Monday, October 8, 2012

நம்பவா போறீங்க??!!



நான் சொல்லப்போவதை நிச்சியமாய் நம்ப மாட்டீர்கள் எனத் தெரிந்தும் நான் சொல்லாமல் விடப்போவதில்லை.

கல்லூரி முடித்து 2 வருடம் எங்கும் செல்லாமல் தண்டச்சோறு, வெட்டிப்பொழுது, பக்கத்து ஊரிலேயே வேலை என ஓடி விட்டது.  பின்னாளில் அப்பாவுடனான ஓர் அழகான சண்டைக்கு பிறகு நான் ஏறிய பஸ் என்னை கோயம்பத்தூரில் இறக்கியது. எவ்வளவு ரம்மியமான ஊர். படித்தது ஊட்டியில் என்பதால் கோவை எனக்கு முன்பே பரிச்சயம்தான். எப்போதும் மிதமான சீதோசன நிலை, ஐந்து மணிக்கெல்லாம் ஆவி பறக்க பரப்பப்படும் மெத்தென்ற  இட்லி, தித்திக்கும் சிறுவாணித் தண்ணீர், கெட்ட வார்த்தை பேசும்போது கூட 'ங்க' (நீங்க ஒரு முட்டாக் டேசுங்க) சேர்த்து மரியாதையாய் திட்டும் பண்பு, அகலமான சாலைகள், பரபரப்பான மனிதர்கள், எல்லாவற்றிற்கும் மேல் உலகின் மொத்த அழகான பெண்களும் கோவையில்தான் பிறப்பார்கள் அல்லது வசிப்பார்கள் எனச் சொல்லுமளவிற்கு கண்களை நிறைக்கும் வண்ண மயமான பெண்கள். கோவையில் எனக்கு பிடித்த முதல் மூன்று விஷயங்கள், பெண்கள்... பெண்கள்...... பெண்கள்........

வேலை தேடி வந்தவனை விதி துரத்தும்  என யார் கண்டது?? கோவையில்  ஒரு வாரத்தை உருட்டித் தள்ளியாகிவிட்டது வேலை கிடைத்தபாடில்லை. அலைச்சல் அதிகமிருப்பினும் சோர்வோ, அவநம்பிக்கையோ எட்டிப் பார்க்காமல் வைத்திருந்தது கோவை. 'கொடீஷியா' மைதானத்தில் கேம்பஸ் இன்டர்வியு என தகவல் சொன்னான் நண்பன் மணி. அங்கு செல்வதால் எனக்கு ஏற்படபோகும் பின் விளைவுகளை அவனோ நானோ அப்போது அறிந்திருக்கவில்லை. மைதானத்தை வந்தடைந்தாயிற்று, அங்கு கூடி இருப்பது பெரிய கூட்டம் எனச் சொல்லி சாதாரணமாக கடந்து விட முடியாதபடி பயங்கரமான கூட்டம். அம்மாடி வேலை தேடி வந்திருப்பவர்களின் எண்ணிக்கை கோவையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையை விட எப்படியும் 500  மடங்கு அதிகமிருக்கும் அவ்வளவு கூட்டம். அங்கிருக்கும் வரிசை கண்டவுடன் எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து அங்கிருந்தவர் யாரோ சோடா வாங்கி தெளித்து தெளியவைத்து வாசல் வரை வந்து வழியனுப்பினார். இக்கூட்டத்தில் எனக்கு வேலை கிடைக்காது எனினும் அந்த வரிசையில் நிற்கும் மனோதைரியம் இல்லாதால் பஸ் ஸ்டாப் வந்தடைந்தேன். அதோ தூரத்துல ஒரு பஸ் வருது பாருங்க அதுலதான் ஏறிக்க போறேன். அது உள்ளார நடந்த சில சம்பவங்களை சொல்லத்தான் உங்களை இவ்ளோ தூரம் கஷ்ட்டப் பட்டு அழச்சிட்டு வந்தேன். உள்ள போலாம் வாங்க.

எப்போதும் முன்பக்கம் ஏறி முன்பக்கமே இறங்க சொல்லி அம்மா அறிவுறுத்தியிருப்பதால் அவ்வாறே செய்தேன். பச் ஒரு பிகர் கூட இல்ல, என்னோட சீனியர் ஒருத்தன் இருந்தான் உள்ள. கண்ணை  பெருசாக்கி வியப்புக் குறி காட்டி சில நிமிட விசாரிப்பிற்கு பின் நண்பரகளுடன் அளவளாவுவதில் மூழ்கி விட்டான். நான் ஒரு கம்பி நோக்கி முன்னேறினேன், என் கையை ஏதோ தடுத்து நிறுத்த என்னவென்று பார்த்ததில் இன்னொரு கை அதை பிடித்திருந்தது, அப்படியே பேசவும் செய்தது அதுவும் பெண் குரலில்,

தம்பி இங்க உட்காருப்பா ......

சொன்ன அந்த பெண்மணிக்கு ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து வயதிருக்கும், நல்ல கருப்பு (கருப்பில் என்ன, நல்ல கருப்பு கெட்ட கருப்பு) , வலது கையில் சிலுவை வடிவத்தை பச்சை குத்தியிருந்தாள், பொட்டில்லாத நெற்றி, ரத்தச் சிவப்பில் புடவை அணிந்திருந்தாள், சராசரியை விடக் குள்ளமானவள் என்பது அமர்ந்திருக்கும் நிலையிலேயே கூட தெரிந்தது. அவளின் உருண்டையான பழுப்பு நிறக் கண்கள்தான் சற்று பயம் காட்டியது. பயம் மறைத்து அவள் அருகில் அமர்ந்தேன் 

என் சீனியரை சுட்டிக் காட்டி சொன்னால், அந்தா.... அவன மட்டும் நம்பவே நம்பாத எம காதகன்.... 

இதை எதற்காக என்னிடம் சொல்கிறாள் என்பது தெரியவில்லை இருந்தாலும் அவனை ஆரம்பத்திலிருந்தே எனக்கு தெரியும் அவன் யாரின் நம்பிக்கைக்கும் உரியவன் அல்ல, அவன நம்பி ஒரு 500 ரூவா கடன் வாங்கலாம்னு இருந்தேன் நீங்க சொல்லிட்டீங்கல்ல இனிம்மே நம்ப மாட்டேன் ...

உதடு வலிக்காமல் சிரித்தாள், உங்க அப்பா பேரு, திருப்பதி பகவானோட ஏதோ ஒரு பேராத்தான் இருக்கணும் நான் சொல்றது சரியா??

எப்படி சொல்கிறாள் சும்மா அடிச்சு விடுகிறாளோ, ஆமாங்க R V பெருமாள்  எங்க அப்பா பேரு....

உங்ககூட பிறந்தவங்க மொத்தம் மூணு பேரு அதுல  ஒன்னு பொண்ணு சரியா??

அம்மா ரேசன் காரடை ஏதும் தொலைத்து விட்டாளா சரியாக சொல்லுகிறாளே, ஆமா கரக்ட்டா சொல்லிட்டீங்களே.... நீங்க ஏதாவது ஜோசியக்காரங்களா...

மீண்டும் உதடு வலிக்காமல் சிரித்தாள்,  இல்ல ஆனா உன் முகத்த பாத்தன்னே சில விஷயம் சொல்லனும்னு தோனுச்சு ...

இந்த மூஞ்சிய பாத்தா கண்டிப்பா தோணுங்க, முகத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேன் முக்கியமாய் நெற்றியை அதில்தான் நிறைய எழுதியிருக்கும் 

உன் பேரு என்ன தம்பி??

இவ்ளோ சொன்னவளுக்கு என் பெயர் தெரியாமல் விட்டதில் ஆச்சர்யமே, சொன்னேன். கேட்டவள் என் ராசி, நட்ச்சத்திரம், பிறந்த தேதி, நேரம் முதற்க் கொண்டு துல்லியமாகச் சொன்னாள். அப்போது எனக்கே என் ராசி நட்ச்சத்திரம் எல்லாம் தெரிந்திருக்கவில்லை. பேச்சு வாக்கில் உன் ராசி வீனஸ், உன் நட்சத்திரம் புளூட்டோ, உன்ன மார்ஸ் கெரகம் பிடிச்சு ஆட்டிட்டு இருக்குனு சொன்னாக்கூட நம்பியிருப்பேன். ஒரு வாரத்திற்கு முன் நான் அப்பாவிடம் போட்டிருந்த சண்டையைக் கூட தெரிந்து வைத்திருக்கிறாள்.

அப்பா கூட சண்டை போட்டு வேலை தேடி இங்க வந்தாச்சு, இன்னிக்கு உனக்கு வேலை கிடைச்சு இருக்காதே ...

அந்த நம்பிக்கை எனக்கே இருந்ததால உள்ளயே போகலைங்க ...

போயிருந்தாலும் கிடைச்சு இருக்காது நாளைக்கு போ எந்த கம்பனிக்கு வேணுனாலும் போ கண்டிப்பா வேலை கிடைக்கும்

எப்டி சொல்றீங்க?? சும்மா அடிச்சு விடாதீங்க..... 

தம்பி நான் எதுக்கு சும்மா அடிச்சு விடனும் ?? கண்டிப்பா உனக்கு நாளைக்கு வேலை கிடைக்கும் நம்பு..

சிரித்து வைத்தேன். 

இன்னும் நமபல போல என்ன சொன்னா நம்புவீங்க தம்பி.... ம்ம் உங்க இடது தொடைல கடுகளவுல ரெண்டு மச்சம் இருக்கு சரியா??

தூக்கி வாரிப்போட்டது எனக்கு, அவசரமாக கிளம்பும்போது பேன்ட் போடாமல் வந்துவிட்டேனா இல்லையே போட்டிருக்கேனே இந்த மாதிரி சமயத்திற்கென்றே தைக்கப்பட்ட கருநீலக் கலர் பேன்ட்,

எதுக்குனே தெரியாம அங்க ரெண்டு மச்சம் இருக்குங்க... ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்டி?? நீங்க??, 

பயமும் பரவசமும் கவ்விக்கொண்டது என்னை. இவள் பாட்டுக்கு ஒரு பிளாஸ்பேக் எடுத்துவிடுவாளோ சுமார் 20 வருசத்துக்கு முன்னாடின்னு ஆரம்பிச்சு என் தாத்தா செய்த அத்துணை அக்கிரமங்களையும் சொல்லப் போகிறாள் பச் அப்டி எதுவும் நடக்கவில்லை.

ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்தாள், தம்பி நான் சொல்றத கேளு நான் உன்ன பாக்கத்தான் வந்தேன். உன்ன எனக்கு ரொம்ப வருசமா தெரியும். உனக்கு...... என ஆரம்பித்து அவள் சொன்னது அத்தனையும் அழகான ஆச்சர்யங்கள் மெலிதான புன்னகை துணை கொண்டு எவ்வளவு வலிமையான விஷயங்கள் பேசுகிறாள். என்னைப் பற்றி எல்லாம் சொன்னாள். எந்தக் குறுக்கு கேள்வியும் கேட்காமல் கவனிக்க மட்டுமே செய்தேன் அவ்வளவு ஏன் எனக்கு பின்னாளில், பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் வரை சொன்னாள் ஓர் நம்ப முடியாத பயணம்தான் 

கடைசியாக கேட்டேன், உங்க பேர் என்னங்க???

என்ன தம்பி கேட்ட பேரா??? பேருல என்ன தம்பி இருக்கு??? அந்த பாப்பா பாரு எவ்ளோ அழகா இருக்கு 

அவள் சுட்டிக்காட்டிய திசை பார்த்தேன் அழகான குழந்தை. குழந்தை என்பதே அழகுதானே இதிலென்ன அழகான குழந்தை.... எதேச்சையாய் இருப்பினும் அக்குழந்தையின் அந்த நேரத்து சிரிப்பு ஏதோ ஒன்றைக் குறிப்பால் உணர்த்துவது போல் இருந்தது. குழந்தை நோக்கி சின்னதாய் புன்னைகைத்து விட்டு திரும்பினேன். என் அருகில் அந்த பெண்மணி அமர்ந்திருந்த ஜன்னல் ஓர இருக்கையில் இப்போதிருந்தது ஓர் வெற்றிடம். ஆம் அவளை அங்கு காணவில்லை. எனக்கு தேடித் பார்க்கவும் மனமில்லை

நம்பவா போறீங்க??!!

12 comments:

  1. அமானுஷ்யம்! அடுத்த நாள் வேலை கிடைத்ததா? சொல்லவேயில்லையே!நல்ல சசஸ்பென்சோடு எழுதியிருக்கீங்க, வாழ்த்துகள்:-)

    amas32

    ReplyDelete
  2. நன்றிங்க்மா ... ஹ்ம் அடுத்த நாள் வேலை கிடைத்தது ... டெக்ஸ்மோ அங்கதான் இருந்தேன் ஒன்னரை வருடம் :))

    ReplyDelete
  3. இப்படி ஒரு நல்ல பதிவ எழுதிட்டு தயவு செய்து அத டிவிட்டர்ல பிரமோட் பண்ணாதீங்க சகோ, ஏன்னா டிவிட்டர்கள் படிச்சு கூடப் பாக்காம கிண்டல் பண்ணிடுவாங்க (நானும் அத செஞ்சேனே)..பின்ன எப்பிடி கொண்டு சேக்குறதுன்னு கேட்டீங்கன்னா என்கிட்ட பதில் இல்ல ...ஆனா ஒரு நாளு இது கட்டாயம் பலபேரப் போய் சேந்துடும் ...சொன்னா நம்பவா போறீங்கன்னு கேட்கமாட்டேன் ..பட் கட்டாயம் இத நம்புங்கன்னு சொல்வேன்.நன்றி - @GaneshVasanth

    ReplyDelete
    Replies
    1. டிவிட்டர்ல ப்ரமோட் பண்ணாம இத கொண்டுபோற வழியத்தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன் :)) நன்றி சகோ அதென்ன ரோபோ ஆப்சன் நான் பாக்குறேன் :))

      Delete
  4. மேற்படி உள்ளது தான் நான் உங்ககிட்ட சொன்ன ரிப்ளே ...அதுல பாருங்க இந்திரன்(!) மேற்படி கமெண்ட்ட போட்டுட்டு நான் ரோபோ இல்லைங்கரத ஒழுங்கா நிரூபிக்காம விட்டுட்டேன் ..கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அந்த ரோபோ ஆப்சன செப்பனிட்டா நல்லா இருக்கும் :)
    - @GaneshVasanth

    ReplyDelete
  5. நல்லா இருந்தது, வேலை கெடச்சு இருக்கும் கண்டிப்பா. அவங்க அப்டியே மறஞ்சு போய்ட்டாங்கன்னு நம்ப முடியல....

    ReplyDelete
  6. ADADE,,,,,yennakkum ithe maathiri nadanthuchu daambi.......yenga sonna NAMBAVAA POORINGA

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நான் நம்புறேன் :)

      Delete
  7. super story, romba nalla irunthathu

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வந்தமைக்கும் கமாண்ட் இட்டமைக்கும் :)

      Delete

அடிச்சு.... துவைங்க....