Monday, May 27, 2013

காந்தியை சுட்டவன் கோட்சே அல்ல !

ரஜினி படங்களில் ஏதோ காட்சியில் எப்படியாவது இடம் பெற்றுவிடும் பாம்புகள், என் கனவுகளையும் விட்டு வைத்ததில்லை. உறக்கத்தில் நான் கண்ட கனவுகளில் அதிகமாய் இடம்பெற்றது பாம்புகளே. ஆண்களின் அதுவும் வயதிற்கு வந்த ஆண்களின் கனவுகளில் பாம்புகள் வருவதற்கான உளவியல் காரணங்கள் சுவாரஸ்யமானவை. என் கனவுகளில் வரும் வித விதமான பாம்புகளை உங்களால் ஜூவிலோ, காட்டிலோ, டிஸ்கவரி சேனலிலோ கூட பார்த்திருக்க முடியாது. பெரும்பாலும் ஐந்தடிக்கும் குறைந்த உயரமுள்ள பாம்புகளே வரும், மஞ்சள் நிறத்தில் சிகப்பு புள்ளி வைத்திருக்கும் ராமராஜன் சட்டை கலர் பாம்புகளை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாள் என் கனவிற்குள் எட்டிப் பாருங்கள் பார்க்கலாம். வரும் பாம்புகள் சும்மாவா இருக்குமென்கிறீர்கள்? என் முழங்காலுக்கு கீழான சதை பகுதியை பாம்பொன்று தன் கூறிய பற்களால் ஆம் பற்களால்தான், கவ்விப் பிடித்துக் கொண்டது நான் அதன் வாலை பிடித்து இழுத்ததில், நேர்கோடு போலான சர்ப்பம் இன்னும் இறுக்கமாக கவ்விப்பிடிக்க, பதறி எழுந்தேன். போர்வைக்குள்ளே, கட்டிலின் அடியே எங்கோ பாம்பொன்று ஊர்ந்து கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை. ஒவ்வொரு இரவிலும் பாம்புகளின்  ராஜ்ஜியம்தான். திருமணத்திற்கு பிறகு பாம்புகள் கனவுகளில் வருவதை தவிர்த்துவிட்டன ஏனென தெரியவில்லை.

பொதுவாக கனவுகள் ஏன் வருகின்றன என்கிற அறிவியல் உண்மையை எல்லாம் அறிய எனக்கு ஆர்வமில்லை. வரும் கனவுகளை ரசிக்கவே எனக்கு நேரம் போதுமானதாய் இல்லை. ஒரு நடிகை கூட என் கனவுகளில் வந்ததே இல்லை. ராதா மட்டும் கேட்டிருந்தால், என் கற்பைக் கூட அர்பணிக்க தயாராயிருந்தேன் அப்பேற்பட்ட ராதா கூட வந்ததில்லை, ஆனால் நிறைய பெண்கள் வந்ததுண்டு. கனவில் வந்த எல்லா பெண்களுமே ஒரு தேவதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றவர்களாய் இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.  ஒருமுறை என் மனைவியும் முன்னாள் காதலியும் ஒருசேர வந்தார்கள், காதலி கனிவான கண்களை அப்போதும் வைத்திருந்தாள், மனைவிக்கும் அழகான கருணை மிகு கண்கள்தான் ஏனோ அவ்விடத்தில் அவ்வளவு சாந்தமாக இருந்திருக்கவில்லை. எட்டாவது படிக்கும்போது கேராளாவில் பார்த்த இடது நெற்றியோரத்தில் தழும்பும், ஆண்பிள்ளை போன்ற நெற்றியில் பட்டுத் தெறிக்கும் கூந்தலும் பெற்றிருந்த அந்த பெண் அடிக்கடி கனவில் வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள், தற்போது யார் அவளிடம் துன்புறுகிறார்களோ..... அந்த ஊரின் பெயர், தாடிக்கொம்பு என நினைக்கிறேன் அவ்வூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும்போது பார்த்த அந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த, நீள மூக்கும் அமுங்கிய நெற்றியும், குவிந்த உதடுகளும் பெற்றிருந்த பெண்ணொருத்தி, என் மனைவிக்கு தெரியாமல் இன்றும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. பெண்களால் நிறைந்த கனவுகளை, கலைக்கும் துஷ்ட செயல் புரியும் யாராயிருப்பினும் அவர்களுக்கு இந்த மண்ணில் கருணையே வழங்கக் கூடாது.

நாய் ஒன்று குரைத்ததோடில்லாமல், பாய்ந்தோடி வந்து என்னைக் கடித்தும் வைத்துவிட்டது கனவில்தான். என் போல நாய்களுக்கு பயந்தவனை உங்களால் எங்குமே பார்க்க முடியாது. நான் நாய்களுக்கு பயப்படுவேன் என்பது என்னை விட நாய்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதுதான் என் ஆச்சர்யம், கோவையில் வசித்தபோது, உருவத்தில் வீட்டில் வளர்க்கும் முயல் அளவே இருக்கும் நாயொன்று துரத்தி வந்ததில் கேட்டில் லுங்கி மாட்டி சர்ரென கிழிந்து தொடை வரை வெளியில் தெரிந்துவிட்டது. அந்த என் கவர்ச்சி காட்சியை யாருமே பார்க்கவில்லை என்பது மட்டுமே ஆறுதல். கனவில் கடித்த நாயினை பற்றி பாட்டியிடம் கூறி, பலன் என்னவென்று வினவியதில் யாரிடமும் அதிகம் பேசாதே என்றார். அன்றிலிருந்து எந்த நாயும் கனவில் வந்து என்னை கடிக்கவில்லை. ஆனால் நிஜத்தில் நான் நிறையவே பேசுவதால், மனிதர்கள்தான் நாய் போல் கடிக்கிறார்கள். இறக்கை இல்லாத எருமையொன்று என்னை தூக்கிச் சென்று, நடு வானில் கீழே வீசியே கனவுக்கும் அடுத்த நாளே எனக்கு நேர்ந்த ஆக்சிடெண்டுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.

பாலைவனத்தில் பூக்கள் பூப்பது, சுதா ரகுநாதன் நம் வீட்டு ஹாலில் கண்ணன் பாட்டு பாடுவது, இந்திய கிரிக்கட் அணியில் ஒன் டவுன் இறங்கி பிரட் லீ பந்தை சிக்ஸருக்கு பறக்க விடுவது, அன்னா கோர்னிகோவா என் லட்சிய புருஷன் இவன்தான் என நம்மை கை காட்டுவது, ரஜினியை தற்செயலாய் ஏர்போர்ட்டில் சந்தித்து, அவரிடம் ஒரு மால்ப்ரோ சிகரட் கடன் கேட்பது, யாருமில்லாத் தீவில் நிர்வாணமாய் திரிவது, நிலவில் முதன்முதலில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் நிலவில் நம்மை பார்த்து அதிசியப்பது, அம்பானி நம் வீட்டு வாட்ச்மேன் வேலைக்கு அப்ளிகேசன் போடுவது, கேட்டதனைத்தும் கொடுக்கும் அலாவுதீன் பூதமொன்றை உடன் வைத்திருப்பது, தேநீர் பருகியபடியே நீரில் மிதப்பது. யாராலோ சாத்தியப்படும் அல்லது சாத்தியப்படவே படாத இம்மாதிரியான நிகழ்வுகளை நமக்கு நிகழ்த்திக் காட்டும் கனவுகளை பிடிக்காதவர்களும் இருப்பார்களா?? இந்த ஒரு கனவை என்னால் மறக்கவே முடியாது. பிரார்த்தனைக்கு இரு இளம்பெண்கள் தோள்களில் கை போட்டபடி வேக வேகமாக நடந்து வருகிறார் காந்தி, நான் ஓரமாக  அதனை படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். காந்தியை மறைத்த கோட்சே அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார், கூட்டம் சிதறியோட காந்தி சிரித்தபடி நிற்கிறார். அப்போது எங்கிருந்தோ வந்த உருவமொன்று கோட்சேவை தள்ளிவிட்டு, காந்தியை சுடுகிறது. நான் பதறிப்போய், காந்தியை கோட்ஸே அல்லவா சுட்டிருக்க வேண்டும் நீ யார்? என அவன் சட்டையை பிடித்துக் கேட்க, என்னை நெட்டித் தள்ளிவிட்டு, என் நெற்றிபோட்டில் துப்பாக்கியை வைக்கிறார்  உருவநாயகன் கமல். !

ஹே ராம்...

    

9 comments:

அடிச்சு.... துவைங்க....