Tuesday, September 27, 2016

சிறுகதை...

ஒரு சிறுகதை எழுத வேண்டுமென்பது என் நீண்ட கால கனவு. சிறுகதையெனில் சாதாரணமாயில்லை, வாசிப்பவர்களை கலங்கச் செய்யும், ஒரு துளி கண்ணீர் சிந்தச் செய்யும், நான்கைந்து இரவுகளின் தூக்கத்தை காவு வாங்கச் செய்யும் சிறுகதை. எதார்த்தத்தையும் வாழ்வியல் அபத்தங்களையும் ஒருசேர செதுக்கி சமூகத்தின் நெஞ்சு சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கியெடுக்கும் சிறுகதை. நிலைகொள்ளாது சிதறித் தெறிக்கும் சிந்தனைகளை இறுகக் கட்டி நிறுத்தும் சிறுகதை. எப்படியாகினும் ஒரு சிறுகதை எழுத வேண்டுமென்பது என் நீண்டகால கனவு.

இந்த டிவிய இப்ப யார் பாத்துட்டு இருக்கிறது.. எழுந்து போய் ஆஃப் பண்ணிட்டு வாங்க குக்கர் கைப்பிடி கழண்டுக்கிச்சு வந்து மாட்டிவிடுங்க...

பொதுவாய் மனநிலை பிறழ்ந்தவர்களுக்கும், வேசிகளுக்கும் சிறுகதைகளில் ஏக கிராக்கி இருக்கும். இவ்விருவர்களையும் அடிப்படையாய் கொண்டு கிட்டத்தட்ட தமிழின் அனைத்து முன்னனி எழுத்தாளர்களும் ஒரு சிறுகதையேனும் படைத்திருக்கிறார்கள். அவன் ஒரு குழந்தையின் கிறுக்கல் போல் சாலையோரம் சிதறிக் கிடந்தான் ஆம் சிதறித்தான் கிடந்தான், அவளின் இரவுகள் யானை விழுங்கும் கபலம் போல் எவனோ ஒருவனால் தினம் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இம்மாதிரியான உவமைகளிலும் புகுந்து விளையாடலாம். அவன் பைத்தியமானதற்கும் இவள் வேசியானதற்கும் சர்வ நிச்சியமாய் சுவாரஸ்யமான பின்னணி ஒன்றிருக்கும். அப்படியில்லையெனினும், அப்படியானதொரு பின்னணியை நாமாகவே சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய், அருளாண்டியை எழுத தொடங்கினேன்.

அருளாண்டி, இவனை ஏதேனும் சாலையோரத்தில் அருவருப்புடனோ, பரிதாபத்துடனோ நிச்சியம் கடந்திருப்போம். நான் கண்டவன், எந்நேரமும் பாக்குகளை வாயிலிட்டு மென்றே கொண்டே இருந்தான். கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் துப்புகிறான். இதில் நம்மிடமிருந்து அவன் வேறுபடுவதில்லை. வீடென்று எதுவுமில்லை. சுடுகாட்டு கொட்டகைகையில்தான் வசிக்கிறான். அங்கிருக்கும் நீர் குழாயில் வாளி வாளியாய் தண்ணீர் பிடித்துக் குடித்துக் கொள்கிறான். அவ்வாளி நிரம்பிய தண்ணீரால் அவன் குளித்ததை எவரும் இதுவரை கண்டதில்லை. பாக்குகளும் தண்ணீருமே அவன் இருப்பிற்கு போதுமானதாய் ஆகி விட்டிருக்கின்றன. வட இந்திய முகம். எங்கள் ஊரில்தான் பைத்தியமாய் திரிவேனென அடம்பிடித்து வந்திருந்தான். ஒரு வார்த்தை பேசியதில்லை. நாய்களுக்கு மிரள்வான். காலப்போக்கில் நான்கைந்து நாய்கள் சுற்றி வளைத்தாலும் ஒற்றை கம்பால் துரத்தும் வல்லமை பெற்றிருந்தான். நாய்கள் போலவே ஊரில் சில சிறுவர்கள் தொல்லை தர, அவர்களை கல்லால் அடித்து துரத்தினான். இத்தனை காலங்களில் முகமெல்லாம் அழுக்காகி, கன்னங்கள் ஒடுங்கி, விழிகளில் நிரந்தர கிறக்கமேறி, முடிகள் ஆங்காங்கே செம்பட்டை பூசி, பற்களில் கரை படிந்து, ஈக்கள் மொய்த்துக்கொண்டேயிருக்கும் காயங்களை சுமந்துகொண்டு இப்போது அவன் ஒரு முழுமையான பைத்தியத்திற்க்குண்டான அனைத்து அடையாளைங்களையும் பெற்றிருந்தான். அவனை பைத்தியமெனச் சொல்வதே...

ஏங்க.. இதென்ன சட்டைல ரெண்டு தீக்குச்சி கெடக்கு.. நான் பொன்னு பாத்துட்டு போன அன்னைக்கே சொன்னேன். அவன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது. தண்ணி தம்முனு எல்லாப் பழக்கமும் இருக்கும். இவன எனக்கு கட்டி வைக்காதீங்கன்னு.. எவன் கேட்டான்.. மாப்ளைக்கு ஒரு பழக்கமும் இல்லைனாங்க. வந்து பாத்தா, இவன்கிட்ட இல்லாத பழக்கமே இல்லைனு இருக்கு...

அருளாண்டியை கொன்றுவிடுவோம். என்னால் முறையாக அருளாண்டியை எடுத்துச் சேர்க்க முடியவில்லை. இருக்கவே இருக்கிறாள் வேசி. கிளர்ச்சியூட்டி முடிவில் கழுத்தை நெறிக்கும் கருத்தோடு முடிக்கலாம். அப்பட்டமான புனைவு எழுத வராது என்பதால்.. இச்செய்கையில் ஊரிலேயே பிரசித்தி பெற்ற பெண் ஒருத்தி இருந்தாள். பெட்டிக்கடை சித்றா என்பார்கள். அவளிடமே பேசி துயரமும், துள்ளலுமான அனுபவங்களை பெற்று ஒரு கனமான முடிவைச் சேர்த்து சிறுகதையை செதுக்கி விடலாம். அவளின் நான்கு வயது மகளுக்கு, அவள் கடையிலேயே மிட்டாய் வாங்கித் தந்துதான் கதையை தொடங்கினேன். அவள் என்னிடம் பேசத் தயங்கினாள், உண்மையில் எல்லாவற்றிருக்குமே என்னிடம் அவள் தயங்கித்தான் இருப்பாள். எடுத்த எடுப்பிலேயே ஒரு பெண்ணிடம் அவள் அனுபவங்களை கேட்க துணிவது பெரும் அபத்தமாய் பட்டது. அபத்தம் என்பதை விட, பயந்தேன் என்பதே பொருந்தும். அடி செருப்பால... எங்க வந்து என்னடா கேட்டுட்டு இருக்க... பரதேசி நாயே.. என ஒருமையில் ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது. தினமும் கடைக்கு சென்று, சிற்சில சில்லறை வாணிபம் செய்து, ஒரு புரிந்துணர்விற்கு அவளை ஆட்படுத்த எண்ணினேன். போகவும் செய்தேன் அதற்குள் ஊரில் உள்ளவர்கள் வேறு மாதிரியான ஒரு புரிந்துணர்விற்கு வந்து விட்டார்கள். இனியெங்கே வேசியை தொடர்வது...

இனி உலுக்கும் சிறுகதைகளை தவிர்த்து விடுவோம். சிறுகதையென்ன குத்துப் பாடலா.. உலுக்கவும் குலுக்கவும்.

எப்பப்பாரு லேப்டாப்க்குள்ள தலைய விட்டுட்டே உக்காந்திருக்க வேண்டியது.. நேத்து எந்தம்பி ஃபோன் செஞ்சானாம். நாலு வாட்டியும் நீங்க எடுக்கலியாமே.. சார்க்கு அப்டியென்ன முக்கியமான வேலையாம்.. கல்யாணத்தன்னிக்கிருந்தே அவன உங்களுக்கு பிடிக்கல... அப்டியென்னதான் உங்களுக்கவன் பாவம் செஞ்சானோ.. கேட்டா, அவன் மூக்கு எனக்கு பிடிக்கலனு சொல்றது.. நாட்ல எவனாச்சும் மூக்கு பிடிக்கலேனு மச்சினன் கூட பேசாம இருப்பானா.. மூக்கு பிடிக்கல.. காது கொடையலேனு... ச்சை

தேவதை கதைகள் ஒருபோதும் சலிப்பதில்லை. அவளொரு தேவதை, யட்சி, நீலி, சகி, சூன்யக்காரி, நியூட்டனின் கண்டுபிடிப்பு, ராட்ஸசி, கொள்ளிவாய் பிசாசு, அஞ்சல. சும்மா பெயருக்கு அவள் பெயர், அபர்ணா. கோபுர நெற்றியில் ஏழு மில்லிமீட்டர் நீளமும், நான்கு மில்லி மீட்டர் அகலுமுமாய் அளந்தெடுத்து சந்தனம் இற்றிருப்பாள். தீய்ந்து விடுவதற்குள் கல்லிலிருந்து பதமாய் எடுக்கப்பட்ட பரோட்டாவின் நிறம். அவள் கண்களை வர்ணிக்கும் அளவிற்கு வளமான சொற்களெல்லாம் தமிழில் இல்லை, இல்லவேயில்லை. பள்ளியின் அனைத்துப் பெண்களும் கணுக்கால் வரை பாவாடை அணிந்திருக்க, இவள் மட்டும் முட்டிக்கு கொஞ்சம் இறக்கித்தான் அணிந்திருப்பாள். காற்றுக்காலங்களில் துள்ளித்துள்ளி அவளாடும் பேட்மிட்டன் அனேக ஆண்களின் பெருமூச்சுகளால் நிரம்பியிருக்கும். சிரித்தால், கண்கள் சுருங்கிச் சிரிக்கும். கன்னங்கள் சிறிதாய் உட்குவிந்து கண்ணடித்துச் சிரிக்கும். இவளை காதலித்தே ஆகவேண்டும். அது முடியாதபட்சத்தில் இவள் காதலிப்பவனை கொலை செய்ய வேண்டும். நான் எழுதிய முதலும் கடைசியுமான அந்த ஒற்றைக் காதல் கடிதம் இவளுக்கானதுதான். காதல் கடிதத்தின் வார்த்தைகளை விடவும் அதனை தயார் செய்யும் முனைப்புகளும், மெனக்கெடல்களும் சுவாரஸ்யமானவை. நான்கு மூலைகளுக்கும் சந்தனம் தடவி காதல் கடிதம் கொடுக்கும் பழக்கம் எதிர்வீட்டு மாமாவிற்கு இருந்தது. தன் வாழ்நாளில் குறைந்தது பதினேழு பெண்களுக்காவது கடிதம் கொடுத்திருப்பார், சந்தனத்தோடு. நான், சந்தனமெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. A4 காகிதத்தின் நான்கு பக்கங்களுக்கும் எல்லை வரைந்துகொண்டேன். எழுதினால் ஜிகுகிகுவென மின்னும் மார்க்கர் பேனாவில் எழுதினேன், என்ன எழுதியிருந்தேன் என்பது முழுதாய் நினைவிலில்லை. 'பிடிக்கலேனா HMகிட்ட சொல்லி மானத்த வாங்கிடாத' என எழுதிக் கையெழுத்திட்டது நினைவிருக்கிறது. கடிதத்தை நான்காய் மடிக்கையில் இதயத்தை மடிப்பதாய் உள்ளூற சிலிர்த்தேன். பதினைந்து வயதில் எனக்கு வந்தது காதலா எனத் தெரியாது. பதினைந்து வயதான எனக்கே தெரியாதபோது பதிமூன்று வயதேயான அவளுக்கு இதுபற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. மனத்தை ஒரு பெரும் அசிங்கத்திற்கும், ஒரு பெரும் பரவசத்திற்கும் ஒருசேர தயார் செய்து கொண்டிருந்தேன். அத்தனை நெரிசலையும் பொருட்படுத்தாமல் பேருந்தில் வைத்துத்தான் கொடுத்தேன். முகத்தில் எந்தச் சலனமுமின்றி வாங்...

இதெப்ப... உன்னப் பாக்குறதுக்கு முன்னாடி காலேஜ்ல ஒரேயொரு லவ் இருந்துச்சு அதுவும் காலேஜ் முடிஞ்சொடனே புட்டுக்கிச்சுனு சொன்னீங்களே.. அவளப் பத்தியா எழுதி வச்சிருக்கீங்க.. இல்லையே அவ பேரு அபர்ணா இல்லையே.. போகவும் நீங்க பதினஞ்சு வயசுல எந்தக் காலேஜ் போனீங்க.. அட சண்டாளப்பாவி இதுமாதிரி இன்னும் என்னென்னத்த மறச்சியோ.. நான் அப்பவே அந்த பெரியமனுஷண்ட சொன்னேன். கேட்டாங்களா... எப்டியது தமிழ்ல வளமான வார்த்தைகளே இல்லையா.. இதத்தானடா கல்யாணம் ஆன புதுசுல என்கிட்டயும் சொன்ன.. இப்பவே எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்றேன்..

இடையிடையே இத்தனை நீளமாய் பேசிக் கொண்டிருந்ததும், பேசிக் கொண்டிருப்பதும் என் மனைவிதான். திருமணமான புதிதில் ஒரு வார்த்தை பேச மாட்டாள். மௌனமாய் ஒரு பார்வை, வசீகரமாய் ஒரு புன்னகை அவ்வளவுதான். உண்மையில், ஆரம்ப காலங்களில் அவளுக்கு பேச வராது, பேசவியலா மாற்றுத் திறனாளி என்ற முடிவுக்கே வந்திருந்தேன். இளம் பிராயத்தில் ஒரு மாற்றுத் திறனாளியை மணக்க வேண்டுமென்ற லட்சியம் இருந்ததெனக்கு. என்னையும் அறியாமல் அது நடந்தேறியதெண்ணி பேருவகையும், பெருமிதமும் கூட கொண்டுவிட்டேன். என்றென நினைவிலில்லை ஒருநாள் பேசத் தொடங்கினாள், அன்றிலிருந்து இன்றுவரை அவள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறாள். அதையேன் கேட்கிறீர்கள், அது பெருங்கதை.

6 comments:

  1. Arumai...attagaasam...sema write up....superb Boss...kalakkureenga...

    ReplyDelete
  2. ப்பா செம்ம ப்ரோ...

    ReplyDelete
  3. Good combination of two different worlds :) Keep writing

    ReplyDelete
  4. Preview sirukathaikal ⚠⚠⚠

    ReplyDelete
  5. தம்பி......... கலக்கிட்டீங்க! :) ... நல்லா சிரிச்சேன்!
    தொடர்ந்து, நிறைய எழுதவும்! :)

    ReplyDelete
  6. மிக அருமை. தயவு செய்து வாளி மற்றும் கணுக்கால் வார்த்தைகளை திருத்தவும்

    ReplyDelete

அடிச்சு.... துவைங்க....