Thursday, August 29, 2013

டைட்டில் இன்னும் வைக்கலீங்க...


சமீபத்தில் போக்கிரி மாமன் பேஸ் புக் தளத்தில் எழுதிய அப்பா குறித்த பதிவொன்றை படிக்க நேர்ந்தது. இது அப்பாவை பற்றிய இன்னுமொரு செண்டிமெண்ட் பதிவோ... என உங்கள் கண்களில் தெறிக்கும் பீதியை என்னால் உணர முடிகிறது. இது அதுவல்ல, நம்பிக்கையோட அடுத்த வரிக்கு வந்துவிடுங்கள். அதிகாலை என்றவுடன் நம் மனத்தில் தோன்றும் காட்சிகள் என சில இருக்கும். செந்நிறத்தில் சூரியன் உதிப்பது அதன் நடுவே இரண்டு புறாக்கள் பறப்பது, சூரிய ஒளி பட்ட ஆற்று நீர் பளபளப்பாய் மின்னுவது, மரங்களுக்கிடையில் வெளிச்சம் பாய்வது, நம் நிழல் முழு உருவம் அடைவது போன்றவையும் இன்ன பிற காட்சிகளும் அதில் அடங்கும். அப்பா என்றவுடன் என் நினைவிற்கு சட்டென வந்து மறைவது அதிகாலைதான். மனிதர் ஐந்து மணிக்கு மேல் தூக்கத்தில் இருந்து நான் பார்த்ததே இல்லை. இயக்குனர் பாலாவிடம் அவரின் குருநாதர் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னாராம், 'உலகத்துல ஜெயிச்சவன் பூராம் காலைல சீக்கிரம் எந்திரிச்சவண்டா' அப்டின்னு. அப்பா ஜெயித்தாரா தெரியாது ஆனால் தோற்கவில்லை. அலாரச் சத்தத்தில் இசைய உணர எம் எஸ் சுப்பு லக்ஷ்மி அம்மாவிற்கு கூட முடிந்திருக்காது. நாம் சொன்ன வேலையை மிகச் சரியாக செய்தும் நம் அதிருப்திக்கு உள்ளாகும் ஒரே ஜீவன் உலகில் அலாரம் செட் செய்யப்பட்ட கடிகாரமாய்த்தான் இருக்கும். தீபாவளி அதிகாலையை போன்ற குரூர தண்டனையை கருட புராணத்தில் எப்படி சேர்க்காமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. அன்றைய பொழுது மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் எழுப்பி விட்டு விடுவார்கள். உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை தேய்த்து, தேமேவென்று குறைந்தது அரை மணிநேரம் அமர்ந்திருக்க வைப்பார்கள். அதிலும் பாசக்கார அப்பா அவரே குளிப்பாட்டியும் விடுவார். ஒற்றை உள்ளாடையுடன் அப்பாவுடன் நிற்பதற்கு எனக்கு நிரம்பவே கூச்சமாய் இருக்கும். நான் பத்தாவது முடிக்கும்வரை அவருக்கு இது புரியவே இல்லை. பண்டிகை கொண்டாட்டங்களை அதிகாலையில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதை யார் கண்டுபிடித்தது தெரியவில்லை. எனக்கெல்லாம் பண்டிகை நேர அலாரம் பெரும்பாலும் கிரைண்டர் சத்தமாகவே இருந்திருக்கிறது. கைக்குழந்தை இருக்கும் வீட்டிற்கு தனியே அலாரம் என்னும் வஸ்துவின் தேவை இருப்பதில்லை. குழந்தையை அலாரமாக பயன்படுத்துவதில் ஒரே ஒரு சிக்கல், நாமாக நேரத்தை செட் செய்ய முடியாது. ஆனாலும் குறித்த நேரத்திற்கு முன்பே எழுந்து கொள்ளலாம். பக்கத்து வீட்டுக்காரர்களையும் சேர்த்தே எழுப்பிவிடும் திறனும் அவர்களுக்கு உண்டு. 

பாட்டி வீட்டில் இந்த அதிகாலை கலாச்சாரமெல்லாம் கிடையாது. பசங்க எழுந்திருக்கும் நேரம்தான் அவர்களவில் அதிகாலை நேரம். எட்டரை மணிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில் கணக்குபிள்ளை தாத்தா சூர்ய நமஸ்காரம் செய்து கொண்டிருப்பார். இடது பக்கமாக மூன்று சுத்து, அப்படியே வலது பக்கமாக திரும்பி மூன்று சுத்து. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டவாறே அவர் அவ்வாறு சுற்றுகையில், குடையில்லா ராட்டினம் சுற்றுவது போலிருக்கும். பின்னாளில் சூர்ய நமஸ்காரம் என்பது அதிகாலை சூரியன் எழும்போது செய்வதென்பதும், யோகா கற்றுக்கொள்ள சென்றபோது சூர்ய நமஸ்காரம் செய்வதென்பது கைகளை உயர்த்தி இட வலமாக உடம்பை சுற்றுவது மட்டுமே இல்லையென்பதையும் தெரிந்து கொண்டேன். ஏமாற்றுக்கார கணக்குப்பிள்ளை தாத்தா, தானும் சூர்ய நமஸ்காரம்தான் செய்வதாய் ஊரையே நம்ப வைத்திருக்கிறார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சூர்யோதயத்தை காண்பது அவ்வளவு திவ்யமாய் இருக்குமென கேள்விப்பட்டதோடு சரி இதுவரை நான் பார்த்ததில்லை. காலையில் எழுந்து ஜாக்கிங் செல்ல முடிவு செய்து கிரவுண்டிற்கு செல்லாமல் சாலையில் ஓடினால் சாலையோர பெண்களின் கண்களில் தட்டுப்படலாம் என்ற நப்பாசையில், ஓடுவதற்கு சாலையை தேர்ந்தெடுத்து, நாய்கள் துரத்த ஜாக்கிங்கை ரன்னிங்காய் மாற்றியதுதான் மிச்சம். நான் எத்தனை முறை நாய்களால் துரத்தப் பட்டிருக்கிறேனோ.. அதை விட குறைந்த எண்ணிக்கையிலான செஞ்சுரிகளையே சச்சின் அடித்திருப்பார்!


முந்தைய இரவு அளவுக்கு அதிகமான ஆல்கஹால் அடித்திருந்தால், அடுத்த நாள் அதிகாலை பாறாங்கல்லை தலைக்குள் பொருத்தியிருப்பது போன்ற பிரமையை தரும். உடனுக்குடன் சூடாக சில பல இட்லிகளையோ, உப்புக் கரைசலில் எலுமிச்சை சாறு சேர்த்தோ வயிற்றை நிரப்பும்வரை கல் இறங்காது. பள்ளி காலத்து காலை நேரமெல்லாம் ஸ்கூல் பஸ்  பிடிக்க ஓடியதிலேயே கடந்துவிட்டது. இப்போதுவரை பஸ் கிளம்பும் கடைசி நிமிடத்திற்கு முன் பஸ் ஸ்டாப்பில் நிற்பது அரிய நிகழ்வாகவே நடக்கிறது. முதுகில் புத்தக மூடை இல்லையெனினும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஓடி தொரத்தித்தான் பஸ் ஏற வேண்டியிருக்கிறது. கல்லூரி காலத்தில் எங்களுக்குள் துளிர் விட்ட விபரீத ஆசையொன்றை நிகழ்த்திப் பார்க்க வெகு சீக்கிரமே கல்லூரி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வேறொன்றுமில்லை பெண்களுக்கென்று தனியே அமைந்திருக்கும் பிரத்யேக கழிவறை எவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தோம். ஆளாளுக்கு ஒவ்வொரு கற்பனையை சொல்ல, எதற்கு வம்பென்று, நேரில் சென்று பார்த்து தீர ஆராய்ந்த பின் உறுதி செய்ய முடிவானது. அதற்காகத்தான் இந்த வெகு சீக்கிர அட்வஞ்சர் முயற்சி. காவலுக்கு ஒருவனை படியிலேயே நிறுத்திவிட்டு நாங்கள் நால்வர் மட்டும் உள்ளே சென்றோம். கால்கள் நடுங்கியபடியேதான் இருந்தது. பெரிய வித்தியாசமில்லை, சுமதி மேடத்தை திட்டி இந்த சுவற்றிலும் கிறுக்கியிருந்தார்கள். காவலுக்கு நின்றவன் சத்தம் கொடுக்கவே இடத்தை காலி செய்தோம். வெளியில் ஹாஸ்டல் பெண்கள் அனைவரும் மெல்லிய நைட்டியில், ஜடை பின்னியும் பின்னாத முழுக்க விரித்தும் போடாமல், அள்ளியும் முடியாமல் ஒருமாதிரி கேசத்தோடு, வாயோரம் வடிந்து விட்டிருந்த ஜலவாய் அடையாளம் தெரியும்படி, ப்ரஷ், பேஸ்ட், துண்டு சகிதம் சர்வ சாதாரணமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர். தேவதைகளுக்கு சாத்தான் வேஷமும் பொருந்தித்தான் போகிறது ! எங்களை கண்டதும் சின்ன மிரட்சி காட்டி, தேன் மொழிதான் கேட்டாள், 

என்னங்கடா இந்த நேரத்துல?? ... 
கேண்டீன்ல போண்டா போடுறதுக்கு என்ன எண்ணெய் யூஸ் பண்றாங்கன்னு பாக்க வந்தோம்.... நீங்க என்னடி இவ்ளோ காலைல இங்க??   
ஹாஸ்டல்ல தண்ணி வல்லடா அதான் இங்க வந்தோம்...
முன்பே தெரிந்திருந்தால், பாத் ரூமில் மறைவிடம் தேடியிருக்கலாம் பச்.... அதே பாத்ரூமில் என் பெயரையும் கிருஷ்ண ப்ரியா பெயரையும் இணைத்து கிசுகிசு மாதிரி என்னவோ எழுதியிருந்தார்கள். உங்க டாய்லெட்ல இதுமாதிரி ஒரு சமாச்சாரம் பாத்தேன்னு சொல்லி எப்படி அவளிடம் கேட்பது, இறுதிவரை கேட்கவே இல்லை. (ஆரம்பிச்சுட்டான்டா... )

ஒரு சிலர், காலை எழும்போது உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து அதில்தான் விழி பதிப்பார்கள். கண்ணாடி பார்த்து எழும் பழக்கத்தை கடைபிடிப்பவர்களும் உண்டு. எழுந்தவுடன் செய்தித்தாள் தேடி, பாத்ரூம் ஓடி, சமையலறை நோக்கி, சாமி படத்தை தலை மாட்டிலிருந்து உருவி... இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி எப்படியோ விடிந்து விடுகிறது. எனக்கெல்லாம் கையினில் சூடாக டீ கோப்பையை வைத்துக்கொண்டு யார் எழுப்பினாலும் எழுந்துகொள்வேன். கோயம்பத்தூரில் டெக்ஸ்மோவில் வேலை செய்துகொண்டே பார்ட் டைம்மாக நாங்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் லேத்தில் பணியாற்றினேன். ஒரு ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கீழே சென்று அங்கே 'நல்ல தண்ணீர்' பிடித்துக் கொண்டிருந்த ஓனர் அக்காவிடம், 'கீ கொடுங்க' என்று தெளிவாகத்தான் சொன்னேன். ஐயர் ஒருவர் ஆட்டுக்கறியை பார்ப்பதுபோல் அருவருப்பாய் பார்த்துவிட்டு, 'ஒரு நிமிஷம் தம்பி' எனக் கூறி உள்ளே சென்றார். திரும்பி வரும்போது கிட்டத்தட்ட 110 டிகிரி செல்ஸியஸ் கொதிநிலையில் இருந்த செம்மண் நிற பானம் ஒன்றை தந்தார். என்னங்க இது?, நீங்கதான தம்பி டீ கேட்டீங்க ... என்றார் எரிச்சலோடு. நான் கேட்டது 'க்கீ'ங்க என்றேன் அப்பாவியாய். இருவர் முகத்திலும் அசடு வழிய, வேறு வழியே இல்லாமல் அந்த டீயை நானே குடித்துவிட்டேன். அதன்பிறகு அவர்கள் வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க கூடாதென முடிவு செய்துவிட்டேன்.


மார்கழி மாத அதிகாலையில் பெருமாள் கோவிலில் கிடைக்கும் பொங்கலுக்கு நிகர் போதையான திடப்பொருளை ரஷ்யாவாலும் கண்டுபிடிக்க முடியாது. காலை நேர பஜனை கோஷ்டி நெற்றி, நெஞ்சு, கைகளை கூட விடாமல் நாமம் போட்டுக்கொண்டு அந்தக் குளிரிலும் சட்டை போடாமல், பாடும் பாடல் ராகத்திற்கு சற்றும் பொருந்தாத பின்னணி இசையை ஆர்மோனியம், மிருந்தங்கம், கஞ்சிரா முதலான கருவிகளிலிருந்து இசைத்துக் கொண்டு போவார்கள். அப்பாவின் நிர்பந்தம் பொருட்டு ஒரு மார்கழி மாதத்தில் பாதிக்கும் மேல் அவர்களுடன் நானும் அந்த அதிகாலையில் யாத்திரை கொண்டேன். வேற்று உடம்பில் அந்தக் குளிரில் எப்படி முயன்றும் கஞ்சிராவைக் கூட தாளத்தோடு இசைக்க முடியவில்லை. இருந்தும் அவர்கள் தாளம் தப்பி கன்னாபின்னாவென்று கருவிகளை இசைப்பதற்கு குளிருக்கு அப்பாற்பட்ட காரணமும் ஒன்று இருந்தது. தெருவினில் சுற்றித் திரியும் நாய்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவே இம்மாதிரியான வினோத சத்தங்களை எழுப்புகிறார்களாம். அதிகாலையில் கண்ட கனவு நிச்சயம் பலிக்கும் என்பார்கள். நான் ஐந்தாவது படிக்கும்போது, என் மாமா அதிகாலையில் கண்ட கனவொன்று பலிக்கும் என இன்றும் திடமாய் நம்புகிறேன். ஏதோ பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக் கூண்டில் என் மாமா நிற்க, நான் நீதிபதியாக வந்தமர்ந்து, ஆர்டர், ஆர்டர், ஆர்டர் என மூன்று முறை வாயால் சொல்லியதோடல்லாமல் சுத்தியலால் மேசையை வேறு மூன்றுமுறை தட்டி, இது ஒரு வழக்கில் எடுத்துக்கொள்ள முடியாத விசித்திர வழக்கு, ஆகவே என் மாமா நிரபராதி... அவரை நான் விடுதலை செய்கிறேன், என்பேனாம். ஒரு நாள் பலித்து நானும் நீதிபதி ஆகிவிட மாட்டேனா என்ன???


கணம் கோர்ட்டார் அவர்களே.....டிஸ்கி : இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் அனைத்துமே அதிகாலை நிகழ்வாகவே இருப்பதனால்,  'அதி காலை' என்ற வார்த்தை அதிகளவில் இடம்பிடித்திருக்கும். எவ்வளவோ முயன்றும் தவிர்க்க இயலவில்லை. படிக்கையில் எரிச்சலாய் இருப்பின் மன்னிக்கவும்