வெளில பயங்கர மழ, கும்மிருட்டு... ச்சே வெளில மழனு எழுத ஆரம்பிச்சாலே கும்மிருட்டும் சேர்ந்தே வந்திடுது. நேர்மையான போலிஸ் ஆபிசர் மாதிரி. இப்ப மழைலாம் இல்ல மிதமான வெயில்தான். 'ஒண்ணுமில்ல மாப்ள பயப்படாம இருங்க' அப்டிங்கிறார் மாமனார். உண்மையாவே நான் அப்போ பயப்படவோ பதட்டப்படவோலாம் இல்ல, ரொம்ப கேஷுவலாத்தான் இருந்தேன். அவர் சொன்ன பின்னாடிதான், ஓ கொழந்த பொறக்கும்போது நகத்த கடிச்சிக்கிட்டு டென்சனா இருக்குற மாதிரி காட்டிக்கிறதுதான் ப்ரோஜிசர் போலன்னு மூஞ்சிய ரொம்ப இறுக்கமா வச்சுக்கிட்டேன். பாரதிராஜா படத்துல வருமே, ஒரு சம்பவத்த பத்தி ஊர்ல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, ஆனா என்ன பேசுவாங்கன்னு நமக்கு தெரியாது. லாங் ஷாட்ல கும்பல் கும்பலா நின்னுகிட்டு மியூட்ல தல கையெல்லாம் ஆட்டிக்கிட்டே பேசுவாங்க. ஹாஸ்பிட்டல்ல என்னைய சுத்தி இருந்த கும்பலும் அந்த வேலையத்தான் பாத்துச்சு. ஒரு அரை மணி நேரம் இப்டியேதான் போச்சு, திடீர்னு வெளில மழை வந்துச்சு. ரெண்டு மூணு நிமிசத்துல நர்ஸ் ஒன்னு வெளில வந்துச்சு, கைல பாப்பாவோட. ஒரு கண்ணாடி டம்ளர குழந்தை டிஸைன்ல செஞ்சு அதுல ரோஸ் மில்க் நிரப்பி வச்ச மாதிரி இருந்தது பாப்பா. என்ன பண்ணனும்னு தெரியல. கொஞ்ச நேரம் உத்து பாத்துட்டே இருந்தேன். வர்றவங்க போறவங்களாம் வாழ்த்து சொல்றாங்க. அப்பாவாகிட்டேன், அப்பாவானா செய்ய வேண்டிய மொத வேல, சாக்லேட்ஸ் வாங்கிவந்து மொத்த ஹாஸ்பிட்டலுக்கும் விநியோகம் செய்றது, செஞ்சேன். அப்பாவா செய்ய வேண்டிய அடுத்த முக்கிய விஷயம், கொழந்தைக்கு பேர் வைக்கிறது. அமிழ்தினி, ஆதிரை, இலக்கியா, அபிநயா, லாவண்யா, அகிலா, அகல்யா, அனிச்ச மலர்னு பாப்பா பொறக்குறதுக்கு முன்னாடியே நெறைய பேர பரிசீலனைல வச்சிருந்தேன். அதுவும் போக அதென்ன பெரிய கம்ப சூத்திர வித்த?? இந்த இன்டர்நெட் யுகத்துல கூகுள்ள தேடுனா லட்சம் பேரு வந்து கொட்ட போவுது... அதுல ஒரு நல்ல தமிழ் பேரா வச்சுட்டா போச்சு.... அப்டிதான் நானும் நெனச்சேன்... ஆனா.. நினைக்கிறதெல்லாம் நடக்கணுமே....
பொறந்த நேரத்த குறிச்சுக்கிட்டு எங்க சித்தி, 'கிட்டு' ஐயர்னு ஒருத்தர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவர், நிகழ்கால விஞ்ஞானத்தையெல்லாம் அலட்சியமா ஓரங்கட்டிட்டு, கோடு போட்ட பேப்பர்ல ஆராய்ச்சி குறிப்பு எழுதுறாப்ல ஏதேதோ கணக்கு போட்டார், நட்சத்திரம் ராசியெல்லாம் சொல்லிட்டு, அ, ஆ, இ, ஈ, உ, ஊ இந்த எழுத்துக்கள்ல எதிலாவது பேர் ஆரம்பிக்கணும், பேரோட கூட்டுத்தொகை ஒன்னு இல்லேனா ஆறு வரணும் அப்டினார். மனுஷன் சொன்ன அந்த கூட்டுத்தொகை கணக்குதான் எனக்கு புரியல. எனக்கு சூடு போட்டாலும் மேத்ஸ் வராது, எனக்குன்னு இல்ல யாருக்குமே சூடு போட்டா, ஐயோ அம்மானு கத்தத்தான் வரும். நியூமராலஜி பத்திலாம் எனக்கு பெரிய அக்கறையோ, ஆர்வமோ இல்லைதான் அப்புறம் வர வச்சுக்கிட்டேன். சரின்னு ஊருக்குள்ள ஒரு ஆள் இன் ஆள் அழகுராஜாவ புடிச்சு அந்த கணக்கு எப்டிங்க போடுறதுன்னு கேட்டா, காலைல எந்திரிச்சு பல் தேச்சு குளிச்சு முடிச்சிட்டு காலண்டர்ல தேதிய கிழிச்சிட்டு அப்டியே அந்த காலண்டர திருப்பி பாத்தேனா, அதுல ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்திருப்பான். அத மனப்பாடம் செஞ்சு வச்சுக்க அது போதும்னு சொன்னார். மணப்பாடம் பண்ணிட்டேன். இப்ப கூப்ட்டு H க்கு என்ன நம்பர்னு கேட்டா, உடனே எட்டுன்னு சொல்லிடுவேனே.
இலக்கியாங்கிற பேரு பிடிச்சு போகவே, அதே பேர வைக்கலாம்னு வீட்டமாகிட்ட சொன்னா, அவ... நோ நோ நோ பேரு 'அ' இல்லேனா 'ஆ'லதான் ஆரம்பிக்கணும்னு சொல்லிட்டா. ஹ்ம் ஆமா அம்மினி பேரு 'ஆ'லதான் ஆரம்பிக்குது. அடிச்சு பிடிச்சு ரெண்டே நாள்ல பேரு முடிவாய்டுச்சு. அந்த ஆள் இன் ஆள் அழகுராஜாதான் சொன்னார். அமிர்தவர்ஷினி, பேர் நல்லாருக்கே என்ன அர்த்தம்னு கேட்டா, அது ஒரு ராகத்தோட பேரு இந்த ராகத்த பாடுனா மழ கொட்டோ கொட்டுனு கொட்டும்னு சொன்னாய்ங்க. சூப்பர்பா... பாப்பா பொறந்த அன்னைக்கு ஊருக்குள்ள மழ வெளுத்து வாங்குச்சு. பாப்பா பேருலையும் மழ.. லாஜிக்கலா ஒத்து வரவும் பேர தூக்கிட்டு தாத்தாகிட்ட ஓடுனேன். இங்கதான் கதைல ட்விஸ்ட்டு, தாத்தா பேர படிச்சு பாத்துட்டு, பிடாது.. பிடாது.. ஐ ல பேரு முடியப்பிடாது, 'ஆ' சவுண்ட்ல முடியிற பேருதான் வைக்கனும்னு சொல்லிட்டாரு.
இப்போ திரும்பவும் மொதல்லேர்ந்து பேரு, A ல ஆரம்பிச்சு A ல முடியனும். கூட்டிப்பாத்தா ஒன்னு இல்லேனா ஆறு வரணும். கூடுமான வரைக்கும் பேர் தமிழ்ல இருக்கணும். இவ்ளோதான் ரூல்ஸ், ஒரு குயர் அன் ரூல்ட் லாங் சைஸ் நோட்புக் ஒன்னு வாங்கிட்டேன். பேரெழுதி அதுக்கு கீழயே ஒவ்வொரு எழுத்துக்கும் நம்பர் போட்டு அப்டியே கூட்டனும். கடைசில 37 னு வந்தா மூனையும் ஏழையும் கூட்டனும். அப்புறம் 10 வருமா.... ஒன்னையும் ஜீரோவையும் கூட்டனும். சிங்கிள் டிஜிட்ல வர்ற வரைக்கும் இதுமாதிரி கூட்டிட்டே இருக்கணும். ஊருக்குள்ள ஒருபயல விடல, LIC ஏஜென்ட், மோடிகேர், ஆம்ப்வே ஆளுங்கள பாத்தா தெறிச்சு ஒடுவாய்ங்களே, அதுமாதிரி ஓட ஆரம்பிச்ச்காய்ங்க என்னைய பாத்தாலே. அசரலையே, பேரு பிடிச்சா, கூட்டுத்தொக வரல, கூட்டுத்தொக வந்தா பேரு பிடிக்கல. ஆனா இந்த தேடல்ல நெறைய வித்தியாசமான, அழகான பேரெல்லாம் சிக்குச்சு. அனேகம்பேர் சொன்னது, அனுஷ்காதான் அடுத்த இடம், அனன்யாக்கு. சொன்ன பேருக்கெல்லாம் ஏதாவது ஒரு நொட்ட சொல்லி தட்டி கழிச்சுட்டே இருந்தேன்.
அம்புஜா.....
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளானு பசங்க கிண்டல் பண்ணுவாய்ங்க வேணாம்
அபலாஜிதா....
அப்ப லாஜிதானா இப்ப என்னடா??
அக்ஷரா... கமலோட ரெண்டாவது பொண்ணு பேருடா ..
நான் என்னோட மொத பொண்ணுக்குத்தான் பேரு கேட்டேன்.
அவந்திகா....
இது சாருவோட வீட்டம்மா பேரு டிவிட்டர்ல ஓட்டுனாலும் ஒட்டுவாய்ங்க வேணாம்.
ஆள் இன் ஆள் அழகுராஜா, நீ மணல் கயிறு எஸ் வீ சேகர விட மோசமான கண்டிசன போட்டு டார்ச்சர் பண்ணிட்டு திரியிற ஒன்னு பண்ணு, இப்போதைக்கு உன்னோட கொழந்தைக்கு 'எக்ஸ்'னு (X) பேரு வச்சுடு. ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு எப்டியும் உனக்கொரு பேரு சிக்கிரும் அப்போதைக்கு மாத்திக்கலாம்னு, கோவம் வர்ற மாதிரி காமடி பண்ணிட்டு இருந்தாரு. இது கூட பரவால என் மச்சினன் போஃன் பண்ணி, மாம்ஸ் செம பேரு ஒன்னு சிக்கியிருக்கு மாம்ஸ்.... நல்லா தேடிட்டேன். தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் கேட்டாச்சு. 'அண்டா'னு பேர் வச்சிடலாம் மாம்ஸ் A ல ஆரம்பிச்சு A ல முடியுது. நியுமராலஜியும் பெர்பெக்ட்டா இருக்கு என்ன சொல்றீங்கனான். இர்றா உங்கக்காகிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். கட் பண்ணிட்டான். மச்சினன நொந்துகிட்டு நேரா போயி என் தம்பிகிட்ட பேர் வைக்க தேவையான வஸ்து, வாஸ்து பத்தி ரெண்டு மணி நேரம் விளக்கின பின்னாடி, நாளைக்கு உனக்கு செம பேரு சொல்றேன்னு போஃன வச்சான். ரெண்டு நாள் கழிச்சு,
'அதிதி' பேர் எப்டிரா இருக்கு??
லூசு நாயே பேரு A ல முடியனும்.
ஹ்ம்.... அமெரிக்கானு வய்யேன், வேணாம்னா அண்டார்டிகா, ஆஸ்திரேலியா...
தம்பி, என்னோட மகதான் எனக்கு உலகம் அதுக்காக உலகத்துல இருக்குற நாட்டோட
பேரெல்லாம் அவளுக்கு வைக்க முடியுமா...
அதுவும் சரிதான், அல் உம்மா? அல் கொய்தா?
@$*&&%#$#@#^^#
டேய் ... இர்றா.. இர்றா... சொல்றண்டா.... ஹ்ம்ம்ம் 'அடிங்கோய்யால' எப்டிரா?? அடிங்கோய்யால சாப்டுமா... அடிங்கோய்யால இங்க வாமா... அடிங்கோய்யால தூங்குமா...
அடிங்கோய்யால... போஃன கட் பண்ற....
இந்த பேருக்கு என்னடா கொற... A ல ஆரம்பிச்சு A ல்தான முடியுது...
உனக்கு, வாய்ல ஆரம்பிச்சு ஒடம்பு பூராம் குத்து விழப்போது .... எம்பொண்டாட்டி கூப்புற்ரா நான் அப்புறம் பேசுறேன்....
இது என்னங்கிது, புதினா வாங்கிட்டு வர சொன்னா, முருங்கை கீரை வாங்கிட்டு வந்துருக்கீங்க... புள்ள பொறந்து மூணு மாசமாச்சு இன்னும் ஒரு பேரு வைக்க துப்பில்ல. ஒரு கட்டு புதினா கூடவா பாத்து வாங்கிட்டு வர துப்பில்ல.... அடக்கொடுமையே புதினா வாங்கிட்டு வர்றதுக்கும், புள்ளைக்கு பேரு வைக்குறதுக்கும் என்னங்கடி சம்பந்தம்.... இனி யாரையும் நம்பாம நாமளே களத்துல இறங்குரதுதான் சரின்னு முடிவு பண்ணினேன்.
இன்னையோட, ஆதிரா பொறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. நாளைக்கு மேடம்க்கு செகண்ட் பர்த்டே. நான் சொன்னதெல்லாம் நேத்துதான் நடந்தமாதிரி இருக்கு. முழுசா ரெண்டு வருசத்த முளுங்கியாச்சு அதுக்குள்ள. அன்னைக்கு அப்டிதான் கிட்சன்ல பாத்திரத்த பூராம் இழுத்து கீழ தள்ளி விட்டுட்டா. அவங்க அவ்வா, திட்டி வெளில தொரத்தி விட்டுட்டாங்க, வெளில வந்தவ துணி துவைக்கிற பவுடர எடுத்தாந்து அங்கன இருந்த சப்பாத்தி மாவுல மிக்ஸ் பண்ணி கைய்ய விட்டு கலக்கிட்டா. அடியேய்னு அவங்கம்மா ஓடி வந்தாங்க.... சிரிச்சுக்கிட்டே சைட்ல ஓடி போனவ, ஜூஸ் போடுறதுக்காக ஆஞ்சு வச்சிருந்த அருகம்புல் குண்டான ஒரு எத்து விட்டா பாருங்க... ரசிக்கவும் சிரிக்கவும்தான் முடியுது. நாம சேட்ட செய்யும்போதும் பெத்தவங்க இப்டித்தான் ரசிச்சிருப்பாங்களோ என்னவோ. ஆதிரா எம்புட்டா பரவால, நான் ஒருவாட்டி தவந்துக்கிட்டே போயி இட்லி மாவுல மூச்சா பண்ணிட்டேனாம். அவ்வா சொன்னாங்க.
போன வருஷம் ஆதிரா பொறந்த நாளன்னைக்கு, டிபில பாப்பாவோட போட்டோ வச்சேன், இந்த ஒருவருஷ இடைவெளில எழுத்தாளனா பார்ம் ஆகிட்டதால பதிவெழுதிட்டேன். த்சோ.. த்சோ..