Thursday, August 13, 2015

அடியேய்ய் அபர்ணா...

’என்ன சார்.. நேத்தைக்கே முடிஞ்ச இண்டர்வியூக்கு இன்னைக்கு வந்திருக்கீங்க?’ என்ற ஒற்றைக் கேள்வி, என் 450 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தை, ஒரு முழு இரவை, ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை ஜஸ்ட் லைக் தட் இடது கையால் உதறித் தள்ளியது. சென்னை, எப்போதுமே எனக்கு நாராசமான அனுபவத்தை மட்டுமே தந்திருக்கிறது. இப்போழுதும் அப்படித்தானென மனதை தேற்றிக் கொண்டேன். இந்தமுறை கொழுத்தியெடுக்கும் வெயில் இல்லை, மாறாக மெலிதான தூறல் கூடவே வந்து நான்கைந்து தும்மல்களை தந்துவிட்டுச் சென்றது. சில சந்திப்புகள் சில கூத்தடிப்புகள் முடித்து கோட்டை விட்ட இண்டர்வியூவையும் மறந்து மறுநாள் கோயம்பேடு உணவகமொன்றில் அமர்ந்திருந்தபொழுது இரவு மணி பத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.

ஆரடர் செய்த ஒரேயொரு தோசையும் பொறுமையை சோதிக்குமளவிற்கு நேரம் எடுத்துக் கொண்டதால், மொபைல் டேட்டா ஆன் செய்தேன். அட ஒரு வாரத்திற்கு பின் அபர்னாவிடமிருந்து மெஸேஜ்..

டேய் சாப்ட்டியா??

இன்னும் இல்ல வெய்ட்டிங்..

எங்க இருக்க?

சென்னைல.

சென்னைலையா?? சொல்லவேயில்ல எப்ப வந்த?

நேத்து, ஒரு இண்டர்வியூ. ஸாரிடி நீ சென்னைல இருக்கிறதே எனக்கு மைண்ட்ல... என டைப் செய்து கொண்டிருக்கும்போதே இளையராஜா வயலின் வாசிக்க ஆரம்பித்துவிட்டார். அவள்தான் அழைக்கிறாள்.

ஹலோ...

ஏண்டா சென்னை வர்றேன்னு சொல்லவேயில்ல

உன்கிட்ட இருந்து ஒரு வாரமா மெஸேஜே இல்ல, அதுவுமில்லாம நீ சென்னைல இருக்கேங்கிறதே எனக்கு மறந்து போச்சு..

மறக்குண்டா.. இப்ப எங்க இருக்க?

கோயம்பேட்ல, ஊருக்கு கெளம்பிட்டேண்டி

ஹெய் நாளைக்கு போலால.. 

இல்லடி பாப்பா அழறா.. நான் போறேன் அடுத்தவாட்டி வர்றேன்

ஹேய் ஹெ இருடா... நான் பாப்பாக்கு கூட எதுவும் வாங்கித் தரல.. நாளைக்கு பாத்துட்டு அப்டியே பாப்பாக்கு எதாச்சி வாங்கித் தருவேன்ல..

பரவால விடு.. நீ ஒரு முத்தம் கொத்ததா நானே கொடுத்திடுறேன்.

நீ மட்டும் இன்னைக்கு போகாம இரு நான் கண்டிப்பா நாளைக்கு உன்கிட்ட பாப்பாக்கு முத்தம் கொடுத்துவிடுறேன்..

நீ செய்வடி, வேனாம் ஃபோன்லையே கொடு கொண்டுபோய் சேத்துடுறேன்..

உனக்கு ஃபோன்ல கொடுத்தா பிடிக்காதே.. ஃபோன எச்ச பண்ணக்கூடாதுனு பெருசா பீத்திக்குவியே...

அது அப்போ இப்போ கொடு தப்பில்ல

அதெல்லாம் முடியாது நீ இரு நாளைக்கு போலாம்..

இல்லடி கெளம்பனும், இந்த ஊரு எனக்கு பிடிக்கவேயில்ல வெறும் தூசி

ரொம்ப பண்ணாத... நீ ஈவ்னிங்கே சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன், DOG ப்ளீஸ் இருடா..

ஓகேடி தம்பி மொறைக்கிறான் நான் அப்றம் கூப்புற்றேன்.

அழைப்பைத் துண்டித்துவிட்டு, தம்பி கண்களால் கேட்ட கேள்விகளுக்கு, ’நம்புடா அண்ணன் நல்லவண்டா’ மாடுலேஷனில் பதில் சொல்லி, சிகரட், தண்ணி பாட்டில், டாட்டா சம்பிரதாயங்கள் முடித்து பேருந்தேறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

வாட்ஸப் செய்திகளிலும், என்னை போக வேண்டாமென்ற வற்புருத்தலும், சிணுங்கள்களும் மட்டுமே இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எதிர்வீட்டு பெண்ணிடம் க்ளீவேஜ் பார்க்கும் கள்ளத்தனத்தில் என ஃபோனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததால், ‘bye di gud nite' என்று மெஸேஜ் செய்துவிட்டு மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து ஃபோனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

இருந்த அலுப்பிற்கு உடனே தூங்கியிருக்கத்தான் வேண்டும், ஆனால் யாரிந்த அபர்ணா என்பது குறித்து உங்களுக்கு விளக்க வேண்டியிருக்கிறதே. அபர்ணாவை நான் சந்தித்தது ஆர்குட்டில். இப்போது ஆர்குட் என்ற வெப்சைட்டே இல்லை. நானும், அபர்ணாவும் இன்னுமும் இருக்கிறோம். ‘ரொம்ப ஒல்லியா இருக்கீங்க, நல்லா சாப்டுங்க’ இதுதான் அவள் எனக்கனுப்பிய முதல் மெஸேஜ். முதல் மெஸேஜை Hi என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்கிற அடிப்படை கூடத் தெரியவில்லை அவளுக்கு. ’பாக்க ஒல்லியா இருந்தாலும் எகிறி அடிச்சா கில்லி மாதிரி இருப்பேன்’ என ஏதோ குழந்தைத்தனமாய் பன்ச் டைலாக் மாதிரி ரிப்ளை செய்ததாய் நினைவு. ஆர்குட், ஜீடாக், ஃபோட்டொஸ், மொபைல் ஃபோன் என எங்களின் காதல் படு வேகமெடுத்தது. காதல்தான், இருவரும் பகிர்ந்துகொண்ட முதல் மெஸேஜிலேயெ இருவருக்குமே தெரிந்தே இருந்தது, இது இப்படித்தான் முடியும்.


ஆறு மாத காலம் ஃபோன் வெப்பத்தால் வெடிக்குமளவிற்கு காதல் செய்துவிட்ட எங்களின் முதல் சந்திப்பு சென்னையில்தான் அரங்கேறியது. இருக்கிறதென நம்பி உருவிவிட்ட நாற்காலியின் இடைவெளியில் பொலக்கென விழுவோமே அப்படி இருந்தது எங்களது முதல் சந்திப்பு சிரிப்பும், சிலிர்ப்பும் சேர்ந்துகொண்டு. இருவருக்குமே ஒரே மாதிரியான ரசனைதான். பெரும்பாலும், உணவு விஷயத்தில் இது மாறியிருந்தது அதில் எனக்கு திருப்தியும் கூட. மூன்று வார காலமும் மெரீனா, தியேட்டர், மால், ஹோட்டல், சீண்டல், துரத்தல், பொடிநடை, டூவீலர், பேருந்து, ட்ரைன், சில்மிஷங்கள், உரசல், முத்தங்கள், ஊடல், இடையில் ஒரு இரவு பாண்டிச்சேரி, அன்பளிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டியா? ஃபுல்ஹேண்ட் ஷர்ட் போட்டா டக்கின் பண்ணு போன்ற அக்கறைகள், அழகு குறிப்புகள், ஃபோட்டோ, கைவிரல் கோலம், நகம் வெட்ட அறிவுருத்தல், கேலிகள், சின்னச் சின்ன அழுகைகள், அசாதரண சூழ்நிலையில் சட்டென நிகழும் சுவாரஸ்யங்கள், வெட்கப் புன்னகை, தீராத தாகம் என எல்லாமுமே இருந்தன. எல்லாமுமே எனில் எல்லாமுமேதான்.

ஆரத்தழுவி உச்சி முகர்ந்து அபர்ணா என்னை வழியனுப்பிய அந்த நாளிற்குப் பிறகு அவளைச் சந்திக்கவேயில்லை. இன்னும் ஒருமுறையேனும் சந்தித்திருக்க வேண்டும். இமி அளவும் ஈர்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டோம். இடையில் எனக்கு இன்னொரு காதல் வேறு. வந்த காதல் எதையுமே ஏற்றுக்கொள்ள நான் தயக்கம் காட்டியதே இல்லை. காதல் சொல்லும் பெண்களை பறவைகளை அணுமதிக்கும் ஒரு மரத்தைப் போல் அரவணைத்துக் கொள்கிறேன் ஏனெனத் தெரிவதில்லை. அதனாலயே என் நிலை மிகவும் திண்டாட்டமாய் ஆகி விட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல இருவருக்குமே ஃபோன் காதல் சலிப்படைய தொடங்கியது. இரண்டொருமுறை சந்திப்பிற்கான சூழ்நிலை அமைந்தும் எதன் உந்துதல் பொருட்டோ நானதை தவிர்த்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டிருந்தன. வெகு லாவகமாய் இருவருமே தொடர்பு எல்லைக்கு அப்பால் வந்துவிட்டோம். கிட்டத்தட்ட மறந்தேவிட்ட அவள் முகத்தையும், மெயில் ஐடியையும் நினைவில் நிறுத்தி, என் திருமண பத்திரிக்கையை அனுப்பினேன். அவளுக்கு திருமணம் முடிந்திருக்கும் எனவே நம்பியிருந்தேன். ஆனால் அது அப்படி இருக்கவில்லை.

‘call pannu' என ரிப்ளை செய்து கூடவே அலைபேசி எண்ணையும் அனுப்பியிருந்தாள். வாழ்த்து சொல்லத்தான் போகிறாள் என நினத்தால்.. காச்மூச்சென்று கத்தத் துவங்கி விட்டாள். ‘பாக்குறண்டா.. உன் கல்யாணம் எப்டி நடக்கும்னு, என்னய மறந்துட்டெள.. வர்றண்டா நேரா வீட்டுக்கே வர்றேன்’ என்று ஏதேதோ சொன்னாள். நினைவிலில்லை. தாலி கட்டும்வரை பயந்துகொண்டேதான் இருந்தேன். திருமனம் முடிந்த மறுநாள் காலை அழைத்து, வாழ்த்துக்கள் என்றாள். அவ்வப்போது மெயில் செய்வாள். பின் தொடர்ந்து மெயில் செய்தாள். face book சாட்டிங்கில் பிஸியானோம். திருமணத்திற்கு அழைத்தாள். நினைவிருக்கிறது, மங்காத்தா ரிலீஸ் அன்றுதான் அவள் திருமனமும். மங்காத்தாதான் சென்றேன்.

திடீரென கால் செய்து, கனவனுக்கு வேலை போய்விட்டதெனவும், இவள் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறதெனவும், மாமியார் கொடுமைகள் பற்றியும் சொல்லி அழுதாள். இன்னும் குழந்தையில்லை என்றாள். வாட்ஸப் வந்தபின் தினமும், குட் மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், சாப்டாச்சா, எங்க இருக்க?, என்ன பண்ற?, ஊருக்கு வர்றியா?, மாரி பாட்டு கேட்டியா?, குளிச்சியா?, என்ன சோப்பு?, என்ன கலர் சட்டை?, மீசை ஷேவ் பண்ணலையா?, என்பது போல் மெஸேஜ் செய்துகொண்டே இருப்பாள். ஐந்து நாட்கள் அவளிடமிருந்து எந்த செய்தியுமில்லை. அதனாலையே நான் சென்னை செல்வதை அவளிடம் தெரிவிக்கவும் தோன்றியிருக்கவில்லை.

சத்தங்களும், கண்ணில் பட்ட வெளிச்சமும் தூக்கத்தை கலைத்துவிட்டது. பேருந்து திருச்சி எல்லைக்குள் இருக்கிறது. ஃபோனை எடுத்து மொபைல் டேட்டா ஆன் செய்தேன். அட, அவளிடமிருந்து இன்னொரு மெஸேஜ்,’டேய் நாம ஏன் இன்னொருவாட்டி காதலிக்க கூடாது?’

பேருந்து, நிலையத்தை அடைந்து நின்றுவிட்டது. நான், சுற்றிலும் தேடி இடது பக்கமிருந்த நவீன கட்டணக் கழிப்பறையை நோக்கி சற்று வேகமாய் எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தேன்...
Friday, March 13, 2015

பந்து புராணம்...


நம்மூரில் கிரிக்கட் கதைகளுக்கு பஞ்சமிருக்காது. திரைப்படங்கள், சிறுகதைகள் என கிரிக்கெட் தழுவி நிறையப் பார்த்திருப்போம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கூட ஒரு கிரிக்கெட் கதை உண்டு. இந்தியா முதன்முதலில் உலகக்கோப்பை வென்றவுடன், இந்தியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கிரிக்கெட் விளையாடுவதில் அபரிவிதமான திறமை கொண்டவர்கள் என்பதை நம்பத் தொடங்கினார்கள். நானும் நம்பினேன். போகவும், கிரிக்கட் மற்ற விளையாட்டுக்களை விட ஆடுவது எளிதானதாயிருந்தது. ஆட்டத்தின் இடையில் இத்தனை ஓய்வெடுத்துக் கொள்ளும் சவுகர்யம் வேறெந்த விளையாட்டிலும் இருக்காது. நான் சொல்லப்போகும் கிரிக்கெட் சர்வதேச போட்டிகளை சடுதியில் காலி செய்துவிடும் அளவிற்கான விதிமுறைகள் கொண்டவை. டக்வொர்த் லூயிஸ் விதி போலில்லை. எங்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு விதிமுறை பிறப்பின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.

      என் இடது கையின் பெருவிரல் நகம் பிய்ந்து தெறித்தது, என் தம்பியின் நடு நெற்றி பிளந்து ஆறு தையல் போட்டது மேலும் சிற்சில ரத்தம் உறையும் திகில் சம்பவங்களால் கார்க் பாலிலிருந்து டென்னிஸ் பாலுக்கு மாறினோம். தனியொருவனால் பந்து வாங்குமளவிற்கு எங்கள் யாருக்கும் வசதி போதாது. அவரவர் சட்டைப் பையிலிருப்பதைப் பகிர்ந்துதான் பந்து வாங்குவோம். பின்னாளில் அதுவும் சிகரட் பிடிக்க ஆரம்பித்த பின்னர்தான் அப்பா சட்டைப் பையில் கைவைக்கும் அவசியம் வந்தது. டென்னிஸ் பால் விலை கருதியும், எத்தனை எளிதாக வந்தாலும் குருமணியின் கைகளுக்குள் அடங்காத கேட்சும், உடைந்துபோனால் திண்டுக்கலில் படிக்கும் நான் மட்டுமே வாங்கி வரும்படியான சூழ்நிலையும் நிலவியதால், ரப்பர் பாலுக்கு தாவினோம். KRI என்ற லேபிளில் வெள்ளை நிற பந்தது. பந்து வீச துக்கியடிக்க, பாய்ந்து பிடிக்க என எல்லா வகையிலும் சவுகர்யம் தந்தது. ஒரே குறை ஒரு மேட்ச் முடிவதற்குள்ளாகவே தெறித்துவிடும். ஊக்கினால் சிறு துளையிடும் எங்களின் விஞ்ஞான மூளையும் தகர்த்துவிட்டு உடைவது அதிலடிங்கிய சிறு சோகம். சில மாதங்களில் Stumper என்ற பெயரில் வந்த பல நிறத்திலான பந்துகள் எங்களை கவர்ந்தன. அடிக்கடி உடையவும் இல்லை, சவுகர்யத்திற்கும் குறைவில்லை.

      டோர்னமெண்ட், பக்கத்து தெரு/ஊர்களுடனான மேட்ச் தவிர்த்து, எங்களுக்குள் இரு அணிகள் பிரித்து விளையாடுவதில்தான் எங்கள் கவுரவம் அடங்கியிருந்தது. அணி பிரிக்கும் முறைகள்தான் குறிப்பிடத் தகுந்தவை. ஆரம்பத்தில், இரு கேப்டன்கள் நியமித்து, அவர்களாகவே பிடித்தமான ஆட்களை தேர்வு செய்துகொள்ளும் எளிய முறையைத்தான் பின்பற்றினோம். பின்னாளில் அவன் மட்டும் நல்ல நல்ல ப்ளேயரா எடுத்துக்கிறான் எங்களுக்கு மட்டும் டொச்சா.. போன்ற குற்றசாட்டுக்களால் அம்முறையை கைவிட்டொம். பின் கேப்டன்களை ஓரமாக நிற்கச் செய்துவிட்டு இவ்விருவராக தூரம் சென்று.. தங்களுக்கு வேறுவேறு பெயர் சூட்டிக்கொண்டு கேப்டன்களிடம் யார் வேண்டுமென கேட்ப்போம். உதாரணத்திற்கு, ரஜினி கமல் என்ற பெயர் சூட்டிக்கொண்டு ரஜினி வேண்டுமா கமல் வேண்டுமா எனக் கேட்போம். கேப்டன் எவர் பிரியரோ அவரை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் இதில் பிக்ஸிங்கெல்லாம் கூட நடக்கும். என்ன பெயர் கேட்டாலும், “நீ அவன்ட்ட போயிரு, நான் இவன்ட்ட போயிர்றேன்” என்பது மாதிரி. இங்கே பெயர் என்பது சும்மா பேருக்கு. இப்படி ஆள் பிரிப்பது சலிப்புத் தட்டவே, ரஜினி அணி, கமல் அணி, தல அணி, தளபதி அணி எனப் பிரிந்தோம். கொடுமை என்னவெனில் கமல் அணிக்கும், தளபதி அணிக்கும் ஆட்கள் போதமாட்டார்கள். பெருந்தன்மையாய் மற்ற அணியிலிருந்து அவர்களுக்கு ஆட்கள் தந்து உதவுவார்கள்.

      வெயில், கிரிக்கட்டில் எங்களைப் பாடாய்ப்படுத்திய ஒரே வஸ்து. 20 ஓவர்கள் என்பது பதினைந்தாகி, பணிரெண்டாகி பின்பு 8 ஓவர்களில் நின்றது. பிரச்சனை அத்தோடு தீரவில்லை. டெயில் எண்டர்களுக்கு பேட்டிங்கில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற பெரும் பிரச்சனை வெடித்தது. ஆலோசனைக் குழுவைக் கூட்டி உடனடி தீர்வென்னவென யோசித்ததில் டெஸ்ட் மேட்ச்கள்தான் ஒரே வழியாய் தோன்றியது. எங்களுக்கு வெயில்தான் பெரிய பிர்ச்சனையாயிருந்தது. மைதானத்தின் வெளியே கட்டிடங்கள் சூழ ஒரு அரச மரத்தின் அடியில் பிட்ச் உருவாக்கினோம். அப்போது எங்களுக்கு எல்லாமே கிரிக்கட்தான். ஊர் மத்தியில் புதிதாக அமைத்த மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் கூட எங்களால் கிரிக்கட் மட்டுமே ஆட முடிந்தது. தீபாவளி, பொங்கல், ஊர்த் திருவிழா என எதுவாகினும் எங்கள் கொண்டாட்டம் பேட் பாலோடு மைதானத்தில்தான் இருக்கும். ஆயுத பூஜைக்கு பேட், ஸ்டம்புகளுக்கு பொட்டு வைத்த நிகழ்வுகளும் உண்டு.

      டெஸ்ட் மேட்ச்கள், எங்களுக்குள் இருந்த ராகுல் ட்ராவிட்களை உசுப்பிவிட்டன. ஒருத்தர் விடாமல் கட்டை போட்டு சாவடித்தனர். போதாக்குறைக்கு ஒரேயொரு ஸ்டம்பைத்தான் நட்டு வைத்திருந்தோம். நேரடியாக அல்லாமல் ஒன் பிட்ச்ட் பிடித்தாலே அவுட் என முடிவானது. இது ஓரளவு பலன் தந்தது. சரியாக ஸ்கொயர் ஃஆப் திசையில் யுவராணி வீடு இருந்ததால், ஆளாளுக்கு அங்கே தூக்கியடிக்க சுவரேறி இறங்கி தாவு தீர்ந்தது. சிலர் தவிர்த்து அனைவருமே எல்லாத் திசையிலும் தூக்கியடித்தனர். கட்டடத்தின் மேலே தூக்கியடித்தால் அவுட்டென முடிவானது. சிக்ஸர் என்பது கட்டிட சுவரில் நேரிடையாக மோதினால் மட்டுமே எனச் சுருங்கியது. விதிமுறைகள் இறுக்கமாகமாக வினோத் அடுத்த அஸ்திரத்தை எடுத்தான்.

போட்ட பந்துகள் ஒன்றினைக் கூட மட்டையில் வாங்காமல், உடம்பிலேயெ வாங்கி, நிழலில் நின்றவர்களையும் சோர்வடையச் செய்தான். வேறென்ன செய்ய… தொடர்ந்து மூன்று முறை உடலில் வாங்கினால் அவுட் என்ற விதிமுறை இயற்றினோம். அதிலும் இரண்டு முறை உடலில் வாங்கி மூன்றாவது பந்தினை அடிக்காமல் விலகியோடும் பெருமூளை வீர சாகசங்களும் அரங்கேறின. அடிக்கடி டாஸ் பந்துகள் போட்டு அதனால் நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஒன் பிட்சில் தன் விக்கட்டைப் பறி கொடுத்த இழி நிலையப் போக்க டாஸ் பால் வீசக் கூடாது என முடிவானது. நெடுங்காலன் வெங்கடேஷ் செய்தது அராஜகத்தின் உச்சம், லெக் சைடில் மரநிழல் இருக்கிறதெனினும் கட்டிட மறைவில்லையென்பதால், எத்தனை ஃபீல்டர்கள் இருந்தாலும் ஃஆப் சைடில் மட்டுமே நிறுத்தியிருப்போம். போட்ட பந்துகள் அனைத்தையும் லெக் சைடிலேயெ அடித்து ஃபீல்டர்களை தெறிக்க விட்டான். பிறகென்ன மூன்று முறை லெக் சைடில் ஷாட் அடித்தால், லெக் சைடில் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பந்து நேரடியாக விழுந்தால் அவுட் என்ற விதிமுறை தயாரானது.

      இத்தனையித்தனை விதிமுறைகளுக்கு பின்னால் நடந்த சண்டைகளும் கூச்சல், குழப்பங்களும் அழகழகான நாரதர் கழகங்கள். தவறுதலாக ஒரு பந்து அதிகம் வீசிவிட்டால் அதற்கொரு பஞ்சாயத்து. பந்து வீச இருக்கும் கோட்டினை கால் கட்டைவிரல் தாண்டினால் அதற்கொரு சண்டை. ஒரே பக்கத்தில் 50 மற்றும் சிங்கத்தை வடிமைத்த ஐம்பது பைசா நாணயத்தில் எது டெய்ல், ஹெட் என்பதில் இருந்த குழப்பம் இந்திய அரசையே கேள்வி கேட்கவல்லது. அடித்த பந்து மரத்திலிருந்து ஒன் பிட்ச்ட் பிடித்து அவுட் கேட்டதால் கோபமுற்ற ஆனந்த், பேட்டினை இரண்டாக உடைத்தது மாதிரியான போர்க்காட்சிகளும் உண்டு. மரத்திலிருந்து நேராக அன்றி தரையில் பிட்சாகி பிடித்தால் அவுட்டில்லை என்றானது. சர்வதேச மேட்ச்கள் எதிர்கொண்ட ‘பந்தை எறிகிறான்’ பிரச்சனை எங்களையும் தாக்கியது. இதற்கும் நாங்கள் பந்து வீசியல்ல எறிந்துதான் விளையாடினோம். எறிவதிலும், எறிகிறான் பஞ்சாயத்துக்கள் விழுந்தது சுவாரஸ்ய முடிச்சு. தூஸ்ரா, கேரம் முறைகள் போல் ‘அய்யய்யோ கொல்றான்’ முறையில் அம்மாதிரியான எறிபந்துகளை நோபால் என அறிவித்தோம். லெக் சைட் எல்லை தாண்டிய பந்துகளை மயிரிழையில் ஸ்கெட்ச் போட்டு காப்பாற்றும் கண்கட்டு வித்தைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரே நாளில் ஏழு டெஸ்ட்கள் கூட ஆடியிருக்கிறோம். பதினாங்கு இன்னிங்ஸ். களைப்பென்ற வார்த்தைக்கு அர்த்தமே கூட தெரியாத காலமது.

யுவராணி தவிர்த்து இன்னும் இரண்டு பென்கள் பற்றி சொல்லாமல், இந்தக் கட்டுரையை நிறைவு செய்யமுடியாது. காலம் போன கடைசியில் சைக்கிள் கற்றுக்கொள்ள வந்த பாக்யலஷ்மி. அவள் சைக்கிள் கற்றுக்கொள்கிறேனென மைதானம் சுற்ற நாங்கள் பந்தெடுக்கிறோம் என அவளைச் சுற்றினோம். ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல், ‘நானும் உங்களோட கிரிக்கட் விளையாட வரவா?’ எனக்கேட்டு அவளே கோதாவில் குதித்தாள். அவளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்தது நான்தான். திரைப்படங்களில் கதாநாயகிக்கு, நாயகன் வயலின் வாசிக்க கற்றுக்கொடுப்பானே அதுபோல். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு அவள் எங்களுடன் ஆடிய கிரிக்கட்தான் இதுவரையிலான எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான சற்றே சங்கடமான கிரிக்கட். ஒரு நன்பகல் நேரத்தில் தெருச்சண்டைகளில் பெரும்புகழ் பெற்ற அவளம்மா, பாக்யலஷ்மி மயிர்க்கற்றையை கொற்றாக பிடித்து இழுத்துப் போனபோது முடிந்தது அந்த கிரிக்கட்.

இன்னொரு பெண், இந்தப் பள்ளி வாட்ச்மேனின் மனைவி. ரொம்பவே களையான முகம் கொண்ட அக்கா. சோர்வான நேரத்தில் அவர் வீட்டில்தான் தண்ணீர் கேட்டு குடிப்போம். சொம்பில் தந்து கொண்டிருந்தவர், எங்களின் எண்ணிக்கை கருதி தினமும் ஒரு குடம் நிறைய தண்ணிரும் அதற்கொரு சொம்பும் வைத்துத் தந்துவிட்டார். தன் ஐந்து மற்றும் மூன்று வயது குழந்தையுடன் அவ்வப்போது மைதானம் விஜயம் செய்து பிள்ளைகளை ஓடியாடி விளையாடப் பணிப்பார். ஊருக்கு புதிதென்பதால், ஊர் பற்றி நிறையக் கேட்பார். எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவார். அப்படி போகிறபோக்கில் அவர் கேட்ட கேள்விதான் ரொம்பவே விஷேசமானது. ‘இப்டி இங்கயே திரியிறீங்களே, உங்க எல்லாத்துக்கும் வேலைனு எதுவும் இல்லையாப்பா? இன்னும் எத்தன நாளைக்குத்தான் வீட்ல சும்மா சாப்ட்டுட்டே இருப்பீங்க?’ இந்தக் கேள்விகள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் எங்களுக்கு தந்துவிடவில்லை. அப்போதைக்கு சிரித்து மழுப்பிவிட்டாலும், அதன்பிறகு அவரை நேருக்குநேர் எதிர்கொள்வதில் இருந்த சங்கடமும், பதற்றமும் எதையோ உணர்த்தியது.

      ஒவ்வொருவராக ஒவ்வொரு திசையில் பறந்துவிட்டோம். இப்போது அனைவருக்கும் வேலையிருக்கிறது. தனியாளாக பந்தென்ன, பேட்டும் கூட வாங்கிவிடும் அளவிலான பொருளாதாரம் இருக்கிறது. கூடி விளையாடத்தான் ஊரில் யாருமில்லை. சமீபத்தில் மகளை அழைத்துக்கொண்டு அவளின் புது சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மைதானம் சென்றிருந்தேன். நாங்கள் விளையாடிய அரச மரத்தடியில் இன்னொரு கும்பல் விளையாடிக் கொண்டிருந்தது.

ஹேய் பேட்ல படவே இல்ல…

பேட்ட ஸ்ட்ரைட்டா போட்றா…

நான் ரீச்சான பின்னாடிதாண்டா அவன் ஸ்டம்ப்ல அடிச்சான்…

அய்யா ஹிட் விக்கட் இருக்குனு முன்னாடியே சொன்னீங்களா…

நீ கேட்ச் பிடிச்சு ஒருத்தன் அவுட்டாகிப் போறது நான் சாவுறதுக்குள்ளயாச்சும் பாத்துறனும்டா…

என்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மகளுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.       

Tuesday, January 27, 2015

நயன்தாராவின் காரதோசை !!!

இது நான், அடிக்கொருமுறை வந்து செல்லும் ஊர்தான். சென்ற வாரம் கூட வந்திருந்தேன். ஒரே வாரத்தில் பெரிய மைதானம் போலிருந்த சாலையோர ஊர் மந்தையில் இப்படியான ஒரு நீச்சல் குளத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான் மூக்கின் நுனியை மெலிதாய்க் கீறும் பெரிய ஆச்சர்யம். நீச்சல் குளம் கிடக்கிறது, தூரத்திலிருந்து கடலைப் பார்த்தால் தெரியும் நீல நிறத்திலான தண்ணீரை எங்கிருந்து கொனர்ந்தார்கள்?! குளத்தில் நத்தை ஊர்வது மாதிரியான மெல்லிய அலைகள் வேறு தோன்றுகிறது. செவ்வக வடிவிலான குளத்தை சுற்றிலும் கம்பி வலையால் வேலி அமைத்திருக்கிறார்கள். கம்பி வேலிதான், முட்கம்பி வேலியல்ல. உள்ளெ யார் குளித்தாலும் இங்கிருந்தே காணும்படியான அமைப்பு.

எட்டிப் பார்க்கும் அவசியமில்லாமலே எல்லாம் தெரிந்தாலும், நீச்சல் குளமென்றானபின் எட்டிப் பார்ப்பதுதானே முறை. எட்டிப் பார்த்தேன். நீரின் நிறத்துக்கு போட்டியாய், நீல நிறத்திலான நீச்சலுடை அணிந்த பெண்ணொருத்தி நீந்திக் கொண்டிருக்கிறாள். மல்லாக்கப் படுத்து வானம் பார்த்தபடியான ஒய்யார நீச்சல். என் கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறாளா… சாலையில் செல்லும் எந்த ஜீவனும் அவள் நீந்துவதை ஒரு பொருட்டாகவே மதித்தாக தெரியவில்லை. நெரிசலான காலை நேர சாலைப் பயணத்தில் சக மனிதனுக்கு விபத்து நேர்ந்துவிட்டால், எதேச்சையாய்க் கூட திரும்பாமல் நகரும் நகரவாசிகள் போல் முகம் திருப்பாமல் கடக்கிறார்கள். மெல்ல கம்பி வேலியொட்டி நடந்து கொண்டிருக்கிறேன்.

நீச்சல் செய்து கொண்டிருந்தவள் குளத்தின் கரை மேலேறி என்னை கை நீட்டி அழைக்கிறாள். பின் பக்கமும், பக்கவாட்டிலும் திரும்பிப் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. தீர்க்கமாய் அவள் என்னைத்தான் அழைக்கிறாள். இந்த முகத்தையும் வாளிப்பான இந்த உடலையும் எங்கோ பார்த்திருக்கிறேன். ஒரு நடிகையாகவோ, கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாவோ, எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் படிப்பவளாகவோ, திருவிழாக் கூட்டத்தில் சிமெண்ட் நிற சுடிதார் அணிந்து டெல்லி அப்பளம் உண்பவளாகவோ, வங்கியில் பேனா கடன் கேட்பவளாகவோ, முகத்தை கீழிருந்து மெதுவாய் மேல் நகர்த்தி நேராக கண்ணுருட்டி முனகி முந்தானை சரி செய்பவளாகவோ இருக்கலாம். உள்ளே நுழைந்து கரையோரமாகவே நடந்தேன். புசுபுசுவென்றிருந்த நீல நிற டர்க்கி டவலால் தலை துவட்டிக் கொண்டிருக்கிறாள். முன்பக்கமிருந்த முடிக் கற்றையை ஒரே கழுத்துத் திருப்பலில் முதுகு பக்கம் கடத்திவிட்டாள் கள்ளி. இந்த முகம்.. முகம்… அட நம்ம ஷ்ருதிஹாசன்.

ஷ்ருதிஹாசன் எதற்கு சென்னையிலிருந்தோ.. மும்பையிலிருந்தோ.. பயணித்து இங்கே வந்து குளித்துக் கொண்டிருக்கிறார்?! அதுவும் ஊர் மத்தியில்… மொத்தச்சனமும் நடமாடும் இந்தச் சாயந்தர வேளையில். அப்பா போலில்லாமல் ஷ்ருதி கடவுள் மீது மிகுந்த பக்தியுடையவரென படித்திருக்கிறேன். மேல்மருவத்தூர் ஆதி பராசக்திக்கு மாலைபோட்டு இந்தக் குளிரில் இங்கு வந்து குளிக்கிறாரா… எங்கள் ஊரில் வந்து கூட குளியாமல், பக்கத்து ஊரில் என்ன குளியல் வேண்டியிருக்கிறது? ஒருவேளை எனக்கு நீச்சல் தெரியாதென்பதை அறிந்து அதனைக் கற்றுக்கொடுக்க வந்திருப்பாரோ… ஷ்ருதிஹாசனோடு கிளூகிளுப்பாய் எதுவும் நடந்துவிடாது எனினும், அவர் கைகளில் என்னை ஏந்தி, “கால நல்லா ஃபோர்ஷா அடிங்க, கைய அப்டியே விலக்கி தண்ணிய ரெண்டுபக்கமும் தள்ளுங்க” எனக் கற்றுக் கொடுப்பது போல் கற்பனை செய்வது எளிதாக இருந்தது. ஏதோ எதாச்சையாய் நான் வந்ததால் ஆயிற்று. இன்று விடுப்பெடுக்காமல் அலுவலகம் சென்றிருந்தால் அல்லது வீட்டில் ஆட்டுப்பால் வாங்கிவர என்னை அனுப்பாதிருந்தால்.. நினைத்தாலே பதறுகிறது. நான் வராதது கண்டு கலங்கி இரவு முழுதும் கூட நீச்சலடித்தபடியேதானே இருந்திருப்பார்.. நல்லவேளை வந்தேன். ஆனாலும் கமல்ஹாஷன், தன் மகளை இத்தனை சுதந்திரமாய் வளர்த்திருக்கக் கூடாது.     

அங்கிருந்த தலை தூக்கிப் படுத்திருக்கும் முதலை வடிவிலான நாற்காலியில் என்னை அமரச் செய்து, எதுவும் பேசாமல் ஒரு சிறு புன்னகையை மட்டும் வீசிவிட்டு அந்த இடத்திலேயே உடை மாற்றியும் கொண்டார். இடது தோள்பட்டையிலிருந்த உடையின் பாவாடை நாடா மாதிரியான பகுதியை வலது கையால் உருவி எடுக்கும்போதே என் பின்னதலையில், யாரொவொருவர் சொல்லிக்கொள்ளாமல் பெருங்கம்பியால் தாக்கிய அதிர்வலை தோன்றி மறைந்தது. ஷ்ருதி இதையெதையும் அறியாமலோ, அறிய ஆர்வம் காட்டாதவராகவோ முகத்தை வைத்துக்கொண்டு இரண்டொரு நொடிகளில் தயாராகிவிட்டார். எதற்கு தயாரானார் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அவருக்கு தெரிந்திருந்திருக்கலாம், தயாராகிவிட்டாரே!

அமர்ந்த இடத்திலேயே கால் விரல் நுனி கூட அசையாமல் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவர், உதடு விரித்து மெல்லமாய் பாட ஆரம்பித்தார். கண்ணழகா… காலழகா… பெண்ணழகா… பொன்னழகா….. ”உங்களுக்கென்னங்க எல்லாமே அழகுதான். இந்த மூக்குதான் ஏதோ ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணினதா சொன்னாங்க ஆனாலும் அழகுதாங்க” எனச் சொல்லத் தோன்றியது எதுவும் பேசிக் குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தேன். அவர் முழுப்பாடலும் பாடி முடிக்காமல் விடமாட்டார் போல் தெரிந்தது. பாடல் காட்சியின்போது தம்மடிக்கச் செல்லும் தமிழகத்தின் கலாச்சார மரபு என் ரத்தத்திலும் ஊறிப் போயிருந்ததால் ஷ்ருதிஹாசனை அம்போவென விட்டுவிட்டு சிகரட் வாங்கச் சென்றுவிட்டேன்.


இப்படித்தான் சென்ற மாதம், சரவணபவனில் காரதோசை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தேன். சரியாக பதிமூன்று நிமிடங்கள் கழித்து, காரதோசையை எடுத்து வந்து என் மேசையில் வைத்தது நயன்தாரா..