Monday, March 4, 2013

இரண்டு நிமிடங்கள்...


நான்காவது படிக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை மைதானத்திற்குள் பாம்பு நுழைந்து விட, யார் சொல்லியும் கேளாமல் வெள்ளிக்கிழமை என்றும் பாராமல் சவுரியார் அந்த பாம்பினை பெரிய குச்சியினால் அடித்தான். சற்று துடித்த பாம்பு தன் வாயினைஅகல விரித்து சவுரியாரை நோக்கி சீறியது அதே குச்சியைக் கொண்டு அந்த பாம்பை தரையோடு சேர்த்து குத்தி கொன்றே விட்டான். வால் மட்டும் ஆடியபடி இருந்த பாம்பை தூக்கி மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வந்தான். தனலக்ஷ்மியின் கையை நானும், என் கையை தன லக்ஷ்மியும் இறுக பற்றியபடி கூட்டத்தின் நடுவே இதனை கவனித்துக் கொண்டிருந்தோம். தன லக்ஷ்மி கவிழ்த்து வைக்கப்பட்ட நாதஸ்வரத்திற்கு சடை பின்னியது போலிருப்பாள். என்னை விடவும் உயரம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் முடித்து விட்டார்கள். ஐந்தாவது படிக்கும்போதே வயதிற்கு வந்து விட்டாள். பின்னாளில் அவளை சந்தித்தபோது மூன்று குழந்தைகள் என்றாள், மூன்றில் ஒன்றுக்கேனும் என் பெயர் சூட்டியிருப்பாளென குழந்தைகளின் பெயர்களை கேட்டேன். மூன்றுமே பெண் பிள்ளைகள். மதியம் சாப்பிட்ட புளிச்சாதத்தின் வாசனை இப்போதைய ஏப்பத்தில் வெளிப்படுகிறது. புளிச்சாதம் சாப்பிட்டால் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டி இருக்கிறது போதாக்குறைக்கு தொட்டுக்கொள்ள நார்த்தாங்காய் ஊறுகாயும் தேங்காய் தொகையலும் கொடுத்து விடுகிறாள். இனிமேல் புளிச்சாதம் செய்யவே கூடாதென கண்டிசனாக சொல்லிவிட வேண்டும். முடியுமா?? சிரிப்பு வருகிறது. இந்த ஊருக்கு வந்து ஏழு வருடம் ஆகிறது. சாலையின் இடைவிடாத இரைச்சல் பழகி போய்விட்டது. லிப்ஸ்டிக் போட்ட உதடுகளின் மத்தியில் சிகரட்டினை பொருத்தி நெயில் பாலிஸ் விரல்களால் லைட்டரை அழுத்தி சிகரட் பற்ற வைக்கும் பெண்கள், இப்போதெல்லாம் என்னை ஆச்சர்யப் படுத்துவதில்லை. பின் நவீனத்துவம் எந்த உலோகத்தால் ஆனது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்வதாய் பொய் சொல்லி பெண் பார்க்க அழைத்து சென்று விட்டார்கள். இதுவரை நீச்சல் தெரியாமல் இருப்பது ஒருவித கூச்சமாகத்தான் இருக்கிறது. எப்படியும் ஒருநாள் கற்றுக் கொள்ள வேண்டும் கடல் இல்லாத போனாலும் இடுப்பு வரை தண்ணீர் இருக்கும் ஆற்றிலாவது கற்றுக் கொள்ள வேண்டும். இரவில் வரும் கனவுகளை மட்டும் படபிடித்து வைக்க முடிந்தால் நாட்டில் திரைப்படங்கள் உருவாகியிருக்குமா என்பது சந்தேகம்தான். கனவுகளில் கூட நிம்மதியாக தூங்குவது போல் கனவு வருவது இன்னும் விந்தை. அரை தோழனின் குறட்டை சத்தத்தில் தூக்கத்தை தொலைத்த இரவுகள் ஏராளம் நல்லவேளை தற்போது சில வருடங்களாக அந்த பிரச்சனை இல்லை. ஆதி பகவான் ____ பகவான். ச்சை விஸ்வரூபமும் பெரிதாக கவரவில்லை. ராஜேந்திரனும் அதைத்தான் சொன்னான். தாலிபான் பற்றிய காட்சிகளிளெல்லாம் என் அருகில் அமர்ந்திருந்தவர் பதிமூன்று கொட்டாவிகள் விட்டார். அந்த ஊஞ்சல் காட்சியில், ஊஞ்சல் கயிற்றை எங்கே கட்டிருப்பார்கள்??. ஆதிரா இப்போதெல்லாம் அழகாக "அம்மா" என்கிறாள். சத்தமாக, மெதுவாக, அதிகாரமாக, ஆர்வமாக, என பலவித பாவங்களில் அம்மா என்ற வார்த்தையை உச்சரிக்க கற்று இருக்கிறாள். பிடிவாதம் அதிகம்தான் அது சரி பிடிவாதம் இல்லாத குழந்தை எப்படி குழந்தையாகும்?? அம்மாவை அருகில் அழைத்து சிரித்தவாறே கன்னத்தில் அடித்து விட்டாள். சும்மானாச்சுக்கும் அழுது கொண்டிருந்த மனைவியை காட்டி அம்மாவை அடிக்க கூடாதுப்பா அதிலும் அப்பாவை அடிக்கவே கூடாது என்றேன். இப்போதெல்லாம் ஒரு இடத்தில் நிற்பதில்லை எந்த விளையாட்டு பொருளும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவளை கவர்வதில்லை. அன்று அப்படித்தான் ஏதோ ஒரு ஆட்டுக்குட்டியை காட்டி அடம்பிடித்து வீட்டிற்கே தூக்கி வரச் செய்துவிட்டாள். இரண்டுமே இளங்கன்றுகள் எங்களுத்துதான் பயமாக இருந்தது. அவள் சரியாக முப்பத்தி இரண்டு நிமிடம் அதனுடன் விளையாடி ஆட்டுக்குட்டியை அம்போவென தவிக்க விட்டு அவள் மாமாவுடன் பைக் ஏறி சுற்றக் கிளம்பி விட்டாள். புதிதாக மாட்டியிருக்கும் திரைச்சீலை மெருன் கலரில் இருக்கிறது புதிதாக மாட்டியது என்றால் பழையதை தூர எறிந்துவிட்டு மாட்டியது அல்ல, பதிதாக அதாவது இப்போதான் மாட்டியே இருக்கிறார்கள் முன்னாடி இல்லவே யில்லை. அடிக்கடி வரும் தலைவலிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கோடரி தைலம் அதன் சக்தியை என் தலையில் வீணடிக்கிறது. படுத்துக் கொண்டே எம்ஜியார் ஆட்சியை பிடித்தாராம் வேடிக்கை, என்னால் படுத்துக் கொண்டே பால் டம்ளரைக் கூட பிடிக்க முடியவில்லை. குஷ்பூவிற்கு கோவில் கட்ட நினைத்தவர்களை தேடிக் கண்டறிந்து டைம்பாஸில் இன்டர்வியு செய்திருந்தார்கள் படித்தேன். அதில் ஒருவன் வெளிநாட்டில் இருக்கிறானாம், பெரும்பாலும் அங்கே உருப்படாமல் இருந்தவர்கள்தான் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. அண்ணன் தம்பி ரெண்டு பேருங்கிறீங்க வடையும் பிய்க்க கூடாதுங்கிறீங்க காமடிதான் ஞாபகம் வருகிறது. ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்து காணும்போது. என்னை கேட்டால் ஸ்டாலின் அடுத்த திமுகவின் தலைவராக சரியான தேர்வு. நான் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்.... இப்போது பெப்சி உமா என்ன செய்து கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அவருக்கு மிகப்பெரிய க்ரேஸ் இருந்தது குழந்தைத்தனமான முகமும் குழைவில்லாத பேச்சும் இப்போது நினைத்தாலும் அய்யய்யோ ஆனந்தமே நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே... செம பாட்டு, பாட்டு அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை. எந்தக் காட்சியுளும் அழுத்தமே இல்லை ஒரு கட்டத்திற்கு மேல் தம்பி ராமையா பொறுமையை சோதித்து விட்டார். ப்ளாக் எழுதி மாமாங்கம் ஆகிறது இன்றாவது எதையாவது கிறுக்கிட வேண்டும்!!!

24 மணி நேரத்தில் தனிமை கிடைக்கும் ஒரு இரண்டு நிமிடத்தில் என் மூளை இவ்வளவு மட்டுமே சிந்திக்க பக்குவப்பட்டுள்ளது. இன்னும் மூளை வளர்ச்சி அடைய வேண்டும் போலும்