்னும் டைம் இருக்கு

மணி அப்போது இரவு ஒன்பது இன்னும் 45 நிமிடம் இருந்தது. நடக்க ஆரம்பித்தோம், வழக்கத்திற்கு மாறாக ரொம்பவே அமைதியாக இருந்தாள். பஸ் ஸ்டேன்ட்டிலும் பெரிதாக கூட்டமில்லை. எதிர்ப்படும் ஒரு சில பிச்சைக் காரர்கள் தவிர்த்து பயணிகளும் சொற்பமே. பாப்பாவுக்கு "பூ" வாங்கிக் கொடுப்பா என்ற ஒரு பூக்கார பாட்டி பூவினை நீட்டியவாறே சொல்ல, நான் அவளிடம், "வேணுமா" என்பது போல் பார்த்தேன். அவள் 'வேண்டாம்' என பார்வையிலேயே மறுத்துவிட்டு நகர்ந்தாள். தம்மடிக்கவே காசில்லாத உன்னிடமேல்லாம் பூ வாங்கித் தரவா காசிருக்கப் போகிறது என நினைத்திருப்பாளோ என்னவோ. எதையோ சிந்தித்தவாறே வந்து கொண்டிருந்த அவளின் பேரமைதி எனக்கு அந்நியமாய் பட்டது. தலைக்கு என்ன ஷாம்பூ யுஸ் பண்ற? பச்சை மிளகாய விட சிகப்பு மிளகா கொஞ்சம் காரம் ஜாஸ்த்திதான் இப்டி ஏதேதோ பேசி அவளை திசை திருப்ப முயன்று தோற்றேன். சாப்பிட்டு வருவதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. அவசரமாய் போய் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். மீண்டும் அவள் முகத்தில் பழைய மின்னல் தெறித்தது. இந்தமுறை படிப்பதற்கென்று புத்தகம் எதுவும் அவள் வாங்கிக் கொள்ளவில்லை. ஜன்னல் ஓர இருக்கையில்லாமல்தான் இவ்வளவு நேரம் இத்தனை இறுக்கமாக இருந்தாளா அல்லது ஜன்னல் இருக்கை அவளுக்கு பழைய உற்சாகத்தை அளித்ததா என்பது பற்றி தெரியவில்லை. அவள் கண்களில் பளிச்சென சில மின்னல்கள் அவ்வப்போது மின்னிக் கொண்டிருந்ததை கவனித்தேன். அவளை பேச விட்டு வேடிக்கை பார்ப்பது நன்றாக இருந்தது. புதிதாக ஒன்றும் பேசவில்லைஎனினும், பெண்கள் பேசும்போது அவர்களின் கைகள், கண்கள் ஒவ்வொன்றையும் பார்த்து ரசிப்பது எவ்வளவு சுகமானதென்பது ஆண்களுக்கு மட்டுமே தெரியும்.   சிறிது சிறிதாக சத்தம் குறைத்து இறுதியில் ஹஸ்கி குரலில் அவள் பேசியது அழகான ஹைக்கூ. புரியாத எதையும் நான் ஹைக்கூ எனவே கொள்வது வழக்கம்.

திருச்சி தாண்டி இருந்தோம். வழியில் நிறுத்தும் போது நான் மட்டும் இறங்கி ஒரு வில்ஸ் பற்றவைத்து அடித்துப் பின் வாயில் ஹால்ஸ் போட்டுவிட்டு வந்தேன். மோப்ப சக்தியில் மிதமிஞ்சிய திறமை கொண்டவள் போல உடனே கண்டுபிடித்துவிட்டாள். அடுத்தமுறை பாஸ் பாஸ் போட்டுக் கொள்ளவேண்டும். சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கிப் போனாள். என் தோளில் வெகு சகஜமாய் சாய்ந்து படுத்திருந்தாள். எனக்கு தூக்கம் வரவில்லை. சிறிது நேரத்தில் அவள், தலையை என் தோளில் மெல்ல அழுத்தி ஒரு மாதிரி ஆட்டிக் கொண்டே தோளில் இருந்து முன்னேறி என் கன்னம் வரை வந்து விட்டாள். பின் அவள் மூக்கு நுனியால் கன்னத்தில் இட வலமாக தேய்த்துவிட்டு மீண்டும் தூங்கிபோனாள். இதை அவள் தூக்கத்தில் செய்தது போல் தோன்றவில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாள். மெல்லிய மிக மெல்லிய புன்னகையொன்று இருந்தது. மெல்ல மெல்ல இன்னும் அழகாகிக் கொண்டே இருக்கிறாள். திடீரென முதுகில் ஒரு மாதிரி ஊர்ந்தது. காதல் எதுவும் வந்துவிட்டதா எனக்கு? அதற்கு வயிற்றில்தானே பட்டாம்பூச்சியோ, மண் புழுவோ ஊறவேண்டும்? இது என்ன முதுகில்? அவளை தொந்தரவு செய்யாமல் நானே நெளிந்து முதுகை கூடுமானவரை சோதனையிட்டதில் மூட்டைப்பூச்சி கடித்திருப்பதை உணர்ந்தேன். இனிமேல் உடலில் என்கேநுண் திடீரென ஊர்ந்தால் காதல் மட்டுமல்ல மூட்டைப்பூச்சி கூட வந்திருக்கலாம் என்பதை அறிந்துகொண்டேன். அண்டே இருந்தன. அடிபட்ட பாம்பு போல் நான் கொஞ்சம் நெளிந்து கொண்
வள் குறும்புகளும் சின்ன சின்ன உரசல்களும் சென்னை வரை தொடர்ந்து கொடேதான் பயணம் செய்து கொண்டிருந்தேன். 

சென்னையில் விடிந்து விட்டிருந்தது. என் தம்பி எனக்காக காத்திருந்தான், அவளுக்கு யாரும் காத்திருக்கவில்லை. பழகிய சென்னையில், அனாசியமாய் புகுந்து  டாட்டா காட்டி விட்டு ஒரு பேருந்தேறி அந்தக் கூட்டத்தில் கலந்தாள். ஒரு வாரம் நான் சென்னையில்தான் இருந்தேன். வர்ற புதன் கிழமை ஆபிஸ் லீவுதான் வர்றியா ?? லஞ்ச முடிச்சுட்டு போலாம் என்றாள். பிரியாணி  என்றால் வருவதாய் சொன்னேன்.

சென்னையில் பைக் ஓட்டுவது கணக்கு பரீட்சை எழுதுவது போல் ரொம்பவே கடினமாக இருந்தது. பூந்த மல்லியிளிருந்து  இரண்டு மணிக்கு கெளம்பி வேளச்சேரி வந்து சேர்வதற்குள், மணி மூன்றாகி விட்டிருந்தது. பின் அவள் இருப்பிடம் அடையாளம் தேடி அலைந்து, அடித்த வெயிலில் நான் சற்றுக் கருகி போய்விட்டேன், சந்தனக் கலர் சுடிதார் அவளுக்கு அவ்வளவு எடுப்பாய் இல்லை. சரியான பசி என்பதால், இப்போதைக்கு அவளை என்னால் வர்ணிக்கவும் முடியவில்லை. 

இதுதான் ரெண்டு மணியா?? என்றாள். வார்த்தைகளில் கோபம் காட்ட முயன்றவள் கண்களில் தோற்றுப்போனாள்.

வா ஹோட்டல் உள்ள போயிட்டு பேசிக்கலாம், என்றேன் அவசரமாக. என் பசி எனக்கு. கொஞ்சம் பணக்காரத்தனமான ஹோட்டல். இங்கும் ஏ சி. மூட்டை பூச்சி இல்லாமல் இருக்க வேண்டும் முதுகில் குறுகுறுத்தால் காதல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. எதிரெதிரே அமர்ந்து கொண்டோம். கொஞ்சம் அதிகப்படியான மேக் அப்புடன் இருந்தாள். அவள் கண்கள் ஒரு பரவசத்தையோ, பிரளத்தையோ, பிரியானியையோ எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. என் பாக்கெட்டில் மூன்று ரூபாய் இருக்கிறது. வரும்போதே ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன். திரும்ப போகும்போது அதே கடையில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்துக் கொள்ளவேண்டும். தடவிப் பார்த்துக் கொண்டேன். 

அவள் மெனு கார்டை புரட்டிக்கொண்டே, என்ன சாப்டுற???

ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி, ஒரு  பெப்பர்  மட்டன் போதும்.  உனக்கு??

எனக்கு ரெண்டு சப்பாத்தி போதும். என்றவள், தொடர்ந்தாள்.

இந்த டைம்ல வந்திருக்கோம் மணி மூன்ற ஆவுது எப்டியும் ஆறிப் போய்தான் இருக்கும் நீதான் லேட் பண்ணிட்ட பன்னி

சரி விடு எப்டியும் இன்னொருவாட்டி பிரியாணி வாங்கித்தர்றேன் வான்னு சொல்லாமலா போய்டுவ... அப்ப சரியான டைம்க்கு வந்துடுறேன்.

பிரியாணியும் சப்பாத்தியும் ஒரே சேர வந்தது. எனக்கிருந்த பசியில் சடாரென கைகளை சுறுசுறுப்பாக்கி பிரயாணி மேல் பாயத் துவங்கினேன். அவளும் அதை ரசித்திருக்க வேண்டும். மெதுவாடா யாரும் வந்து அத பிடுங்கி தின்னுடா மாட்டாங்க பொறுமையா சாப்டு, தொடர்ந்தாள்

இந்திரா, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, உன்ன காதலிக்க தோணுது, உன்ன கல்யாணம் செய்துக்க தோணுது, எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நீ என்ன சொல்ற???

சொல்லியே விட்டாள். அவள் கண்களில் ஆகப்பெரும் தன்னம்பிக்கை தெரிந்தது. படபடப்போ, பதற்றமோ எதுவும் இல்லை அவளிடம். மிகத் தெளிவான முகத்துடன் இதைச் சொன்னாள். சின்ன ஆர்வமும் மிகக் கொஞ்சமான வெட்கத்தையும் அவள் இயல்பையும் தாண்டி வெளிப்படுத்தியிருந்தாள். என் ப்ளேட்டுக்கும் வாய்க்கும் இடையில் இருந்த கையில் கொஞ்சமாய் பிரியாணி வைத்திருந்தேன். அதில்தான் இந்த காதல் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான், இல்லை அதுபோலெல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லப் போய் அவள் பாட்டுக்கு கோபித்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டால், என்னிடம் இருப்பது மூன்று ரூபாய், வெறும் மூன்று ரூபாய் அதுவும் வில்ஸ் அடிப்பதற்கு, வண்டியில் கொஞ்சம் பெட்ரோல் அவ்வளவே என்ன சொல்வது, என்ன செய்வது.....

சில்லென்று இருந்த பிரியாணியை தடவிக் கொண்டே சொன்னேன்,

பிரியாணி ஆறிடும்... சாப்ட்டு முடிச்சுட்டு சொல்றேனே...