இது நான், அடிக்கொருமுறை வந்து
செல்லும் ஊர்தான். சென்ற வாரம் கூட வந்திருந்தேன். ஒரே வாரத்தில் பெரிய மைதானம் போலிருந்த
சாலையோர ஊர் மந்தையில் இப்படியான ஒரு நீச்சல் குளத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான்
மூக்கின் நுனியை மெலிதாய்க் கீறும் பெரிய ஆச்சர்யம். நீச்சல் குளம் கிடக்கிறது, தூரத்திலிருந்து
கடலைப் பார்த்தால் தெரியும் நீல நிறத்திலான தண்ணீரை எங்கிருந்து கொனர்ந்தார்கள்?! குளத்தில்
நத்தை ஊர்வது மாதிரியான மெல்லிய அலைகள் வேறு தோன்றுகிறது. செவ்வக வடிவிலான குளத்தை
சுற்றிலும் கம்பி வலையால் வேலி அமைத்திருக்கிறார்கள். கம்பி வேலிதான், முட்கம்பி வேலியல்ல.
உள்ளெ யார் குளித்தாலும் இங்கிருந்தே காணும்படியான அமைப்பு.
எட்டிப் பார்க்கும் அவசியமில்லாமலே
எல்லாம் தெரிந்தாலும், நீச்சல் குளமென்றானபின் எட்டிப் பார்ப்பதுதானே முறை. எட்டிப்
பார்த்தேன். நீரின் நிறத்துக்கு போட்டியாய், நீல நிறத்திலான நீச்சலுடை அணிந்த பெண்ணொருத்தி
நீந்திக் கொண்டிருக்கிறாள். மல்லாக்கப் படுத்து வானம் பார்த்தபடியான ஒய்யார நீச்சல்.
என் கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறாளா… சாலையில் செல்லும் எந்த ஜீவனும் அவள் நீந்துவதை
ஒரு பொருட்டாகவே மதித்தாக தெரியவில்லை. நெரிசலான காலை நேர சாலைப் பயணத்தில் சக மனிதனுக்கு
விபத்து நேர்ந்துவிட்டால், எதேச்சையாய்க் கூட திரும்பாமல் நகரும் நகரவாசிகள் போல் முகம்
திருப்பாமல் கடக்கிறார்கள். மெல்ல கம்பி வேலியொட்டி நடந்து கொண்டிருக்கிறேன்.
நீச்சல் செய்து கொண்டிருந்தவள்
குளத்தின் கரை மேலேறி என்னை கை நீட்டி அழைக்கிறாள். பின் பக்கமும், பக்கவாட்டிலும்
திரும்பிப் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. தீர்க்கமாய் அவள் என்னைத்தான்
அழைக்கிறாள். இந்த முகத்தையும் வாளிப்பான இந்த உடலையும் எங்கோ பார்த்திருக்கிறேன்.
ஒரு நடிகையாகவோ, கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாவோ, எதிர் மேசையில் அமர்ந்து
மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் படிப்பவளாகவோ, திருவிழாக் கூட்டத்தில் சிமெண்ட்
நிற சுடிதார் அணிந்து டெல்லி அப்பளம் உண்பவளாகவோ, வங்கியில் பேனா கடன் கேட்பவளாகவோ,
முகத்தை கீழிருந்து மெதுவாய் மேல் நகர்த்தி நேராக கண்ணுருட்டி முனகி முந்தானை சரி செய்பவளாகவோ
இருக்கலாம். உள்ளே நுழைந்து கரையோரமாகவே நடந்தேன். புசுபுசுவென்றிருந்த நீல நிற டர்க்கி
டவலால் தலை துவட்டிக் கொண்டிருக்கிறாள். முன்பக்கமிருந்த முடிக் கற்றையை ஒரே கழுத்துத்
திருப்பலில் முதுகு பக்கம் கடத்திவிட்டாள் கள்ளி. இந்த முகம்.. முகம்… அட நம்ம ஷ்ருதிஹாசன்.
ஷ்ருதிஹாசன் எதற்கு சென்னையிலிருந்தோ..
மும்பையிலிருந்தோ.. பயணித்து இங்கே வந்து குளித்துக் கொண்டிருக்கிறார்?! அதுவும் ஊர்
மத்தியில்… மொத்தச்சனமும் நடமாடும் இந்தச் சாயந்தர வேளையில். அப்பா போலில்லாமல் ஷ்ருதி
கடவுள் மீது மிகுந்த பக்தியுடையவரென படித்திருக்கிறேன். மேல்மருவத்தூர் ஆதி பராசக்திக்கு
மாலைபோட்டு இந்தக் குளிரில் இங்கு வந்து குளிக்கிறாரா… எங்கள் ஊரில் வந்து கூட குளியாமல்,
பக்கத்து ஊரில் என்ன குளியல் வேண்டியிருக்கிறது? ஒருவேளை எனக்கு நீச்சல் தெரியாதென்பதை
அறிந்து அதனைக் கற்றுக்கொடுக்க வந்திருப்பாரோ… ஷ்ருதிஹாசனோடு கிளூகிளுப்பாய் எதுவும்
நடந்துவிடாது எனினும், அவர் கைகளில் என்னை ஏந்தி, “கால நல்லா ஃபோர்ஷா அடிங்க, கைய அப்டியே
விலக்கி தண்ணிய ரெண்டுபக்கமும் தள்ளுங்க” எனக் கற்றுக் கொடுப்பது போல் கற்பனை செய்வது
எளிதாக இருந்தது. ஏதோ எதாச்சையாய் நான் வந்ததால் ஆயிற்று. இன்று விடுப்பெடுக்காமல்
அலுவலகம் சென்றிருந்தால் அல்லது வீட்டில் ஆட்டுப்பால் வாங்கிவர என்னை அனுப்பாதிருந்தால்..
நினைத்தாலே பதறுகிறது. நான் வராதது கண்டு கலங்கி இரவு முழுதும் கூட நீச்சலடித்தபடியேதானே
இருந்திருப்பார்.. நல்லவேளை வந்தேன். ஆனாலும் கமல்ஹாஷன், தன் மகளை இத்தனை சுதந்திரமாய்
வளர்த்திருக்கக் கூடாது.
அங்கிருந்த தலை தூக்கிப் படுத்திருக்கும்
முதலை வடிவிலான நாற்காலியில் என்னை அமரச் செய்து, எதுவும் பேசாமல் ஒரு சிறு புன்னகையை
மட்டும் வீசிவிட்டு அந்த இடத்திலேயே உடை மாற்றியும் கொண்டார். இடது தோள்பட்டையிலிருந்த
உடையின் பாவாடை நாடா மாதிரியான பகுதியை வலது கையால் உருவி எடுக்கும்போதே என் பின்னதலையில்,
யாரொவொருவர் சொல்லிக்கொள்ளாமல் பெருங்கம்பியால் தாக்கிய அதிர்வலை தோன்றி மறைந்தது.
ஷ்ருதி இதையெதையும் அறியாமலோ, அறிய ஆர்வம் காட்டாதவராகவோ முகத்தை வைத்துக்கொண்டு இரண்டொரு
நொடிகளில் தயாராகிவிட்டார். எதற்கு தயாரானார் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அவருக்கு
தெரிந்திருந்திருக்கலாம், தயாராகிவிட்டாரே!
அமர்ந்த இடத்திலேயே கால் விரல்
நுனி கூட அசையாமல் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவர், உதடு விரித்து மெல்லமாய் பாட
ஆரம்பித்தார். கண்ணழகா… காலழகா… பெண்ணழகா… பொன்னழகா….. ”உங்களுக்கென்னங்க எல்லாமே அழகுதான்.
இந்த மூக்குதான் ஏதோ ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணினதா சொன்னாங்க ஆனாலும் அழகுதாங்க” எனச்
சொல்லத் தோன்றியது எதுவும் பேசிக் குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தேன். அவர் முழுப்பாடலும்
பாடி முடிக்காமல் விடமாட்டார் போல் தெரிந்தது. பாடல் காட்சியின்போது தம்மடிக்கச் செல்லும்
தமிழகத்தின் கலாச்சார மரபு என் ரத்தத்திலும் ஊறிப் போயிருந்ததால் ஷ்ருதிஹாசனை அம்போவென
விட்டுவிட்டு சிகரட் வாங்கச் சென்றுவிட்டேன்.
இப்படித்தான் சென்ற மாதம், சரவணபவனில்
காரதோசை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தேன். சரியாக பதிமூன்று நிமிடங்கள் கழித்து,
காரதோசையை எடுத்து வந்து என் மேசையில் வைத்தது நயன்தாரா..