Friday, March 13, 2015

பந்து புராணம்...


நம்மூரில் கிரிக்கட் கதைகளுக்கு பஞ்சமிருக்காது. திரைப்படங்கள், சிறுகதைகள் என கிரிக்கெட் தழுவி நிறையப் பார்த்திருப்போம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கூட ஒரு கிரிக்கெட் கதை உண்டு. இந்தியா முதன்முதலில் உலகக்கோப்பை வென்றவுடன், இந்தியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கிரிக்கெட் விளையாடுவதில் அபரிவிதமான திறமை கொண்டவர்கள் என்பதை நம்பத் தொடங்கினார்கள். நானும் நம்பினேன். போகவும், கிரிக்கட் மற்ற விளையாட்டுக்களை விட ஆடுவது எளிதானதாயிருந்தது. ஆட்டத்தின் இடையில் இத்தனை ஓய்வெடுத்துக் கொள்ளும் சவுகர்யம் வேறெந்த விளையாட்டிலும் இருக்காது. நான் சொல்லப்போகும் கிரிக்கெட் சர்வதேச போட்டிகளை சடுதியில் காலி செய்துவிடும் அளவிற்கான விதிமுறைகள் கொண்டவை. டக்வொர்த் லூயிஸ் விதி போலில்லை. எங்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு விதிமுறை பிறப்பின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.

      என் இடது கையின் பெருவிரல் நகம் பிய்ந்து தெறித்தது, என் தம்பியின் நடு நெற்றி பிளந்து ஆறு தையல் போட்டது மேலும் சிற்சில ரத்தம் உறையும் திகில் சம்பவங்களால் கார்க் பாலிலிருந்து டென்னிஸ் பாலுக்கு மாறினோம். தனியொருவனால் பந்து வாங்குமளவிற்கு எங்கள் யாருக்கும் வசதி போதாது. அவரவர் சட்டைப் பையிலிருப்பதைப் பகிர்ந்துதான் பந்து வாங்குவோம். பின்னாளில் அதுவும் சிகரட் பிடிக்க ஆரம்பித்த பின்னர்தான் அப்பா சட்டைப் பையில் கைவைக்கும் அவசியம் வந்தது. டென்னிஸ் பால் விலை கருதியும், எத்தனை எளிதாக வந்தாலும் குருமணியின் கைகளுக்குள் அடங்காத கேட்சும், உடைந்துபோனால் திண்டுக்கலில் படிக்கும் நான் மட்டுமே வாங்கி வரும்படியான சூழ்நிலையும் நிலவியதால், ரப்பர் பாலுக்கு தாவினோம். KRI என்ற லேபிளில் வெள்ளை நிற பந்தது. பந்து வீச துக்கியடிக்க, பாய்ந்து பிடிக்க என எல்லா வகையிலும் சவுகர்யம் தந்தது. ஒரே குறை ஒரு மேட்ச் முடிவதற்குள்ளாகவே தெறித்துவிடும். ஊக்கினால் சிறு துளையிடும் எங்களின் விஞ்ஞான மூளையும் தகர்த்துவிட்டு உடைவது அதிலடிங்கிய சிறு சோகம். சில மாதங்களில் Stumper என்ற பெயரில் வந்த பல நிறத்திலான பந்துகள் எங்களை கவர்ந்தன. அடிக்கடி உடையவும் இல்லை, சவுகர்யத்திற்கும் குறைவில்லை.

      டோர்னமெண்ட், பக்கத்து தெரு/ஊர்களுடனான மேட்ச் தவிர்த்து, எங்களுக்குள் இரு அணிகள் பிரித்து விளையாடுவதில்தான் எங்கள் கவுரவம் அடங்கியிருந்தது. அணி பிரிக்கும் முறைகள்தான் குறிப்பிடத் தகுந்தவை. ஆரம்பத்தில், இரு கேப்டன்கள் நியமித்து, அவர்களாகவே பிடித்தமான ஆட்களை தேர்வு செய்துகொள்ளும் எளிய முறையைத்தான் பின்பற்றினோம். பின்னாளில் அவன் மட்டும் நல்ல நல்ல ப்ளேயரா எடுத்துக்கிறான் எங்களுக்கு மட்டும் டொச்சா.. போன்ற குற்றசாட்டுக்களால் அம்முறையை கைவிட்டொம். பின் கேப்டன்களை ஓரமாக நிற்கச் செய்துவிட்டு இவ்விருவராக தூரம் சென்று.. தங்களுக்கு வேறுவேறு பெயர் சூட்டிக்கொண்டு கேப்டன்களிடம் யார் வேண்டுமென கேட்ப்போம். உதாரணத்திற்கு, ரஜினி கமல் என்ற பெயர் சூட்டிக்கொண்டு ரஜினி வேண்டுமா கமல் வேண்டுமா எனக் கேட்போம். கேப்டன் எவர் பிரியரோ அவரை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் இதில் பிக்ஸிங்கெல்லாம் கூட நடக்கும். என்ன பெயர் கேட்டாலும், “நீ அவன்ட்ட போயிரு, நான் இவன்ட்ட போயிர்றேன்” என்பது மாதிரி. இங்கே பெயர் என்பது சும்மா பேருக்கு. இப்படி ஆள் பிரிப்பது சலிப்புத் தட்டவே, ரஜினி அணி, கமல் அணி, தல அணி, தளபதி அணி எனப் பிரிந்தோம். கொடுமை என்னவெனில் கமல் அணிக்கும், தளபதி அணிக்கும் ஆட்கள் போதமாட்டார்கள். பெருந்தன்மையாய் மற்ற அணியிலிருந்து அவர்களுக்கு ஆட்கள் தந்து உதவுவார்கள்.

      வெயில், கிரிக்கட்டில் எங்களைப் பாடாய்ப்படுத்திய ஒரே வஸ்து. 20 ஓவர்கள் என்பது பதினைந்தாகி, பணிரெண்டாகி பின்பு 8 ஓவர்களில் நின்றது. பிரச்சனை அத்தோடு தீரவில்லை. டெயில் எண்டர்களுக்கு பேட்டிங்கில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற பெரும் பிரச்சனை வெடித்தது. ஆலோசனைக் குழுவைக் கூட்டி உடனடி தீர்வென்னவென யோசித்ததில் டெஸ்ட் மேட்ச்கள்தான் ஒரே வழியாய் தோன்றியது. எங்களுக்கு வெயில்தான் பெரிய பிர்ச்சனையாயிருந்தது. மைதானத்தின் வெளியே கட்டிடங்கள் சூழ ஒரு அரச மரத்தின் அடியில் பிட்ச் உருவாக்கினோம். அப்போது எங்களுக்கு எல்லாமே கிரிக்கட்தான். ஊர் மத்தியில் புதிதாக அமைத்த மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் கூட எங்களால் கிரிக்கட் மட்டுமே ஆட முடிந்தது. தீபாவளி, பொங்கல், ஊர்த் திருவிழா என எதுவாகினும் எங்கள் கொண்டாட்டம் பேட் பாலோடு மைதானத்தில்தான் இருக்கும். ஆயுத பூஜைக்கு பேட், ஸ்டம்புகளுக்கு பொட்டு வைத்த நிகழ்வுகளும் உண்டு.

      டெஸ்ட் மேட்ச்கள், எங்களுக்குள் இருந்த ராகுல் ட்ராவிட்களை உசுப்பிவிட்டன. ஒருத்தர் விடாமல் கட்டை போட்டு சாவடித்தனர். போதாக்குறைக்கு ஒரேயொரு ஸ்டம்பைத்தான் நட்டு வைத்திருந்தோம். நேரடியாக அல்லாமல் ஒன் பிட்ச்ட் பிடித்தாலே அவுட் என முடிவானது. இது ஓரளவு பலன் தந்தது. சரியாக ஸ்கொயர் ஃஆப் திசையில் யுவராணி வீடு இருந்ததால், ஆளாளுக்கு அங்கே தூக்கியடிக்க சுவரேறி இறங்கி தாவு தீர்ந்தது. சிலர் தவிர்த்து அனைவருமே எல்லாத் திசையிலும் தூக்கியடித்தனர். கட்டடத்தின் மேலே தூக்கியடித்தால் அவுட்டென முடிவானது. சிக்ஸர் என்பது கட்டிட சுவரில் நேரிடையாக மோதினால் மட்டுமே எனச் சுருங்கியது. விதிமுறைகள் இறுக்கமாகமாக வினோத் அடுத்த அஸ்திரத்தை எடுத்தான்.

போட்ட பந்துகள் ஒன்றினைக் கூட மட்டையில் வாங்காமல், உடம்பிலேயெ வாங்கி, நிழலில் நின்றவர்களையும் சோர்வடையச் செய்தான். வேறென்ன செய்ய… தொடர்ந்து மூன்று முறை உடலில் வாங்கினால் அவுட் என்ற விதிமுறை இயற்றினோம். அதிலும் இரண்டு முறை உடலில் வாங்கி மூன்றாவது பந்தினை அடிக்காமல் விலகியோடும் பெருமூளை வீர சாகசங்களும் அரங்கேறின. அடிக்கடி டாஸ் பந்துகள் போட்டு அதனால் நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஒன் பிட்சில் தன் விக்கட்டைப் பறி கொடுத்த இழி நிலையப் போக்க டாஸ் பால் வீசக் கூடாது என முடிவானது. நெடுங்காலன் வெங்கடேஷ் செய்தது அராஜகத்தின் உச்சம், லெக் சைடில் மரநிழல் இருக்கிறதெனினும் கட்டிட மறைவில்லையென்பதால், எத்தனை ஃபீல்டர்கள் இருந்தாலும் ஃஆப் சைடில் மட்டுமே நிறுத்தியிருப்போம். போட்ட பந்துகள் அனைத்தையும் லெக் சைடிலேயெ அடித்து ஃபீல்டர்களை தெறிக்க விட்டான். பிறகென்ன மூன்று முறை லெக் சைடில் ஷாட் அடித்தால், லெக் சைடில் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பந்து நேரடியாக விழுந்தால் அவுட் என்ற விதிமுறை தயாரானது.

      இத்தனையித்தனை விதிமுறைகளுக்கு பின்னால் நடந்த சண்டைகளும் கூச்சல், குழப்பங்களும் அழகழகான நாரதர் கழகங்கள். தவறுதலாக ஒரு பந்து அதிகம் வீசிவிட்டால் அதற்கொரு பஞ்சாயத்து. பந்து வீச இருக்கும் கோட்டினை கால் கட்டைவிரல் தாண்டினால் அதற்கொரு சண்டை. ஒரே பக்கத்தில் 50 மற்றும் சிங்கத்தை வடிமைத்த ஐம்பது பைசா நாணயத்தில் எது டெய்ல், ஹெட் என்பதில் இருந்த குழப்பம் இந்திய அரசையே கேள்வி கேட்கவல்லது. அடித்த பந்து மரத்திலிருந்து ஒன் பிட்ச்ட் பிடித்து அவுட் கேட்டதால் கோபமுற்ற ஆனந்த், பேட்டினை இரண்டாக உடைத்தது மாதிரியான போர்க்காட்சிகளும் உண்டு. மரத்திலிருந்து நேராக அன்றி தரையில் பிட்சாகி பிடித்தால் அவுட்டில்லை என்றானது. சர்வதேச மேட்ச்கள் எதிர்கொண்ட ‘பந்தை எறிகிறான்’ பிரச்சனை எங்களையும் தாக்கியது. இதற்கும் நாங்கள் பந்து வீசியல்ல எறிந்துதான் விளையாடினோம். எறிவதிலும், எறிகிறான் பஞ்சாயத்துக்கள் விழுந்தது சுவாரஸ்ய முடிச்சு. தூஸ்ரா, கேரம் முறைகள் போல் ‘அய்யய்யோ கொல்றான்’ முறையில் அம்மாதிரியான எறிபந்துகளை நோபால் என அறிவித்தோம். லெக் சைட் எல்லை தாண்டிய பந்துகளை மயிரிழையில் ஸ்கெட்ச் போட்டு காப்பாற்றும் கண்கட்டு வித்தைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரே நாளில் ஏழு டெஸ்ட்கள் கூட ஆடியிருக்கிறோம். பதினாங்கு இன்னிங்ஸ். களைப்பென்ற வார்த்தைக்கு அர்த்தமே கூட தெரியாத காலமது.

யுவராணி தவிர்த்து இன்னும் இரண்டு பென்கள் பற்றி சொல்லாமல், இந்தக் கட்டுரையை நிறைவு செய்யமுடியாது. காலம் போன கடைசியில் சைக்கிள் கற்றுக்கொள்ள வந்த பாக்யலஷ்மி. அவள் சைக்கிள் கற்றுக்கொள்கிறேனென மைதானம் சுற்ற நாங்கள் பந்தெடுக்கிறோம் என அவளைச் சுற்றினோம். ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல், ‘நானும் உங்களோட கிரிக்கட் விளையாட வரவா?’ எனக்கேட்டு அவளே கோதாவில் குதித்தாள். அவளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்தது நான்தான். திரைப்படங்களில் கதாநாயகிக்கு, நாயகன் வயலின் வாசிக்க கற்றுக்கொடுப்பானே அதுபோல். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு அவள் எங்களுடன் ஆடிய கிரிக்கட்தான் இதுவரையிலான எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான சற்றே சங்கடமான கிரிக்கட். ஒரு நன்பகல் நேரத்தில் தெருச்சண்டைகளில் பெரும்புகழ் பெற்ற அவளம்மா, பாக்யலஷ்மி மயிர்க்கற்றையை கொற்றாக பிடித்து இழுத்துப் போனபோது முடிந்தது அந்த கிரிக்கட்.

இன்னொரு பெண், இந்தப் பள்ளி வாட்ச்மேனின் மனைவி. ரொம்பவே களையான முகம் கொண்ட அக்கா. சோர்வான நேரத்தில் அவர் வீட்டில்தான் தண்ணீர் கேட்டு குடிப்போம். சொம்பில் தந்து கொண்டிருந்தவர், எங்களின் எண்ணிக்கை கருதி தினமும் ஒரு குடம் நிறைய தண்ணிரும் அதற்கொரு சொம்பும் வைத்துத் தந்துவிட்டார். தன் ஐந்து மற்றும் மூன்று வயது குழந்தையுடன் அவ்வப்போது மைதானம் விஜயம் செய்து பிள்ளைகளை ஓடியாடி விளையாடப் பணிப்பார். ஊருக்கு புதிதென்பதால், ஊர் பற்றி நிறையக் கேட்பார். எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவார். அப்படி போகிறபோக்கில் அவர் கேட்ட கேள்விதான் ரொம்பவே விஷேசமானது. ‘இப்டி இங்கயே திரியிறீங்களே, உங்க எல்லாத்துக்கும் வேலைனு எதுவும் இல்லையாப்பா? இன்னும் எத்தன நாளைக்குத்தான் வீட்ல சும்மா சாப்ட்டுட்டே இருப்பீங்க?’ இந்தக் கேள்விகள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் எங்களுக்கு தந்துவிடவில்லை. அப்போதைக்கு சிரித்து மழுப்பிவிட்டாலும், அதன்பிறகு அவரை நேருக்குநேர் எதிர்கொள்வதில் இருந்த சங்கடமும், பதற்றமும் எதையோ உணர்த்தியது.

      ஒவ்வொருவராக ஒவ்வொரு திசையில் பறந்துவிட்டோம். இப்போது அனைவருக்கும் வேலையிருக்கிறது. தனியாளாக பந்தென்ன, பேட்டும் கூட வாங்கிவிடும் அளவிலான பொருளாதாரம் இருக்கிறது. கூடி விளையாடத்தான் ஊரில் யாருமில்லை. சமீபத்தில் மகளை அழைத்துக்கொண்டு அவளின் புது சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மைதானம் சென்றிருந்தேன். நாங்கள் விளையாடிய அரச மரத்தடியில் இன்னொரு கும்பல் விளையாடிக் கொண்டிருந்தது.

ஹேய் பேட்ல படவே இல்ல…

பேட்ட ஸ்ட்ரைட்டா போட்றா…

நான் ரீச்சான பின்னாடிதாண்டா அவன் ஸ்டம்ப்ல அடிச்சான்…

அய்யா ஹிட் விக்கட் இருக்குனு முன்னாடியே சொன்னீங்களா…

நீ கேட்ச் பிடிச்சு ஒருத்தன் அவுட்டாகிப் போறது நான் சாவுறதுக்குள்ளயாச்சும் பாத்துறனும்டா…

என்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மகளுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.



       

Tuesday, January 27, 2015

நயன்தாராவின் காரதோசை !!!

இது நான், அடிக்கொருமுறை வந்து செல்லும் ஊர்தான். சென்ற வாரம் கூட வந்திருந்தேன். ஒரே வாரத்தில் பெரிய மைதானம் போலிருந்த சாலையோர ஊர் மந்தையில் இப்படியான ஒரு நீச்சல் குளத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான் மூக்கின் நுனியை மெலிதாய்க் கீறும் பெரிய ஆச்சர்யம். நீச்சல் குளம் கிடக்கிறது, தூரத்திலிருந்து கடலைப் பார்த்தால் தெரியும் நீல நிறத்திலான தண்ணீரை எங்கிருந்து கொனர்ந்தார்கள்?! குளத்தில் நத்தை ஊர்வது மாதிரியான மெல்லிய அலைகள் வேறு தோன்றுகிறது. செவ்வக வடிவிலான குளத்தை சுற்றிலும் கம்பி வலையால் வேலி அமைத்திருக்கிறார்கள். கம்பி வேலிதான், முட்கம்பி வேலியல்ல. உள்ளெ யார் குளித்தாலும் இங்கிருந்தே காணும்படியான அமைப்பு.

எட்டிப் பார்க்கும் அவசியமில்லாமலே எல்லாம் தெரிந்தாலும், நீச்சல் குளமென்றானபின் எட்டிப் பார்ப்பதுதானே முறை. எட்டிப் பார்த்தேன். நீரின் நிறத்துக்கு போட்டியாய், நீல நிறத்திலான நீச்சலுடை அணிந்த பெண்ணொருத்தி நீந்திக் கொண்டிருக்கிறாள். மல்லாக்கப் படுத்து வானம் பார்த்தபடியான ஒய்யார நீச்சல். என் கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறாளா… சாலையில் செல்லும் எந்த ஜீவனும் அவள் நீந்துவதை ஒரு பொருட்டாகவே மதித்தாக தெரியவில்லை. நெரிசலான காலை நேர சாலைப் பயணத்தில் சக மனிதனுக்கு விபத்து நேர்ந்துவிட்டால், எதேச்சையாய்க் கூட திரும்பாமல் நகரும் நகரவாசிகள் போல் முகம் திருப்பாமல் கடக்கிறார்கள். மெல்ல கம்பி வேலியொட்டி நடந்து கொண்டிருக்கிறேன்.

நீச்சல் செய்து கொண்டிருந்தவள் குளத்தின் கரை மேலேறி என்னை கை நீட்டி அழைக்கிறாள். பின் பக்கமும், பக்கவாட்டிலும் திரும்பிப் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. தீர்க்கமாய் அவள் என்னைத்தான் அழைக்கிறாள். இந்த முகத்தையும் வாளிப்பான இந்த உடலையும் எங்கோ பார்த்திருக்கிறேன். ஒரு நடிகையாகவோ, கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாவோ, எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் படிப்பவளாகவோ, திருவிழாக் கூட்டத்தில் சிமெண்ட் நிற சுடிதார் அணிந்து டெல்லி அப்பளம் உண்பவளாகவோ, வங்கியில் பேனா கடன் கேட்பவளாகவோ, முகத்தை கீழிருந்து மெதுவாய் மேல் நகர்த்தி நேராக கண்ணுருட்டி முனகி முந்தானை சரி செய்பவளாகவோ இருக்கலாம். உள்ளே நுழைந்து கரையோரமாகவே நடந்தேன். புசுபுசுவென்றிருந்த நீல நிற டர்க்கி டவலால் தலை துவட்டிக் கொண்டிருக்கிறாள். முன்பக்கமிருந்த முடிக் கற்றையை ஒரே கழுத்துத் திருப்பலில் முதுகு பக்கம் கடத்திவிட்டாள் கள்ளி. இந்த முகம்.. முகம்… அட நம்ம ஷ்ருதிஹாசன்.

ஷ்ருதிஹாசன் எதற்கு சென்னையிலிருந்தோ.. மும்பையிலிருந்தோ.. பயணித்து இங்கே வந்து குளித்துக் கொண்டிருக்கிறார்?! அதுவும் ஊர் மத்தியில்… மொத்தச்சனமும் நடமாடும் இந்தச் சாயந்தர வேளையில். அப்பா போலில்லாமல் ஷ்ருதி கடவுள் மீது மிகுந்த பக்தியுடையவரென படித்திருக்கிறேன். மேல்மருவத்தூர் ஆதி பராசக்திக்கு மாலைபோட்டு இந்தக் குளிரில் இங்கு வந்து குளிக்கிறாரா… எங்கள் ஊரில் வந்து கூட குளியாமல், பக்கத்து ஊரில் என்ன குளியல் வேண்டியிருக்கிறது? ஒருவேளை எனக்கு நீச்சல் தெரியாதென்பதை அறிந்து அதனைக் கற்றுக்கொடுக்க வந்திருப்பாரோ… ஷ்ருதிஹாசனோடு கிளூகிளுப்பாய் எதுவும் நடந்துவிடாது எனினும், அவர் கைகளில் என்னை ஏந்தி, “கால நல்லா ஃபோர்ஷா அடிங்க, கைய அப்டியே விலக்கி தண்ணிய ரெண்டுபக்கமும் தள்ளுங்க” எனக் கற்றுக் கொடுப்பது போல் கற்பனை செய்வது எளிதாக இருந்தது. ஏதோ எதாச்சையாய் நான் வந்ததால் ஆயிற்று. இன்று விடுப்பெடுக்காமல் அலுவலகம் சென்றிருந்தால் அல்லது வீட்டில் ஆட்டுப்பால் வாங்கிவர என்னை அனுப்பாதிருந்தால்.. நினைத்தாலே பதறுகிறது. நான் வராதது கண்டு கலங்கி இரவு முழுதும் கூட நீச்சலடித்தபடியேதானே இருந்திருப்பார்.. நல்லவேளை வந்தேன். ஆனாலும் கமல்ஹாஷன், தன் மகளை இத்தனை சுதந்திரமாய் வளர்த்திருக்கக் கூடாது.     

அங்கிருந்த தலை தூக்கிப் படுத்திருக்கும் முதலை வடிவிலான நாற்காலியில் என்னை அமரச் செய்து, எதுவும் பேசாமல் ஒரு சிறு புன்னகையை மட்டும் வீசிவிட்டு அந்த இடத்திலேயே உடை மாற்றியும் கொண்டார். இடது தோள்பட்டையிலிருந்த உடையின் பாவாடை நாடா மாதிரியான பகுதியை வலது கையால் உருவி எடுக்கும்போதே என் பின்னதலையில், யாரொவொருவர் சொல்லிக்கொள்ளாமல் பெருங்கம்பியால் தாக்கிய அதிர்வலை தோன்றி மறைந்தது. ஷ்ருதி இதையெதையும் அறியாமலோ, அறிய ஆர்வம் காட்டாதவராகவோ முகத்தை வைத்துக்கொண்டு இரண்டொரு நொடிகளில் தயாராகிவிட்டார். எதற்கு தயாரானார் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அவருக்கு தெரிந்திருந்திருக்கலாம், தயாராகிவிட்டாரே!

அமர்ந்த இடத்திலேயே கால் விரல் நுனி கூட அசையாமல் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவர், உதடு விரித்து மெல்லமாய் பாட ஆரம்பித்தார். கண்ணழகா… காலழகா… பெண்ணழகா… பொன்னழகா….. ”உங்களுக்கென்னங்க எல்லாமே அழகுதான். இந்த மூக்குதான் ஏதோ ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணினதா சொன்னாங்க ஆனாலும் அழகுதாங்க” எனச் சொல்லத் தோன்றியது எதுவும் பேசிக் குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தேன். அவர் முழுப்பாடலும் பாடி முடிக்காமல் விடமாட்டார் போல் தெரிந்தது. பாடல் காட்சியின்போது தம்மடிக்கச் செல்லும் தமிழகத்தின் கலாச்சார மரபு என் ரத்தத்திலும் ஊறிப் போயிருந்ததால் ஷ்ருதிஹாசனை அம்போவென விட்டுவிட்டு சிகரட் வாங்கச் சென்றுவிட்டேன்.


இப்படித்தான் சென்ற மாதம், சரவணபவனில் காரதோசை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தேன். சரியாக பதிமூன்று நிமிடங்கள் கழித்து, காரதோசையை எடுத்து வந்து என் மேசையில் வைத்தது நயன்தாரா..   

Monday, January 20, 2014

பசித்த இரவு !

தூங்கிவிட்டதாய் நம்பியபடியே படுத்திருக்கிறேன். உண்மையில், கண்கள் மூடி காட்சிகளை மட்டும் உள்ளுக்குள் விரியச் செய்திருக்கிறேன். இந்த இரவை கடந்தே ஆகவேண்டும், ஆனால் அது அத்தனை எளிதல்ல. பசி, பழக்கப்பட்ட ஒன்றுதான் எனினும், பசியோடு இத்தனை நீண்ட இரவை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. சாதம் பிசைந்த கையோடு வெளியே துரத்தப்பட்டிருக்கிறேன். எங்கே செல்வதெனத் தெரியாமல் விரட்டியடித்த வீட்டின் மாடி அறையிலேயே படுத்திருக்கிறேன். எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன் என்பது பற்றி தெளிவில்லை. ஒரு யுகமோ, ஒரு மாதமோ, ஒரு நொடியோ கடந்திருக்கலாம். இரை கொத்தி திரும்பும் கோழியின் தலை போல் நிலையில்லாமல் புரண்டபடியே கிடக்கிறேன். இனி உறங்கமுடியாது.

விளக்கை போட்டு அறைக்கு வெளிச்சம் பாய்ச்சி, அலமாரியில் களைந்து கிடக்கின்ற புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்டுகிறேன். வாசிக்க வாசிக்க எழுத்துக்கள் எதுவும் மூளையைத் தொடாமல் வயிறை மட்டுமே குறி வைத்து தாக்குகிறது. வயிற்றிலிருந்து அவ்வப்போது புறாக் கூட்டத்திலிருந்து வெளிப்படும் சத்தம் மாதிரியான ஒலி உற்பத்தியாகி இம்சிக்கிறது. சுவாச இடைவெளியில் சுருங்கிய வயிறு விரிய மறுக்கிறது. நா வறண்டு உமிழ்நீர் சுரப்பைத் துண்டிக்கிறது. எச்சில் விழுங்கக் கூட வழியில்லாத இயலாமை என்னை ஏளனம் செய்யத் துவங்குகிறது. ஏளனம், அழையா விருந்தாளியாய் கோபத்தை இழுத்து வருகிறது. என் கோபம் தணிக்க புத்தகத்தை ஆக்ரோஷமாக கிழிக்கத் துணிகிறேன். அது கிழிய மறுத்து அடம்பிடிக்கவே கிழித்தே ஆகவேண்டிய வெறி கொள்கிறேன். இரு கைகளிலும் பிடித்து, இலக்கில்லாமல் மருகியோடும் இளங்கன்றுகுட்டியொன்றின் ஓட்டத்திற்கொப்பானதொரு சிறு பிரளயம் நிகழ்த்தி முடிந்தமட்டிலும் கிழித்து அறை முழுதும் வீசி எறிகிறேன். ஆறாம் அறிவு மொத்தத்தையும் கோபம் கபளீகரம் செய்துகொண்டுவிட்டது. இனி என்னால் சிந்திக்க முடியாது.

அங்கிருந்த மின் விசிறியை எட்டி உதைக்கிறேன். அது தலை திருப்பி என் முகத்தில் இனி முழிக்கவே கூடாதென கவிழ்ந்து விடுகிறது. இன்னும் அடங்காத ஆத்திரத்தில் தொலைகாட்சி பெட்டியை கீழே தள்ளிவிடுகிறேன். இத்தனை கோபத்திலும், பைத்தியக்காரச் செயல்களிலும் கூடவே இருக்கிறது வயிற்றில் பசி. நேரம், முன்னிரவை கடந்து விட்டிருக்கிறது. அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த பொருட்களில், கண்களுக்கு சிக்கிய அனைத்துப் பொருட்களையும் இடம் மாற்றி, தூக்கி வீசி எதை தேடுகிறேன் என்ற பிரஞ்ஞை கூட இன்றி எதையோ மும்மூரமாக தேடுகிறேன். எல்லாவற்றையும் அலங்கோலப்படுத்தியத்தில் கிடைத்த சில்லறைக் காசுகளை பொறுக்கிக்கொண்டு, இதுவரை தாழிட்டு என் பசியின் மௌன சாட்சியாயிருந்த கதவினையும் விட்டுவைக்காமல் பெருஞ்சத்தத்துடன் அறைந்து சாத்திவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

பையில் இருக்கும் சில்லறைக் காசுகளுக்கு இரண்டு வாழைப்பழங்களோ அல்லது ஒரு சிகரட்டோ வாங்கலாம். நான் ஒரு சிகரட் வாங்கிக்கொண்டு நகர்ந்தேன். இந்த பின்னிரவில் நான் சிகரட் பிடிப்பதை எவரும் பார்த்து தந்தையிடம் வத்தி வைக்க வாய்ப்புக் குறைவுதான் எனினும், எனக்கிப்போது தனிமை அவசியம். எதிரில் யாரைக் கண்டாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளச் செய்யும் வினோத வியாதியான பசியால் பீடித்திருக்கிறேன். சிகரட்டை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சுடுகாடு நோக்கி நடக்கிறேன். மயான பூமியின் பேரமைதி எத்தனைக் கொடுமையான தனிமைக்கும் சிறிதேனும் ஆசுவாசம் தரவல்லது என்பதில் பெரும் நம்பிக்கையுண்டு எனக்கு. யார் மேல் கோபம் என்பதே விளங்காத பல பொழுதுகளில் மயானம் சென்று தனிமையில் அமர்ந்துவிட்டு வருவது எனக்கு வழக்கமான ஒன்றுதான் என்பதால், எவ்வித உந்துதலும் இல்லாமல் அனிச்சையாகவே மயானம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

சிறிதும் பெரிதுமாய் பத்துப் பதினைந்து சமாதிகளும், சிற்சில மணல் மேடுகளும் ஒரேயொரு தகனக் கொட்டகையும் கொண்ட ஓரளவிற்கு மதிப்பான சுடுகாடுதான். நானும் பிணங்களும் மட்டுமே இருக்கும் இந்தத் தனிமை வசீகரிக்கிறது. தோற்றம் மறைவு கல்வெட்டு பதித்த ஒரு உயர்தர சமாதி மீதேறி அமர்ந்துகொண்டேன். யாரோ அய்யாவு என்பவர் 1927இல் பிறந்து 1999இல் இறந்திருக்கிறார். ஏனென்றே தெரியாமல் சிரிப்பு வருகிறது. எத்தருணத்தில் வேண்டுமானாலும் மடையுடைத்து வெளிவர காத்திருக்கும் ஆற்று வெள்ளம் போல் இரு கண்களிலும் நீர் கோர்த்து முண்டியடித்துக்கொண்டு படிந்திருக்கிறது. மெலிதாய் சிரித்துக் கொண்டேன். எதற்காக இப்போது சிரிக்கிறேன் என்பது தெரியவில்லை.ஒருவேளை அய்யாவுவிற்கு தெரிந்திருக்கலாம். சிலீரென்ற காற்றுப்பட்டு மெலிதாய் உடல் குளிர்கிறது. இன்னும் சிறிது நேரம் இதேபோல் காற்று வீசிக் கொண்டிருந்தால் உடல் நடுங்க தொடங்கிவிடும்.

பையிலிருந்த சிகரட் எடுத்து உதடுகளுக்கிடையில் நட்டுவைத்து, தீப்பெட்டி தேடும்போது உறைக்கிறது, எடுத்து வரவில்லை. காற்று வீசாமலே உடல் நடுங்கத் தொடங்குகிறது. இந்த சிகரட்டை இப்போதே பற்றவைத்தாக வேண்டும். மனதோ, மூளையோ எதன் கட்டளை பொருட்டோ, இருளை கண்களுக்கு பழக்கிக்கொண்டு கண்ணிவெடி தேடும் பதட்டத்திலும் லாவகத்திலும் சுடுகாட்டைச் சுற்றி வருகிறேன். அருகிலிருந்த புதரில் சரசரவென ஏதோவொன்று அவசரமாய் ஊர்ந்து நகர்கிறது. சத்தம் மட்டுமே கேட்க முடிகிறது. இருளில் இம்மாதிரியான சத்தங்கள் வேறெந்த பிராணியையும் தவிர்த்து பாம்புகளைத்தான் நமக்கு கற்பனை செய்யத் தூண்டும். நானும் விதி விலக்கல்ல. இப்போது தீப்பெட்டியை விட்டுவிட்டு மெல்லக் குனிந்து அப்புதரினை நோட்டம் விடுகிறேன். உள்ளிருந்து 'ஸ்ஸ்ஸ்ஸ்' என பாம்பொன்று படமெடுத்து வந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அப்படியெதுவும் நிகழ்ந்திடவில்லை. இன்னும் சற்று முன்னேறி கொஞ்சம் ஆழமாக கண் பதிக்கிறேன். எந்த சலனமும் இல்லாமல் மற்றுமோர் சடலம் போல் கிடக்கிறது அந்தப் புதர். கொட்டகையில் பிணம் எரித்த கங்கிருந்தால் வசதிப்படுமென தோன்ற.. வேகவேகமாய் தகன கொட்டகை நோக்கி ஓடி பார்த்தததில், சாம்பல் குவியலுக்கிடையில் ஒரு மண்டையோடும், சில எலும்புத் துண்டுகளும் மட்டுமே கிடந்தன.

உரக்கக் கத்த வேண்டும்போல் இருந்தது. கத்துகிறேன் ஏதேதோ வார்த்தைகள் நிரப்பி, சத்தம் வந்தால் போதுமென்ற நிலையில் கத்திக்கொண்டே இருக்கிறேன். இன்னும் உரக்க கத்துகிறேன். என் சத்தம், பேய்களை தொந்தரவு செய்து அவைகள் சண்டைக்கு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. என் தலைக்கு நேர் மேலே மரத்தில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களை கலைத்து விடாமல் இருந்தால் போதும். திடீரென ஏதோ தோன்ற, கொட்டகை கம்பியில் கை விட்டுப் பார்த்ததில் ஒரு தீப்பெட்டி அகப்பட்டது. பெருமூச்சொன்று அதுவாய் வருகிறது. இத்தனை நேரம் தீப்பெட்டியை மட்டுமே சிந்தித்து தூங்கிக் கொண்டிருந்த பசி, மீண்டும் முழித்துக்கொண்டுவிட்டது. சிகரட் புகை, வறண்ட தொண்டை வழியே உட்புகுந்து குடலை அடைத்துத் திரும்புகிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்காவது முறை வழிக்கும்போது மனம் கட்டுப்பட்டு மெல்ல நிலை பெறுகிறது. புகைத்தபடியே மீண்டும் அய்யாவு சமாதி மேல் தஞ்சமடைந்தேன். எதிலாவது முட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன்பென்றால் முட்டியிருப்பேன். இப்போது, முட்டினால் வலிக்கும் என்பதை உணர முடிகிறது. கொஞ்சமாய் அழுது கொண்டேன். இந்த இரவில், அதுவும் இடுகாட்டில் அமர்ந்து அழுதாலும்... இதை யாரும் கவனிக்கவில்லை என்பதை சுற்றும் முற்றும் பார்த்து ஊர்ஜீதம் செய்துகொண்டேன்.

இறந்துவிட்ட அட்டைப் பூச்சியொன்றை இழுத்துப்போகும் எறும்புகள் போல் ஏதேதோ நினைவுகள் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போதும் பசி இருக்கிறது. பழகிய நாய்க்குட்டி போல் எவ்வித உறுத்தலும் இன்றி அதுபாட்டிற்கு இருக்கிறது. இந்தப்பசி நெறையவே போதிக்கிறது. நெறைய சவுடால்கள் விடுகிறது. குறிக்கோளை அடையச் சொல்லி நிர்பந்திக்கிறது. எனக்கான உணவை என்னையே தேடச் செய்யும் அற்புத நிலைக்கு துரத்துகிறது. இத்தனை நேரம் கண்ணில் மாட்டாத நட்சத்திரங்கள் மெல்லத் தலை காட்டுகின்றன. அன்னாந்து பார்த்தபடியே அய்யாவு சமாதி மீது சாய்ந்து படுத்துக் கொண்டேன். நட்சத்திரங்களுக்கு பெயர் வைத்து விளையாடுகிறேன். அதில் ஒன்றின் பெயர் அய்யாவு, எத்தனை ஜம்பமாய் வாழ்ந்தாரோ... இத்தனை பெரிய சமாதி எழுப்பியிருக்கிறார்கள். இதோ அடுத்தவேளை உணவிற்கு வக்கில்லாத ஒருவனின் காலுக்கு கீழேதான் கிடக்கிறார். இதே சுடுகாட்டில் நண்பன் ஒருவனின் தந்தையை புதைத்தார்கள். நான் முதன்முதல் பார்த்த மயான நிகழ்வது. பிறங்கையில் மூன்று முறை மண்ணைத் தள்ளியவுடன் மொத்த மண்ணையும் இட்டு நிரப்பி மூடிவிடுகிறார்கள். இரண்டொரு மழையில் அந்த மணல் மேடும் கரைந்து சமதளமாகிவிடுகிறது. எவ்விடத்தில் அவரைப் புதைத்தோம் என்பதை தேடக் கூட முடியாது. நட்சத்திரங்கள் பெயர் மாறி ஒவ்வொன்றிற்கும் காதலிகள் பெயர் சூட்டிக் கொள்கின்றன. பெண்களுக்கு பசியை மறக்கடிக்கச் செய்யும் வல்லமை இருக்கிறது. பசியை துரத்திவிட்டு பெரும்போதையை உள்ளே செலுத்திவிடுவார்கள். காதலிகள் புடைசூழ, சுடுகாட்டு இருளில், அய்யாவு சமாதி மீது பசியோடு படுத்திருக்கும் இந்தச் சூழல் சுகமாயிருக்கிறது.திடும்மென வெண்புடவை கட்டிக்கொண்டு ஏதேனுமொரு மோகினி பிசாசு வராதா...  என்ற ஏக்கம் வேறு சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் மனதில் சேர்கிறது.

நினைவுகளோடு சேர்ந்துகொண்டு மெலிதாய் காற்றும் வீச, சுருண்டு படுத்துக்கொன்டதில் எப்போது தூங்கினேன் என்பதே தெரியவில்லை. விடிந்து விட்டது. இரவு முழுதும் பின்னணி வாசித்துக் கொண்டிருந்த தவளைகள் ரீங்காரம் நின்றிருந்தது. நட்சத்திரங்களை காணவில்லை. சூரியன் மட்டும் முகத்தில் அறைந்து இளஞ்சூட்டை நிரப்பி என் தூக்கத்தை கலைத்து விட்டிருந்தது. சமாதியை விட்டு அகன்று மெல்ல நடக்கத் தொடங்குகிறேன். இரவு வந்த பாதைதான் ஆனால் இப்போது வெளிச்சம் நிரம்பி காட்சிகளுக்குள் புது நம்பிக்கை தருகிறது. மயான முடிவுவரை வந்தபின் திரும்பிப் பார்த்தேன். அய்யாவு பலமாகச் சிரித்தார். மெதுமெதுவாய் மொத்தப் பிணங்களும் இடி இடித்தது போல் பெருஞ்சத்தத்துடன் சிரிக்கத் தொடங்கின. காதுகளை அடைத்துக்கொண்டு பிரதான சாலைக்கு வந்துவிட்டேன். இருளைவிட வெளிச்சத்தில் பாதை தெளிவாகத் தெரிகிறது. நிச்சியம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும் !


     


   

Wednesday, December 11, 2013

ஹேப்பி பர்த்டே தலைவாஆஆஆ


#HBDThalaivaa முதலில், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலை படத்தில் ஒரு காட்சி, எல்லாம் இழந்து நிற்கும் ரஜினி தன் நண்பனை பார்த்து கை விரல்களில் சொடுக்கு போட்டபடி இப்படி ஆரம்பிப்பார், அசோக் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ இந்த நாள்... உனக்கு எனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடுச்சு, இந்த யுத்தத்துல உன்ன விட பேர், பணம், புகழ், அந்தஸ்து சம்பாரிச்சு பல அடுக்கு மாடி ஹோட்டல்கள் கட்டி உன் முன்னேற்றத்த தடுத்தி நிறுத்தி நீ எப்ப்டி என் வீட்டு இடிச்சு என் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ அதே மாதிரி உன் வீட்ட இடிச்சு உன் குடும்பத்த நடுத் தெருவுக்கு கொண்டு வரல எம்பேரு அண்ணாமல இல்லடா... அத்தனை பெரிய சவாலை கோவம், ஆத்திரம், இயலாமை எல்லாம் கலந்து, கைல ஒரு பைசா கூட கிடையாது அடுத்து எண்ணப் பண்ணும்னு தெரியாது. படிப்பறிவும் இல்ல ஆனால் முழுத் தன்னம்பிக்கையோட மீசையை சுண்டி, திமிரோட தொடைய தட்டி, தலைமுடியில் வேர்த்து தேங்கியிருக்கும் வேர்வைத் துளிகள் தெறிக்க தலை சிலுப்பி சொல்லிவிட்டு திரும்பி நடந்து வரும்போது, அப்டியே உடம்பு சிலிர்த்துப் போகும். இந்தக் காட்சியை ரசிக்க ரஜினி ரசிகனாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கைல முன்னேறனும்னு நெனைக்கிற ஏதோவொரு ஆத்மாவாக இருந்தாலே போதும். ஏனெனில் ரஜினி தன் படங்களில் பெரும்பாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சியம் என்பத்தைத்தான் பால பாடமாக வைத்திருந்தார்.


விமர்சனம் இல்லாத கடவுளே கிடையாது. ரஜினி மனிதன்தானே, மகள்கள் திருமணத்திற்கு பிரியாணி விருந்து தருவதாய் சொல்லி இன்றுவரை செய்யவில்லை. இது இப்போதைய பரவலான குற்றச்சாட்டு. போக்கிரியார், அமலா குற்றச்சாட்டு ஒன்றைச் சொன்னார், நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். வேலைக்காரன் படத்தில் ரஜினியுடன் நடித்த அமலாவை ரஜினி துரத்தி துரத்தி இம்சை செய்ததாகவும், அதனால் கொதிப்படைந்த திருமதி. லதா ரஜினி அவர்கள், ரஜினியை விரட்டி விரட்டி அடித்ததாகவும் செவிவழி செய்தி கேட்டிருக்கிறேன். உண்மையில் நடந்ததை நானறியேன். ஸ்ரீதேவியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று, தாம்பூலம் மாற்றும்போது பவர் கட் ஆனதால் செண்டிமெண்ட் சரியில்லை எனச் சொல்லி ரஜினி வேண்டாமான சொன்னதாகவும் சொல்வார்கள். எல்லாமே செவிவழி செய்திகள்தான்.


பத்திரிக்கையாளர் சாவி ஒருமுறை ரஜினியிடம் ஏதேதோ சுற்றம் பற்றி கேட்டுவிட்டு இறுதியில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார், உங்களிடம் வரும் பெண்களை எப்படி அணுகுகிறீர்கள்? அதற்கு ரஜினி, அடக் கடவுளே இதுக்குத்தானா இப்டி சுத்தி வளச்சீங்க... என்கிட்டே வர்ற பொண்ணுங்க அம்மாவா வந்தா அம்மா, சகோதரியா வந்தா சகோதரி, தோழியா வந்தா தோழி, acceptedனு வந்தா accepted. ஒரு காலத்துல பொண்ணு இல்லாம நைட் தூக்கம் வருமான்னு கூட யோசிச்சிருக்கேன் இப்போலாம் அப்டி இல்ல நெறைய மாறிட்டேன். எண்பதுகளின் மத்தியில் எடுத்த பேட்டி என நினைக்கிறேன்.

ரஜினி படங்களில் முதல் பாதியில் ஒரு காமடியான சண்டைக் காட்சியும், கதாநாயகியுடன் சேர்ந்து கொஞ்சம் காமடி காட்சிகளும் இருக்கும். நிஜ வாழ்வில் ரொம்பவே சீரியசாக ஆரம்பித்த அவர் அரசியல் அத்தியாயம் பெரும் நகைப்புக்குறியதாய் மாறிப்போனது. 1991-1996 ஜெயலலிதா தமிழக முதல்வராக முதன்முறை பதவி வகித்த காலகட்டம். ஆடம்பரத் திருமணம், கும்பமேளா குளியல் கூத்து, அதுவரை தமிழகம் கண்டிடாத அளவுக்கதிகமான செக்யூரிட்டி கெடுபிடிகள் என தமிழகத்திற்கு புதிது புதிதான கலாச்சாரங்கள் ஊடுருவியது. தனியார் மீடியாக்களும் இந்த காலகட்டத்தில்தான் தோன்றி பெருக ஆரம்பித்தன. முதல்வர் தங்கியிருக்கும் அதே போயஸ் கார்டன் ஏரியாவில்தான் ரஜினியின் வீடும் அமைந்திருந்தது. காரில் வந்து கொண்டிருந்த ரஜினி, தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு காரணங்கள் காட்டி நடந்து போக பணிக்கப்பட்டார். வழக்கம்போல் அமைதியாக நடந்து சென்றுவிட்டார். ஆட்சி முடியும் தருவாயில் சண் டிவி மிகப்பெரும் மீடியாவாக உருப் பெற்றிருந்தது. அரை மணிக்கொருமுறை ஜெயலலிதாவின் ஆடம்பர வாழ்வை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களோ கலைஞரை நம்பவும் தயாராக இல்லை. ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா படங்களின் அரசியல் பஞ்ச் வசனங்கள் பெரிய விவாதப் பொருளாகின்றன. மூப்பனார் காங்கிரசிலிருந்து பிரிந்து த.மா.கா என்ற கட்சியை தொடங்குகிறார். இந்த சமயத்தில் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்க செல்லும் ரஜினியை மறித்து நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்க, இன்னொருமுறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, எனச் சொல்லி கையெடுத்து கும்பிட்டு சிரித்தவாறே டாட்டா காட்டிச் செல்கிறார். எளிதில் உணர்ச்சி வசப்படும் தமிழக மக்கள், இதற்கும் உணர்ச்சியினை வெளிக்காட்ட தயாரானார்கள். திரும்பி வந்து கட்சி ஆரம்பி தலைவா, நாங்க உங்கள சிஎம் ஆக்குறோம் தலைவா என தமிழ்நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ரஜினிக்கு தரத் தயாராகுகிரார்கள். இடையில் வைகோ, ரஜினியின் ஆதரவை தனக்கு தரும்படி கேட்டு அதனை ரஜினி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் சொல்வார்கள். அமெரிக்காவிலிருந்து மொட்டை போட்டுக்கொண்டு வந்தார் ரஜினி.

என்ன செய்யப்போகிறாரென ஆவலோடு மீடியா, மக்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் காத்திருக்க... ஏதேதோ அரசியல் காய் நகர்த்தல்கள் நடக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்பது தெளிவாகிறது. தமாகா, திமுக கூட்டணிக்கு ரஜினிதான் வித்திட்டதாகவும் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நான் ஆதரவு அளிப்பதாக ரஜினி சொன்னதாகவும் செய்திகள் வந்தன. அப்படியொரு கூட்டணியே அமைந்தது. சன்டிவி நேரடி ஒளிபரப்பில், கலைஞர்ஜி, மூப்பனார்ஜி என ஆரம்பித்து இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தரும் வகையில் சரியாக இருபது நிமிடம் பேசினார். ரசிகர்கள் இந்த கூட்டணி வெற்றிபெற அதிகமாக உழைத்தனர். எதிர்கட்சியின் முதல்வர் வேட்பாளரே தோற்றுப்போகும் அளவிற்கு அமோக பெற்றியை பெற்றது. சில மணி நேரங்களிலேயே காட்சிகள் மாறத் துவங்கியது. அத்தனை நாட்களாக ரஜினி படம் தாங்கிய போஸ்டர்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்தன. மன்ற ஆட்களின் உழைப்பை சுரண்டிய கட்சிக்காரகள் அவர்களை தரக்குறைவாக நடத்தத் தொடங்கினர். கட்சி அலுவலகங்களுக்கு வரக் கூடாதென உத்தரவிட்டனர். ரஜினி ரசிகர்கள் கட்சி வேலைகலிருந்து நேரடியாகவே ஒதுக்கப்பட்டனர். மிக மெதுவாக அரசியல் என்பது  கோஷம் போடுவதும், போஸ்டர் ஓட்டுவதும் மட்டுமே அல்ல என்பது ரசிகர்களுக்கு புரிய ஆரம்பித்தது. புகார்கள் ரஜினிக்கு கொண்டு செல்லப்பட்டது வழக்கம்போல் மௌனத்தை பரிசாக தந்துவிட்டு இமயமலை சென்றார். அங்கே சென்றாவது அரசியல் தெரிந்ததா என்றால் அதுவும் இல்லை.


உலக தேர்தல் வரலாற்றிலேயே, எந்த ஒரு மனிதனும் செய்யாத ஒரு புதுமையை ரஜினி புகுத்த நினைத்தார். மறக்கவே முடியாத நிகழ்வது. கர்நாடக நடிகரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று, பல உள்ளடி வெளியடி வேலைகள் செய்து கிட்டத்தட்ட 108 நாட்களுக்கு பிறகு அவரை வீரப்பனிடமிருந்து மீட்கிறார்கள். இந்த நேரங்களில் ரஜினி மிகவும் துடித்துப் போனார். ஒரு மேடையில், வீரப்பன் ஒரு 'ராட்சசன்' என்கிறார். சக வன்னியனை ஒரு கன்னடத்தான் ராட்சசன் எனச் சொன்னதை பாமக நிறுவனர் ராமதாசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு மேடையில், ரஜினியை அவன், இவன் என ஏக வசனத்தில் பேசி சிகரட் பிடிக்கிறதையும், தண்ணி அடிக்கிறதையும் கத்துக் கொடுத்தத தவிர நீ என்னடா செஞ்சிருக்க நாட்டுக்கு? என மிகக்காட்டமாக சாட, ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். பாபா படத்தின் ரிலீஸ் சமயமது. மதுரைக்கு ஏதோ கூட்டத்திற்கு சென்ற ராமதாசிற்கு கருப்பு கொடி காட்டுகிறார்கள் ரஜினி ரசிகர்கள். கூட்டத்திலேயே அவர்களுக்கு தர்ம அடி கிடைக்கிறது. பாபா படத்தின் படப்பெட்டி சூறையாடப்படுகிறது. ரஜினி, நான் அவர்களை தேர்தல் சமயத்தில் கவனித்துக் கொள்கிறேன் என சூளுரைக்கிறார். லோக்சபா தேர்தல் வந்தது. பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்கிறது. இப்போதுவரை ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையில் எவ்வித சமாதானமோ, உடன்பாடோ, பேச்சுவார்த்தையோ ஒன்றும் நிகழ்ந்திருக்கவில்லை. இப்போதும் ரஜினியின் விரோதி ஜெயலலிதா என்றே சித்தரிக்கப் பட்டிருந்தார். (படையப்பா படத்திலும் ஒரு அதீத திமிர் பிடித்த பெண்தான் வில்லி. படையப்பா படத்தைக் காண அவர் போலவே உள்ளே ரௌண்ட் நெக் டி ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும்  மேல் ஒரு சட்டையும் போட்டுக்கொண்டு போய், டிக்கட் கவுண்ட்டரில் நெருக்கியடித்து பிதுங்கும் கூட்டத்தில் கிட்டத்தட்ட் 45 நிமிடங்கள் நிற்கிறேன் சுவாசிக்க காற்று குறைந்து மயக்கமடையும் சூழ்நிலையில் கவுண்ட்டர் திறக்கப்பட்டு காற்று வந்து உயிர் பிழைத்தேன். இந்த கஷ்டம் எல்லாம் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் மின்னும் வரைதான், அதை கண்டவுடன் மயக்கமாவது, சுவாசக் காற்றாவது) கலைஞர் இன்னும் ரஜினியின் குட் புக்கில்தான் இருந்தார். புதிய விரோதியாக சேர்ந்தவர் ராமதாஸ் மட்டுமே. ரசிகர்களின் மனநிலையும் அஃதே. விட்டார் பாருங்கள் ஒரு அறிக்கை, என் விரோதிகள் என் நண்பர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே பாமக போட்டியிடம் 6 தொகுதிகளில் மட்டும் அவர்களை தோற்கடியுங்கள், என்று. தமிழகமே கொஞ்சம் மிரண்டுதான் போனது. அதே சமயத்தில்தான் முக்காடு போட்டுக்கொண்டு குத்தவைத்து அமர்ந்தவாறு இருக்கும் ரஜினியின் படத்தோடு, 'இறைவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று' என்ற வாசகம் தாங்கிய 'ஜக்குபாய்' படத்தின் விளம்பரங்கள் தமிழகத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளி வந்தது. 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிவிட, ரஜினி வாய்ஸ் மீதான பிம்பம் சறுக்கியது. தலைவர் வழக்கம்போல் இமயமலை பறந்தார்.


எல்லாவற்றையும் உதறிவிட்டு, ஜக்குபாய் படத்தை நிறுத்திவிட்டு, அன்புமணி ராமதாசின், படங்களில் சிகரட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என்ற கோரிக்கையையும் ஏற்று, பி. வாசுவை இயக்குனராக்கி, சிவாஜி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், சந்திரமுகி எனும் படத்தை அறிவித்தார். அவர் அரசியல் செய்தால் என்ன? இமயமலை போனால் என்ன? எங்களுக்குத் தேவை இம்மாதிரியான புதுப்பட அறிவுப்புகள்தானே. சந்திரமுகி பாடல் வெளியீட்டு விழாவில், கண்ணா யானை விழுந்தா எழுந்திரிக்கிறது கஷ்டம். நான் குதிரை டக்குனு எந்திருச்சிருவேன். என்றார் தனக்கே உரித்தான ஸ்டைலில் மைக் ஸ்டேண்டை தட்டியவாறு. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் படமும் ரஜினி படமும் ஒரே நாளில் வெளியானது. கோயம்பத்தூரில் முதல் நாள் முதல் ஷோ எப்படியோ அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கியாயிற்று. சூப்பர் ஸ்டார் ரஜினி என மின்னி மறையும் எழுத்துக்களை காணும்போதே உடலின் ரத்த நாளங்கள் சிலிர்க்கிறது. மின்னல் மாதிரி வரும் காரின் கதவுகளை திறந்துகொண்டு ரஜினி நடந்து வருகிறார். தியேட்டர் சத்தத்திலும் ஆராவாரத்திலும் கிழிந்தே விட்டது. ஒவ்வொரு ரஜினி படத்தின் முதல் காட்சியிலும் விசில் அடிக்க தெரியாமல் போனதை எண்ணி வருந்துவேன். அதற்கு பதிலாக தொண்டை கிழிய கத்தி தொண்டை கட்டி அடுத்த இரு நாட்களுக்கு ஹஸ்கி வாய்சிலேயே பேசி பாவப் பரிகாரம் தேடிக் கொள்வேன். வேட்டையன் வரும்வரை அரங்கு முழுதும் சின்னச் சின்ன ஆராவாரங்கள். நிச்சியதார்த்திற்கு பிறகு வரும் சண்டையில் கையில் இருக்கும் கம்பியை சுற்றிவிட்டு மேல் சட்டையை இரு கைகளால் விலக்கி உதடு தூக்குமாறு கைகளை வைப்பார் ஓரத்தில் அந்தக் கம்பி சுழன்றுகொண்டே இருக்கும். த்தா தியேட்டர்ல இடி விழுந்த மாதிரியான சத்தம் இதெல்லாம் அந்த இடத்துல உணரனும் அப்போதான் தெரியும். வேட்டையன் வரும்போது தியேட்டர் குண்டு வெடித்த கலவர பூமி போல் ஆகிவிட்டது. அந்த சின்ன கண்களில் ரஜினி காட்டும் குரூரமும், கோபமும், வன்மமும் அடடா. படம் பார்த்து வெளியில் வந்தவுடன், ரஜினி தன் ரசிகர்களுக்கு சொன்னது புரிந்தது. ஏற்கனவே ராஜாதி ராஜா படத்தில் சொன்னதுதான், எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம். அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டக்கர டோய். நான் புரிந்துகொண்டேன். படமும் ஏ பி சி என எல்லா சென்டர்களிலும் அடித்து நொறுக்கி மேய்ந்து பெரிய கலக்சனை தந்தது. பாபா சமயத்தில் ரஜினி இனி அவ்ளோதான் என பேசிய, எழுதிய அனைவருக்கும் அவருடைய பாணியிலேயே பதில் சொல்லிவிட்டார். அவர் பாணி என்பது பட வெற்றி மட்டுமே. பஞ்ச் இல்லை, சிகரட் இல்லை, அச்சுறுத்தும் வில்லன் இல்லை, சவால் இல்லை ஆனால் சந்திரமுகி எகிடு தகிடு ஹிட்டடித்தது. தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தான்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

காலம் அப்படியேவா விடும்? வந்தது ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சனை வழக்கம்போல், சம்பந்தமே இல்லாத திரையுலக புள்ளிகள் இந்த திட்டத்தை ஆதரித்து உண்ணாவிரதத்தை அறிவித்து பந்தலை போட்டு குத்த வைத்தனர். பந்தலின் முன்பு நடிகர்களை காண மக்கள் திரண்டிருந்தனர். நடிகர் விஜயகுமார் ரஜினி துதி பாடிவிட்டு அமர்ந்தார். (நான் கேட்டனா முருகேஷா?? ) சத்யராஜ் மைக்கை பிடித்தார், உண்மையில் அவர் ரஜினியைத்தான் ஒரு பிடி பிடித்தார். முதல் வார்த்தையே எவன் பேரச் சொன்னா நீங்க கை தட்டுவீங்கன்னு தெரியிம் அப்டி அவன் பேரச் சொல்லித்தான் கைதட்டல் வாங்கணும்னா அதுக்கு நான் நாக்க புடுங்கிட்டு சாவன்யா... என ஆரம்பித்து முழுக்க முழுக்க ரஜினியை மட்டுமே குறிவைத்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் இப்டியே இருந்தேனா... முபுனா ஆய்டுவே கேகூனா ஆய்டுவ என தமிழர்களின் சொரணையையும் உரசிப்பார்க்க தவறவில்லை. இவை அனைத்தையும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் கன்னத்தில் விரல்களை அழுந்தப் பதித்து கவனித்துக் கொண்டிருந்த ரஜினி, விருட்டென மைக் அருகே வந்தார். எப்போது மைக் பிடித்தாலும் எந்த விழாவாகினும் மேடையில் இருப்பவர்களின் பெயர்களை வரிசையாக சொல்லும் ரஜினி இம்முறை, நான் ரொம்ப கோவமா இருக்கேன். என்ன பேசறது? நம்ம இடத்துல நமக்காக நாம ஒரு திட்டம் போட்டு நல்லது செய்யலாம்னு போனா அத கூடாதுன்னு தடுக்கிறவன ஒ ஒ ஒதைக்க வேணாம்?? என உணர்ச்சிகரமாக பேசுகிறார். நீங்கெல்லாம் தெய்வம் என மக்களை கை காட்டுகிறார். கூட்டம் ஆர்பரித்து சிலிர்க்கிறது. சில கர்நாடக அரசியல் தலைவர்களின் பெயரைச் சொல்லி அவர்களையும் சாடுகிறார். என் ரத்தமெல்லாம் சூடேறுகிறது. தலைவர திட்டினவனுக்கெல்லாம் கால் பண்ணி திட்றேன். கொண்டாட்டமா இருக்கு. தலைவர்டா, பேச்ச கேட்டியா, என்னமோ சொன்னியே, என்றவாறே பித்து பிடித்தது போல அலைகிறேன் அன்று முழுதும்.

நாம் சந்தோஷமாக இருப்பது ரஜினிக்கு எப்படித் தெரிந்து என்பது பற்றித் தெரியவில்லை. அடுத்தநாளே ஒரு அறிக்கை விட்டார். இம்மாதிரியாக நேற்று நான் பேசிய வார்த்தைகளால் கர்நாடக மக்கள் புண்பட்டிருந்தால் ப்ளா ப்ளா ப்ளா மன்னிக்கவும். அதன்பின் அந்தத் திட்டம் என்னவானதேன்றே தெரியவில்லை. ஆனாலும் சிவாஜி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். அதே சிலிர்ப்பு, அதே பரவசம், அதே ஆராவாரம், அதே தொண்டை கட்டல் எல்லாமே எல்லாம்.

ரஜினி தான் சண்டையிட்டிருந்த எல்லோருடனும் சமாதானமாக போக ஆரம்பித்தார். எந்தக் கட்சிக்கும் வாய்ஸ் தர மறுத்தார். தந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது என்பதையும் உணர்ந்திருந்தார். ஜெயலலிதாவை அஷ்டலக்ஷ்மி என புகழ்ந்தார். ராமதாஸ் வீட்டிற்கு பூங்கொத்து அனுப்பினார். அழகிரி வீட்டு திருமண நிகழ்விற்கு பயணித்தார். படம் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது போல் காட்டிக் கொண்டார். எந்திரன் படம், வியாபாரத்தில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ரஜினியை பயன்படுத்த தெரிந்தவர்கள் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அவரின் மகள்களும் விதிவிலக்கல்ல. 

ராணா படத்தின் அறிவிப்பு வெளியாகி, ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உடைந்துபோன கரகரப்பான குரலில், வந்தர்றேன் ராஜாக்களா உங்களுக்கெல்லாம் என்ன செய்யப்போறேன் கண்ணுகளானு.. குரல கொடுத்துட்டு உயிர் பிழைத்து வந்தார். எத்தனை ரசிகர்கள் மொட்டையெடுத்து, காவடி தூக்கி, பால் குடம் எடுத்து, அலகு குத்தி, தேர் இழுத்து தீ மிதித்து அத்தனை பிரார்த்தனைக்கும், நேர்த்திக் கடன்களுக்கும் ரஜினி எதையும் திருப்பித் தரவில்லை. உண்மையில் அவர் எதுவும் தருவார் என யாரும் எதுவும் செய்யவில்லை. அவர் மீதான ரசிகர்களின் மாசற்ற அன்புதான் அத்தனையையும் நிகழ்த்திக் காட்டியது. தமிழருவி மணியன் கூட, சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வட மாவட்ட மக்களுக்கு நீங்கள் ஏதேனும் நல்லது செய்தால் அது உங்களை இதுநாள் வரையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரும் கைமாறாக இருக்கும் என்றார். சில லட்சங்களை நிதி உதவியாக வழங்கிவிட்டு விலகிக் கொண்டார். படையப்பா வெற்றி விழாவில் தன சொத்துக்களில் பாதிக்கும் மேல் ராகவேந்திரா ட்ரஸ்டிற்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்தார். அதைப்பற்றிய தகவல் அதன் பின் ஒன்றுமில்லை.

எனக்குத் தெரிந்து அவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் அடுக்கிவிட்டேன். ரஜினி என்பது ஒரு brand. பிரியாணி போடுவார், தாலிக்கு தங்கம் வழங்குவார், வீட்டுக்கொரு மரக்கன்று தருவார் போன்ற எதிர்பார்ப்புகளே அற்பமானவை. யோசித்துப் பாருங்கள், எம்ஜிஆர், மக்களைப் பார்த்து என் ரத்தத்தின் ரத்தங்களே.. என்பார். நானும் நீயும் ஒரே ரத்தம் உனக்கான குறைகளை என்னிடம் சொல்லலாம் நான் செய்வேன். என்பதாக பொருள் கொள்ளலாம். ரஜினி அப்படியா, என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே என்பார். நம்மை தெய்வம் என்கிறார், நாமல்லவா தர வேண்டும்!. ரஜினி, தமிழகத்தில் சம்பாதித்துவிட்டு, கர்நாடகாவில் சொத்துக்கள் வாங்குகிறார் என்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் சென்னையிலோ, வெளி நாட்டிலோ, வெளி மாநிலத்திலோ சம்பாதித்த பணத்தில் அங்கேயே சொத்துக்கள் வாங்குகிறோம். சொந்த ஊரில்தானே வாங்குகிறோம் இதை ரஜினி செய்வதில் என்ன குறைந்து விட்டது?. தமிழ் திரைப்படங்களில், ரஜினிக்கு முன்னாள் நடித்துக் கொண்டிருந்தவர்களில், கருப்பாக திராவிட நிறத்தில் ஒரு கதாநாயகன் முகத்தையாவது காட்டுங்களேன். எதார்த்தமான கதை மாந்தர்களையும், எதார்த்தமான கிராமங்களையும் தமிழ் திரையில் படரச் செய்த பாரதிராஜாவே புதுநெல்லு புதுநாத்து வரை கதாநாயகனாக சிவப்பான ஒருவனைத்தான் நடிக்க வைத்திருந்தார். (கமல், சுதாகர், கார்த்திக், காதல் ஓவியம் ஹீரோ, சத்யராஜ், ராஜா..). ரஜினி மட்டும் இல்லையெனில் இன்றைய தேதியில் கருப்பு நிறத்தில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் கதாநாயகர்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே....

ரஜினி திரையில் கோமாளித்தனங்கள் செய்கிறார், துப்பாக்கியால் சுட்டு சிகரட் பற்ற வைக்கிறார். சும்மா வாயில் சிகரட் வைப்பதை விடுத்து தூக்கிப் போட்டு பிடிக்கிறார். இதெல்லாம் ஒரு ஸ்டைலா?? நாம் ஸ்பைடர் மேன் படத்தை ரசித்தது போல்தான், ஜப்பானியர்கள் முத்து படத்தை ரசித்தார்கள் போன்று என்னன்னவோ சொல்வார்கள். ரஜினிக்கு பிறகு எத்தனை காந்துகள் வந்தார்கள்... யாராவது நின்றார்களா? இந்த சிம்பு விரலை வைத்து ஏதேதோ வித்தைகள் செய்து கொண்டிருந்தாரே போடா கோமாளி என ஒதுக்கி விட்டார்கள். கண்களிலும் சிரிப்பிலும் இயல்பிலேயே ஈர்ப்பிருக்கும் ரஜினிக்கு மட்டும்தான் இது சாத்தியம். காலில் கயிறைக் கட்டி ஜீப்பை நிறுத்துவது அதால பள்ளத்தாக்கை குதிரை வண்டியில் தாவுவது, கத்தியை கழுத்தருகில் சுத்த விடுவது, இது போன்ற மாயாஜாலங்களை ரஜினியைத் தவிர்த்து வேறெந்த ஹீரோ செய்திருந்தாலும் ஊரே சிரித்திருக்கும். நீங்கள் ஏதோ ஒரு சோகத்தில் கண்களை மூடியபடி தனிமையில் அமர்ந்திருக்கிறீர்கள், அப்போது முகமே அறியாத குழந்தை வந்து உங்கள் கன்னத்தில் முத்தமிடுகிறது. கண் விழித்துப் பார்த்து குழந்தை உங்களுக்கு முத்தமிட்டதை அறியும்போது உங்கள் மனபாரங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டுருப்பீர்கள். எனக்கு ரஜினி அப்படியொரு குழந்தையின் முத்தம்.  

அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கு, நிம்மதி போய்விடும், சுமைகள் அதிகரிக்கும், பெரிய பொறுப்பு அதான் பயம் கொள்கிறார் போன்ற ஆயிரத்திற்கும் அதிகமான காரணங்களை அடுக்குவார்கள். என் சிற்றறிவிற்கு எட்டியவரை இதுநாள் வரை அவர் சம்பாதித்த பணத்தை இழக்க அவர் விரும்பவில்லை. நீங்களோ, நானோ பணத்தை சம்பாதித்து சேர்த்து வைக்கிறோமா?? இல்லை சமூக தொண்டிற்கென இத்தனை சதவீதத்தை ஒதுக்கி தொண்டு செய்கிறோமா?? அவர் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? மனதிருப்பர்வர்கள் செய்யட்டும் இல்லையேல் போகட்டும் இதையெல்லாம் ஒரு குற்றமாக கருதிக் கொண்டிருக்க முடியாது. நாங்க கொடுத்த பணம்தானே? நாங்கள் அடித்த விசில்தானே? கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்? என கேட்போமானால், புதுகவிதை, அதிசியபிறவி, மாவீரன், நாட்டுக்கொரு நல்லவன், பாபா, குசேலன் போன்ற படங்களுக்கும் கொடுத்தோமா?? விசில் அடித்தோமா? ஆக நமக்கே தெரியும் அது சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் சரக்கில்லாத படத்திற்கு நாம் பணம் விரயம் செய்வதில்லை. 3 மணி நேரம் சந்தோஷமா ரசிச்சு படம் பாத்தோம் பணம் கொடுத்தோம். அத திருப்பிக் கொடுன்னு இப்போ கேட்பது எந்த வகையில் ஞாயம்?!

இன்றுவரை ரஜினியின் நடிப்பிற்கான படங்களாக, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற ரொம்ப முந்தைய சிற்சில படங்களையே சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில் ரஜினி மிகச் சிறந்த நடிகர். கடைசி வரை அவரை சந்தையில் விலைபோகும் கோமாளி பொம்மையாகவே வைத்திருந்து வீணடித்து விட்டோம். என்னை நம்பி பணம் போட்ட புருட்யூசர் நஷ்டமடையக் கூடாது, ரஜினி அடிக்கடி சொன்ன வார்த்தைகள் இவை. இதனை சரியாக கணித்து அவரை வியாபாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திகே கொண்டது முதலாளி வர்க்கம். பாலசந்தரும் இதற்கு விதிவிலக்கல்ல குசேலன் சமீபத்திய உதாரணம். இதில் நமக்கும் கணிசமான பங்கிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. கவனித்திருக்கிறீர்களா?? ரஜினி பொதுவாழ்வில் அளவிற்கதிகமான விமர்சனமும், பிரச்சனையும் எதிர்கொண்டது அவர் சொந்தமாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்த பின்னர்தான்.(அருணாச்சலம், படையப்பா, பாபா மூன்றும் ரஜினியின் சொந்தப் படங்கள்) அவரை வைத்து மற்றவர்களால் பணம் சம்பாதிக்க இயலவில்லை என்ற நிலை வந்த பின்னர்தான் அவர் மீதான விமர்சனங்கள் வலுப் பெறுகிறது. பாபா படம் சரியாக போகாததிற்கு பணத்தை திருப்பிக் கேட்ட விநியோகதஸ்கர்கள், நினைத்ததை விடவும் அதிக லாபம் ஈட்டிய ரஜினியின் படங்களுக்கு அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்களாம்? 

ரஜினி திரையில் பிரதிபலிப்பது நம்மைத்தான். ஆட்டோ ஓட்டுவார், மூட்டை தூக்குவார், கார் மெக்கானிக்காக இருப்பார், தங்கைகளின் திருமணத்திற்கு பாடுபடுவார். தம்பிகளின் எதிர்காலத்திற்கு உழைப்பார். வஞ்சிக்கப்படுவார், ஏமாற்றப்படுவார், எள்ளி நகையாடப்படுவார். எல்லாவற்றிலிருந்தும் மீண்டு ஜெயித்துக் காட்டுவார். நாமும் அதானே, எத்தனை பேரிடம் அவமானப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம் இவர்கள் முன்னாள் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தை வாழ்வின் ஒருமுறையாவது நமக்குள்ளே சொல்லிக் கொண்டிருப்போம். நாம் வைராக்கியாக்யத்திற்காய் காலம் முழுதும் போராடுவோம். ரஜினி மூன்று மணி நேரத்தில் வென்றிருப்பார். நிஜவாழ்வில் ராஜியின் பிம்பம் எதுவாகினும் இருந்துவிட்டுப் போகட்டும் எங்களுக்குத் தேவை சவாலில் ஜெயிக்கும் திரை பிம்பம்தான். எங்களுக்கு உற்சாகம் தருவது அதுதானே ஒழிய அவரின் நிஜ வாழ்வுக் குணங்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது முற்றிலும் தேவையில்லாத ஒன்று. 

என்னால் ரஜினியை திரைக்கு உள்ளே எந்தவித மனச் சோர்வும் இன்றி ரசிக்க முடிகிறது. அவர் என்னை சிரிக்க வைக்கிறார், சிலிர்க்க வைக்கிறார். தர்மதுரை படத்தை அழாமல் பார்த்ததாக நினைவிலேயே இல்லை. திரையில் ரஜினி ஜெயித்தால் நானே ஜெயிப்பது போல் குதுகலமடைகிறேன். அவரை ரசிப்பது என்பது, ஒரு குழந்தையுடன் விளையாடுவது போல், ரயில் பயண ஜன்னல் போல், தலை வைக்கக் கிடைத்த தோழியின் மடி போல் அத்தனை சந்தோசம் தருவதாகவும் பரவசம் கொள்வதாகவும் இருக்கிறது. எனக்கு ரஜினியை ரசிப்பதுவும், பார்ப்பதுவும், கொண்டாடுவதுவும் பிடித்திருக்கிறது. செய்கிறேன்.. செய்தேன்.. செய்வேன். கொச்சடையான் ட்ரைலர் பிடிக்கவில்லை, தலைவரை பொம்மையாக பார்க்க மனம் ஒப்பவில்லை ஆனாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்தே தீருவேன் ஏனெனில் அது ரஜினியின் படம். என் மகளுக்கு 2 வயதாகிறது. லேப்டாப்பில் பாபா படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக அவளும் அந்தப் படத்தின் வாலிபால் சண்டைக் காட்சியிலிருந்து அப்படியே கொஞ்சம் சீன்ஸ் பார்த்தாள். சிறிது நேரம்தான் பீரோவைத் திறந்து ஏதோ துணியொன்றை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு நிற்கிறாள். என்ன பாப்பா இது? எனக் கேட்டால், பாப்பா எந்தப் பக்கமும் சாயாத பாப்பா என்கிறாள் மழலைக் குரலில். அதான் ரஜினி ! 

இதை எழுதிக் கொண்டிருந்த இடைவேளையில், நண்பர் ஒருவருடன் காஃபி குடிக்க சென்றிருந்தேன். இன்னைக்கு ரஜினிக்கு பொறந்தநாளாம் என ஆரம்பித்து அவர் மீதான அத்தனை எதிர்மறை விமர்சனகளையும் சொல்ல ஆரம்பித்தார். ஏற்றுக்கொண்டேன் இதில் நான் சொல்லியிருக்கும் பதில்களையும் சொல்லி வாயடைத்தேன். அவர் மீதான விமர்சனங்கள் எனக்கும் உண்டு, அதனால் என்ன?! ஹேப்பி பர்த்டே தலைவா..... 



Tuesday, October 22, 2013

விஷம் !?

எல்லா நேரங்களிலும் சாலையோரங்கள், அழகானதாகவே அமைந்து விடுவதில்லை. இரு சக்கர வாகனமொன்று நடு சாலையில் கவிழ்ந்து கிடக்கிறது, டயர் தேய்த்த கருப்பான கோடொன்று நீளமாய் தடம் பதித்திருக்கிறது. வேடிக்கை பார்க்க சுற்றிலும் மனிதர்கள் இல்லாத விபத்து நிகழ்வுகள் நம் நாட்டில் சாத்தியமே இல்லை. கூட்டத்தில் புகுந்து முன் வரிசையில் இடம்பிடித்து ஆர்வத்தோடு எட்டிப் பார்த்ததில், சரியாக உச்சந்தலையிலிருந்து ரத்தக் கோடொன்று மூன்றடி நீளத்திற்கு விரிந்து தரையில் உறைந்திருக்கிறது. அது பிணம், அதுவும் மிகச் சமீபத்தில் உருவாகிய சூடான ஃப்ரஷான பிணம். ஈக்களும் மனிதர்களும் அதை சூழ்ந்திருக்கிறோம். பிணத்தின் கண்கள் திறந்தவண்ணமேயுள்ளன. 

இந்தப்பிணம் இனி எழாது ஏதோ ஒரு உயிர் இந்த பிணத்தின் உயிர் வருமென காத்திருக்குமாயின் இது கொடுத்து வைத்த பிணம்தான். இப்போதுவரை நெஞ்சிலடித்து கதற, ஒப்பாரி வைத்து பதற சுற்றிலும் எவரும் இல்லை. கூட்டத்தில் ஆளுக்கொரு கதை சொல்கிறார்கள். உச் கொட்டுகிறார்கள், அருகில் செல்ல தயங்குகிறார்கள், சிறுவர்களை விரட்டி அடிக்கிறார்கள். தூரத்தில் போலிஸ் வாகனம் கண்டு அப்படியே நழுவுகிறார்கள். போலிஸ் வந்து அவர்கள் பங்கிற்கு சில சம்பிரதாய கேள்விகளை கேட்டுவிட்டு இன்றைய தினம் இந்த பிணத்தோடு என்பதன் சலிப்பை முகத்தில் காட்டி கடமையை முடிக்கிறார்கள். 

அறைக்கு திரும்பி சாப்பிட பிடிக்காமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தால்... அரை முழுவதும் ரத்த வாடை. சுவர்களும் மேற்கூரையும் சிகப்பு வண்ணம் பூசிக்கொண்டு ஆங்காங்கே குருதி சொட்டும்படி செய்கின்றன. கட்டிலுக்கு கீழ் சிறியதாய் குருதியால் நிரம்பிய தற்காலிக குட்டை ஒன்று தோன்றுகிறது. அதில் நீந்தும் மீன்களும் சிகப்பு வண்ணத்திலேயே இருக்கின்றன. மீன்களில் ஒன்றுக்கு இறக்கை முளைத்து ரத்தத்திலிருந்து மேலெழும்பி பறந்து சென்று, மேலே சுழலும் மின் விசிறியில் இரண்டாக அறுபட்டு ரத்தம் பீய்ச்சியடிக்க மீண்டும் குட்டையில் விழுந்து நீந்த தொடங்குகிறது. கட்டில் கால்களை சுற்றிக்கொண்டு ரத்தம் மெல்ல மெல்ல மேலே வருகிறது. பெரிய ரத்தப்போர்வையொன்று அப்படியே மேலே விழுந்து போர்த்திக்கொள்கிறது. இனி விடியும்போது ரத்தம் இருக்காது ஆனால் கறை ஒவ்வொரு இரவிலும் தென்படும்.

மற்றொரு சாலையோரம், பாம்பொன்றை கண்ட நான் அமைதியாக கடந்திருக்கலாம் அந்த பாம்பைப் போலவே. அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரை அழைத்து, பாம்பை கட்டினேன், பார்த்தவர் கொஞ்சமும் தயங்காமல் தன் கையிலிருந்த பெரிய தடியால் அந்தப் பாம்பை ஓங்கி அடித்தார். தடி தரையில் இறங்கவும் பாம்பு நகரவும் சரியாக இருந்தது. 

'அண்ணா விடுங்க... ஒன்னும் செய்யாதீங்க அது போகட்டும், விடுங்கண்ணா ' என்ற என் குரலை அவர் கண்டு கொள்ளவே இல்லை அந்த பாம்பும்தான். விரட்டி பிடித்து ஓங்கி ஓங்கி அடித்து அந்த பாம்பை கொன்றே விட்டார். எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வளையம் வளையமாக துடித்து அப்படியே சுருண்டு மடிந்து போனது அந்தப்பாம்பு. இன்னமும் வால் ஆடிக்கொண்டே இருந்தது. 'அத ஏன்னா கொன்னீங்க? அதுபாட்டுக்கு சும்மாதான போயிட்டிருந்துச்சு' என்ற கேள்விக்கு சிரித்தவாறே, 'பாம்ப பாத்தா அடிச்சுக் கொல்லாம வீட்டுக்கு தூக்கிட்டு போயி வளக்கவா சொல்ற, இங்க மனுஷன் செத்தாலே மதிப்பில்ல பாம்பு செத்ததுக்கு துக்கம் விசாரிச்சிட்டிருக்குற' என்றார். கலங்கிய கண்களோடு வீடு சேர்ந்தேன். 

சாப்பிட அமர்ந்தால், சாதத்திற்கு இடையில் ஒரு பாம்பு சடாரென எழுந்து என் கண்களை தீண்ட பார்த்தது. கொழம்பிருந்த பாத்திரத்தில், நான்கைந்து பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. தட்டை உதறிவிட்டு அறைக்கு சென்று தாளிட்டேன். எனக்கு முன்னாலையே என் படுக்கையில் பாம்புகள் புரண்டு கொண்டிருந்தன. எவ்வளவு முயற்சித்தும் அன்றிரவு முழுவதும் அந்த பாம்புகளை துரத்த முடியவில்லை. கழுத்தை இறுக்கியபடி ஒரு பாம்பும், இரு கைகளையும் பிணைத்து சுற்றியபடி ஒரு பாம்பும், கால்களுக்கிடையில் ஊர்ந்தபடியே எத்தனை பாம்புகள் எனத் தெரியாதபடி நிறைந்திருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை பாம்புகளும் நானும் ஒரே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தோம். பாட்டியிடம் சொன்னதில், நாகம்மா கோவில் புற்றில் பால் ஊற்றி வரச் சொன்னாள். இன்றும் என்னை பாம்புகள் தொடர்கின்றன. நான் ஒருமுறை பாலூற்றியதோடு சரி தொடரவில்லை.

இறந்ததை, பார்த்த எவருக்கும் 'இறந்து' பார்க்க எண்ணம் வராது. இறந்துதான் பார்ப்போமேவென உயிர்கொல்லி விஷதிரவ புட்டியோன்றும், '5000' பீர் புட்டியோன்றும் வாங்கி ஒரு சாலையோரம் அமர்ந்தேன். அத்திரவத்தின் வாடையே மயக்கம் தந்தது. குமட்டி குமட்டி வயிற்றை புரட்டியது. பீர் புட்டியை திறந்து பாதியை கொட்டிவிட்டு, மீதியில் திரவத்தை கலந்தால் இளஞ்செந்நிற திரவம் முழு வெண்மை நிறம் பூசியது. பெட்ரோல் நெடியுடன், கெட்டுப்போன பழைய சோற்றின் வாடை சேர்ந்தாற்போல் இருந்தது அந்த மணம். கண்களை இறுக மூடிக்கொண்டு குமட்டக் குமட்ட பாதியை குடித்து. புட்டியை உடைத்தெறிந்துவிட்டு, எப்போதுமில்லாத அதிக வேகத்தில் நடக்கலானேன். குடலுக்குள் குளிர்ச்சியாய் திரவம் பாய்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல கண்களில் இருள் சூழ்ந்தது. 

காதலிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து சென்று கொண்டிருந்தனர். இப்போது போட்டிருக்கும் இந்த சட்டை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சீனியர் ஒருவர் கேட்டுப்பார்த்தும் தர மறுத்த சட்டை கரும்பச்சை நிறப் பின்னணியில், வெள்ளை, கருப்பு, நீள நிறத்தில் நிறைய கோடுகளும் கட்டங்களும் இடப்பட்டிருக்கும். இந்த சட்டையை அவனுக்கு தந்திருக்கலாம். இறந்தபின் இந்த சட்டையை என்ன செய்வார்கள் என்ற எண்ணம் கூடுதல் துன்பம் தந்தது. இந்த சூழ்நிலைக்கு மழை பெய்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. பாட்டி சமையலில் மட்டன் வறுவல் தேடி நாக்கு பயணித்துக் கொண்டிருக்கிறது. இறந்து போக இருக்கும் சொற்ப நேரங்களில் எதை எதையெல்லாம் நினைவிற்கு கொண்டு வருவது என்பதில் மூளை மிகவும் குழம்பியிருந்தது. நிறைய பெண்களையே அது முன்னிறுத்தியது. முத்தமிட்ட முதல் தோழி முதல் முந்தாநாள் குடிவந்த பார்வதி வரை நொடிக்கொருமுறை கண்ணில் வந்து மறைந்தனர். 

கால்கள் வீட்டுக்கு வந்து சேர்த்து விட்டிருந்தன. படுக்கை தயாராய் இருக்கிறது படுக்க வேண்டியதுதான். சுற்றிலும் ஒரே இரைச்சல் யாராரோ எட்டி பார்த்தார்கள். நிறைய கேள்விகள் கேட்டார்கள் யாரை கேட்கிறார்கள் என்பது விளங்கவில்லை. வயிற்றுக்குள் ஏதோ இருப்பெரும் அணிகள் ஒவ்வொரு பக்கமும் 1000 பேருக்கு குறையாத காலாட்படையும், குதிரை, யானைப் படைகளையும் பெற்ற இரு அணிகள் ஒன்றையொன்று தாக்கி பெரிய யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. சூடாக தேநீர் பருக வேண்டும்போல் இருந்தது. எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் செத்து விடலாம், பாடை கட்டுவார்கள், சங்கூதுவார்கள், பால் ஊற்றுவார்கள். யாரெல்லாம் என் சாவிற்கு அழுவார்கள் என தெரிந்துகொள்வதில் ஒரு சின்ன ஆர்வம் மேலிட்டது. முதலில் அழுவார்களா என்ற சந்தேகத்தில் நிறைவுற்றது அச்சிந்தனை. 

ஏன் சாகிறோம் என யாராவது கேட்டால் என்ன சொல்வது? செத்தபின் நம்மையார் கேட்க போகிறார்கள், அது இனி உயிரோடிருக்கப்போகிறவர்களின் பிரச்சனை' என்று சுய சமாதானம் செய்துகொண்டேன். எரிப்பார்களா, புதைப்பார்களா என்ற குழப்பம் வேறு புதிதாய் சேர்ந்திருக்கிறது. ஒருவேளை மேலோகமிருந்து அதிலந்த பாம்பை கண்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்ள நினைத்துக்கொண்டேன். தலை சுற்றியது, உண்மையில் உடலே சுற்றியது. கட்டில், மெத்தை, வீடு என சகலமும் சுற்றியது. சுற்றியது என்பது சாதாரண வார்த்தை, புயல் வேகத்தில் சுற்றும் ராட்டினத்தில் படுத்திருப்பது போன்றதது. இந்த வீடும் இடமும் நானும் பூமிக்கு மேலே பூமியை விட அதிக வேகத்தில் தனித்து சுற்றிக் கொண்டிருந்தோம். முதலில் செயலிழந்தது கைகள், கால்களை நகர்த்த இயலவில்லை. கண்களை மூடி அதிக நேரம் ஆகி விட்டிருந்தது. காதுகளுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. மூளை மட்டும் உள்ளேன் ஐயா என்கிறது. அதுவும் கொஞ்ச நேரத்தில் ஆப்சென்ட் ஆகிவிடும். இப்போது சுழல்வது நின்று மெல்லமாய் மிதக்க ஆரம்பித்தேன். மூளை தன் சிந்தனையையும் கை கழுவி விட்டது. இனி முழுதாய் சாவதுதான் பாக்கி........   

  

Tuesday, September 17, 2013

அ முதல் ஆ வரை.. (a TO A)



வெளில பயங்கர மழ, கும்மிருட்டு... ச்சே வெளில மழனு எழுத ஆரம்பிச்சாலே கும்மிருட்டும் சேர்ந்தே வந்திடுது. நேர்மையான போலிஸ் ஆபிசர் மாதிரி. இப்ப மழைலாம் இல்ல மிதமான வெயில்தான். 'ஒண்ணுமில்ல மாப்ள பயப்படாம இருங்க' அப்டிங்கிறார் மாமனார். உண்மையாவே நான் அப்போ பயப்படவோ பதட்டப்படவோலாம் இல்ல, ரொம்ப கேஷுவலாத்தான் இருந்தேன். அவர் சொன்ன பின்னாடிதான், ஓ கொழந்த பொறக்கும்போது நகத்த கடிச்சிக்கிட்டு டென்சனா இருக்குற மாதிரி காட்டிக்கிறதுதான் ப்ரோஜிசர் போலன்னு மூஞ்சிய ரொம்ப இறுக்கமா வச்சுக்கிட்டேன். பாரதிராஜா படத்துல வருமே, ஒரு சம்பவத்த பத்தி ஊர்ல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க, ஆனா என்ன பேசுவாங்கன்னு நமக்கு தெரியாது. லாங் ஷாட்ல கும்பல் கும்பலா நின்னுகிட்டு மியூட்ல தல கையெல்லாம் ஆட்டிக்கிட்டே பேசுவாங்க. ஹாஸ்பிட்டல்ல என்னைய சுத்தி இருந்த கும்பலும் அந்த வேலையத்தான் பாத்துச்சு. ஒரு அரை மணி நேரம் இப்டியேதான் போச்சு, திடீர்னு வெளில மழை வந்துச்சு. ரெண்டு மூணு நிமிசத்துல நர்ஸ் ஒன்னு வெளில வந்துச்சு, கைல பாப்பாவோட. ஒரு கண்ணாடி டம்ளர குழந்தை டிஸைன்ல செஞ்சு அதுல ரோஸ் மில்க் நிரப்பி வச்ச மாதிரி இருந்தது பாப்பா. என்ன பண்ணனும்னு தெரியல. கொஞ்ச நேரம் உத்து பாத்துட்டே இருந்தேன். வர்றவங்க போறவங்களாம் வாழ்த்து சொல்றாங்க. அப்பாவாகிட்டேன், அப்பாவானா செய்ய வேண்டிய மொத வேல, சாக்லேட்ஸ் வாங்கிவந்து மொத்த ஹாஸ்பிட்டலுக்கும் விநியோகம் செய்றது, செஞ்சேன். அப்பாவா செய்ய வேண்டிய அடுத்த முக்கிய விஷயம், கொழந்தைக்கு பேர் வைக்கிறது. அமிழ்தினி, ஆதிரை, இலக்கியா, அபிநயா, லாவண்யா, அகிலா, அகல்யா, அனிச்ச மலர்னு பாப்பா பொறக்குறதுக்கு முன்னாடியே நெறைய பேர பரிசீலனைல வச்சிருந்தேன். அதுவும் போக அதென்ன பெரிய கம்ப சூத்திர வித்த?? இந்த இன்டர்நெட் யுகத்துல கூகுள்ள தேடுனா லட்சம் பேரு வந்து கொட்ட போவுது... அதுல ஒரு நல்ல தமிழ் பேரா வச்சுட்டா போச்சு.... அப்டிதான் நானும் நெனச்சேன்... ஆனா.. நினைக்கிறதெல்லாம் நடக்கணுமே....

பொறந்த நேரத்த குறிச்சுக்கிட்டு எங்க சித்தி, 'கிட்டு' ஐயர்னு ஒருத்தர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவர், நிகழ்கால விஞ்ஞானத்தையெல்லாம் அலட்சியமா ஓரங்கட்டிட்டு, கோடு போட்ட பேப்பர்ல ஆராய்ச்சி குறிப்பு எழுதுறாப்ல ஏதேதோ கணக்கு போட்டார், நட்சத்திரம் ராசியெல்லாம் சொல்லிட்டு, அ, ஆ, இ, ஈ, உ, ஊ இந்த எழுத்துக்கள்ல எதிலாவது பேர் ஆரம்பிக்கணும், பேரோட கூட்டுத்தொகை ஒன்னு இல்லேனா ஆறு வரணும் அப்டினார். மனுஷன் சொன்ன அந்த கூட்டுத்தொகை கணக்குதான் எனக்கு புரியல. எனக்கு சூடு போட்டாலும் மேத்ஸ் வராது, எனக்குன்னு இல்ல யாருக்குமே சூடு போட்டா, ஐயோ அம்மானு கத்தத்தான் வரும். நியூமராலஜி பத்திலாம் எனக்கு பெரிய அக்கறையோ, ஆர்வமோ இல்லைதான் அப்புறம் வர வச்சுக்கிட்டேன். சரின்னு ஊருக்குள்ள ஒரு ஆள் இன் ஆள் அழகுராஜாவ புடிச்சு அந்த கணக்கு எப்டிங்க போடுறதுன்னு கேட்டா, காலைல எந்திரிச்சு பல் தேச்சு குளிச்சு முடிச்சிட்டு காலண்டர்ல தேதிய கிழிச்சிட்டு அப்டியே அந்த காலண்டர திருப்பி பாத்தேனா, அதுல ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுத்திருப்பான். அத மனப்பாடம் செஞ்சு வச்சுக்க அது போதும்னு சொன்னார். மணப்பாடம் பண்ணிட்டேன். இப்ப கூப்ட்டு H க்கு என்ன நம்பர்னு கேட்டா, உடனே எட்டுன்னு சொல்லிடுவேனே. 

இலக்கியாங்கிற பேரு பிடிச்சு போகவே, அதே பேர வைக்கலாம்னு வீட்டமாகிட்ட சொன்னா, அவ... நோ நோ நோ பேரு 'அ' இல்லேனா 'ஆ'லதான் ஆரம்பிக்கணும்னு சொல்லிட்டா. ஹ்ம் ஆமா அம்மினி பேரு 'ஆ'லதான் ஆரம்பிக்குது. அடிச்சு பிடிச்சு ரெண்டே நாள்ல பேரு முடிவாய்டுச்சு. அந்த ஆள் இன் ஆள் அழகுராஜாதான் சொன்னார். அமிர்தவர்ஷினி, பேர் நல்லாருக்கே என்ன அர்த்தம்னு கேட்டா, அது ஒரு ராகத்தோட பேரு இந்த ராகத்த பாடுனா மழ கொட்டோ கொட்டுனு கொட்டும்னு சொன்னாய்ங்க. சூப்பர்பா... பாப்பா பொறந்த அன்னைக்கு ஊருக்குள்ள மழ வெளுத்து வாங்குச்சு. பாப்பா பேருலையும் மழ.. லாஜிக்கலா ஒத்து வரவும் பேர தூக்கிட்டு தாத்தாகிட்ட ஓடுனேன். இங்கதான் கதைல ட்விஸ்ட்டு, தாத்தா பேர படிச்சு பாத்துட்டு, பிடாது.. பிடாது.. ஐ ல பேரு முடியப்பிடாது, 'ஆ' சவுண்ட்ல முடியிற பேருதான் வைக்கனும்னு சொல்லிட்டாரு.

இப்போ திரும்பவும் மொதல்லேர்ந்து பேரு, A ல ஆரம்பிச்சு A ல முடியனும். கூட்டிப்பாத்தா ஒன்னு இல்லேனா ஆறு வரணும். கூடுமான வரைக்கும் பேர் தமிழ்ல இருக்கணும். இவ்ளோதான் ரூல்ஸ், ஒரு குயர் அன் ரூல்ட் லாங் சைஸ் நோட்புக் ஒன்னு வாங்கிட்டேன். பேரெழுதி அதுக்கு கீழயே ஒவ்வொரு எழுத்துக்கும் நம்பர் போட்டு அப்டியே கூட்டனும். கடைசில 37 னு வந்தா மூனையும் ஏழையும் கூட்டனும். அப்புறம் 10 வருமா.... ஒன்னையும் ஜீரோவையும் கூட்டனும். சிங்கிள் டிஜிட்ல வர்ற வரைக்கும் இதுமாதிரி கூட்டிட்டே இருக்கணும். ஊருக்குள்ள ஒருபயல விடல, LIC ஏஜென்ட், மோடிகேர், ஆம்ப்வே ஆளுங்கள பாத்தா தெறிச்சு ஒடுவாய்ங்களே, அதுமாதிரி ஓட ஆரம்பிச்ச்காய்ங்க என்னைய பாத்தாலே. அசரலையே, பேரு பிடிச்சா, கூட்டுத்தொக வரல, கூட்டுத்தொக வந்தா பேரு பிடிக்கல. ஆனா இந்த தேடல்ல நெறைய வித்தியாசமான, அழகான பேரெல்லாம் சிக்குச்சு. அனேகம்பேர் சொன்னது, அனுஷ்காதான் அடுத்த இடம், அனன்யாக்கு. சொன்ன பேருக்கெல்லாம் ஏதாவது ஒரு நொட்ட சொல்லி தட்டி கழிச்சுட்டே இருந்தேன்.

அம்புஜா.....

அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளானு பசங்க கிண்டல் பண்ணுவாய்ங்க வேணாம்
 
அபலாஜிதா....

அப்ப லாஜிதானா இப்ப என்னடா??

அக்ஷரா... கமலோட ரெண்டாவது பொண்ணு பேருடா .. 

நான் என்னோட மொத பொண்ணுக்குத்தான் பேரு கேட்டேன்.

அவந்திகா....

இது சாருவோட வீட்டம்மா பேரு டிவிட்டர்ல ஓட்டுனாலும் ஒட்டுவாய்ங்க வேணாம்.

   ஆள் இன் ஆள் அழகுராஜா, நீ மணல் கயிறு எஸ் வீ சேகர விட மோசமான கண்டிசன போட்டு டார்ச்சர் பண்ணிட்டு திரியிற ஒன்னு பண்ணு, இப்போதைக்கு உன்னோட கொழந்தைக்கு 'எக்ஸ்'னு (X) பேரு வச்சுடு. ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு எப்டியும் உனக்கொரு பேரு சிக்கிரும் அப்போதைக்கு மாத்திக்கலாம்னு, கோவம் வர்ற மாதிரி காமடி பண்ணிட்டு இருந்தாரு. இது கூட பரவால என் மச்சினன் போஃன் பண்ணி, மாம்ஸ் செம பேரு ஒன்னு சிக்கியிருக்கு மாம்ஸ்.... நல்லா தேடிட்டேன். தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் கேட்டாச்சு. 'அண்டா'னு பேர் வச்சிடலாம் மாம்ஸ் A ல ஆரம்பிச்சு A ல முடியுது. நியுமராலஜியும் பெர்பெக்ட்டா இருக்கு என்ன சொல்றீங்கனான். இர்றா உங்கக்காகிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். கட் பண்ணிட்டான். மச்சினன நொந்துகிட்டு நேரா போயி என் தம்பிகிட்ட பேர் வைக்க தேவையான வஸ்து, வாஸ்து பத்தி ரெண்டு மணி நேரம் விளக்கின பின்னாடி, நாளைக்கு உனக்கு செம பேரு சொல்றேன்னு போஃன வச்சான். ரெண்டு நாள் கழிச்சு, 

'அதிதி' பேர் எப்டிரா இருக்கு??

 லூசு நாயே பேரு A ல முடியனும்.

ஹ்ம்.... அமெரிக்கானு வய்யேன், வேணாம்னா அண்டார்டிகா, ஆஸ்திரேலியா...

தம்பி, என்னோட மகதான் எனக்கு உலகம் அதுக்காக உலகத்துல இருக்குற நாட்டோட
 பேரெல்லாம் அவளுக்கு வைக்க முடியுமா...

அதுவும் சரிதான், அல் உம்மா? அல் கொய்தா? 

@$*&&%#$#@#^^#

டேய் ... இர்றா.. இர்றா... சொல்றண்டா.... ஹ்ம்ம்ம் 'அடிங்கோய்யால' எப்டிரா?? அடிங்கோய்யால சாப்டுமா... அடிங்கோய்யால இங்க வாமா... அடிங்கோய்யால தூங்குமா...

அடிங்கோய்யால... போஃன கட் பண்ற....

இந்த பேருக்கு என்னடா கொற... A ல ஆரம்பிச்சு A ல்தான முடியுது...

உனக்கு, வாய்ல ஆரம்பிச்சு ஒடம்பு பூராம் குத்து விழப்போது .... எம்பொண்டாட்டி கூப்புற்ரா நான் அப்புறம் பேசுறேன்....

இது என்னங்கிது, புதினா வாங்கிட்டு வர சொன்னா, முருங்கை கீரை வாங்கிட்டு வந்துருக்கீங்க... புள்ள பொறந்து மூணு மாசமாச்சு இன்னும் ஒரு பேரு வைக்க துப்பில்ல. ஒரு கட்டு புதினா கூடவா பாத்து வாங்கிட்டு வர துப்பில்ல.... அடக்கொடுமையே புதினா வாங்கிட்டு வர்றதுக்கும், புள்ளைக்கு பேரு வைக்குறதுக்கும் என்னங்கடி சம்பந்தம்.... இனி யாரையும் நம்பாம நாமளே களத்துல இறங்குரதுதான் சரின்னு முடிவு பண்ணினேன்.

ஆதிரைங்கிற பேர் மேல எனக்கொரு அபரிவிதமான ஈர்ப்பு இருந்துச்சு. ஒரே பிரச்சன அந்த பேரு i ல முடியிறதுதான், சரின்னு அதுல இருந்த i எடுத்துட்டு a போட்டுட்டேன். பேரு இப்போ 'ஆதிரா' தாத்தாகிட்ட சொன்னேன் சந்தோசமா நல்லாருக்கு இதையே வச்சிடுனு சொன்னாரு. பாப்பா பொறந்து அஞ்சாவது மாச முடிவுல ஆதிரானு நாமகரணம் சூட்டியாச்சு. நெறையபேரு இத தமிழ் பேருன்னே நம்பல. மணிமேகலைக்கு அட்சயபாத்திரம் கொடுத்தவங்க பேரு, ஒரு வின்மீனோட பேரு, சூரியனுக்கும் இந்த பேர் இருக்காம், மின்னல்னு ஒரு அர்த்தம் வேற இருக்கு. எல்லாத்துக்கும் மேல என் வீட்டம்மா பேரோட மொத எழுத்தையும் என் பேரோட (மகேந்திரா) கடைசி ரெண்டு எழுத்தையும் சேர்த்தா ஆதிரானு வரும் இந்த விஷயத்த ரொம்ப சமீபத்துலதான் கண்டுபிடிச்சேன்.

இன்னையோட, ஆதிரா பொறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. நாளைக்கு மேடம்க்கு செகண்ட் பர்த்டே. நான் சொன்னதெல்லாம் நேத்துதான் நடந்தமாதிரி இருக்கு. முழுசா ரெண்டு வருசத்த முளுங்கியாச்சு அதுக்குள்ள. அன்னைக்கு அப்டிதான் கிட்சன்ல பாத்திரத்த பூராம் இழுத்து கீழ தள்ளி விட்டுட்டா. அவங்க அவ்வா, திட்டி வெளில தொரத்தி விட்டுட்டாங்க, வெளில வந்தவ துணி துவைக்கிற பவுடர எடுத்தாந்து அங்கன இருந்த சப்பாத்தி மாவுல மிக்ஸ் பண்ணி கைய்ய விட்டு கலக்கிட்டா. அடியேய்னு அவங்கம்மா ஓடி வந்தாங்க.... சிரிச்சுக்கிட்டே சைட்ல ஓடி போனவ, ஜூஸ் போடுறதுக்காக ஆஞ்சு வச்சிருந்த அருகம்புல் குண்டான ஒரு எத்து விட்டா பாருங்க... ரசிக்கவும் சிரிக்கவும்தான் முடியுது. நாம சேட்ட செய்யும்போதும் பெத்தவங்க இப்டித்தான் ரசிச்சிருப்பாங்களோ என்னவோ. ஆதிரா எம்புட்டா பரவால, நான் ஒருவாட்டி தவந்துக்கிட்டே போயி இட்லி மாவுல மூச்சா பண்ணிட்டேனாம். அவ்வா சொன்னாங்க. 

போன வருஷம் ஆதிரா பொறந்த நாளன்னைக்கு, டிபில பாப்பாவோட போட்டோ வச்சேன், இந்த ஒருவருஷ இடைவெளில எழுத்தாளனா பார்ம் ஆகிட்டதால பதிவெழுதிட்டேன். த்சோ.. த்சோ..





Thursday, August 29, 2013

டைட்டில் இன்னும் வைக்கலீங்க...


சமீபத்தில் போக்கிரி மாமன் பேஸ் புக் தளத்தில் எழுதிய அப்பா குறித்த பதிவொன்றை படிக்க நேர்ந்தது. இது அப்பாவை பற்றிய இன்னுமொரு செண்டிமெண்ட் பதிவோ... என உங்கள் கண்களில் தெறிக்கும் பீதியை என்னால் உணர முடிகிறது. இது அதுவல்ல, நம்பிக்கையோட அடுத்த வரிக்கு வந்துவிடுங்கள். அதிகாலை என்றவுடன் நம் மனத்தில் தோன்றும் காட்சிகள் என சில இருக்கும். செந்நிறத்தில் சூரியன் உதிப்பது அதன் நடுவே இரண்டு புறாக்கள் பறப்பது, சூரிய ஒளி பட்ட ஆற்று நீர் பளபளப்பாய் மின்னுவது, மரங்களுக்கிடையில் வெளிச்சம் பாய்வது, நம் நிழல் முழு உருவம் அடைவது போன்றவையும் இன்ன பிற காட்சிகளும் அதில் அடங்கும். அப்பா என்றவுடன் என் நினைவிற்கு சட்டென வந்து மறைவது அதிகாலைதான். மனிதர் ஐந்து மணிக்கு மேல் தூக்கத்தில் இருந்து நான் பார்த்ததே இல்லை. இயக்குனர் பாலாவிடம் அவரின் குருநாதர் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னாராம், 'உலகத்துல ஜெயிச்சவன் பூராம் காலைல சீக்கிரம் எந்திரிச்சவண்டா' அப்டின்னு. அப்பா ஜெயித்தாரா தெரியாது ஆனால் தோற்கவில்லை. அலாரச் சத்தத்தில் இசைய உணர எம் எஸ் சுப்பு லக்ஷ்மி அம்மாவிற்கு கூட முடிந்திருக்காது. நாம் சொன்ன வேலையை மிகச் சரியாக செய்தும் நம் அதிருப்திக்கு உள்ளாகும் ஒரே ஜீவன் உலகில் அலாரம் செட் செய்யப்பட்ட கடிகாரமாய்த்தான் இருக்கும். தீபாவளி அதிகாலையை போன்ற குரூர தண்டனையை கருட புராணத்தில் எப்படி சேர்க்காமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. அன்றைய பொழுது மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் எழுப்பி விட்டு விடுவார்கள். உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை தேய்த்து, தேமேவென்று குறைந்தது அரை மணிநேரம் அமர்ந்திருக்க வைப்பார்கள். அதிலும் பாசக்கார அப்பா அவரே குளிப்பாட்டியும் விடுவார். ஒற்றை உள்ளாடையுடன் அப்பாவுடன் நிற்பதற்கு எனக்கு நிரம்பவே கூச்சமாய் இருக்கும். நான் பத்தாவது முடிக்கும்வரை அவருக்கு இது புரியவே இல்லை. பண்டிகை கொண்டாட்டங்களை அதிகாலையில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதை யார் கண்டுபிடித்தது தெரியவில்லை. எனக்கெல்லாம் பண்டிகை நேர அலாரம் பெரும்பாலும் கிரைண்டர் சத்தமாகவே இருந்திருக்கிறது. கைக்குழந்தை இருக்கும் வீட்டிற்கு தனியே அலாரம் என்னும் வஸ்துவின் தேவை இருப்பதில்லை. குழந்தையை அலாரமாக பயன்படுத்துவதில் ஒரே ஒரு சிக்கல், நாமாக நேரத்தை செட் செய்ய முடியாது. ஆனாலும் குறித்த நேரத்திற்கு முன்பே எழுந்து கொள்ளலாம். பக்கத்து வீட்டுக்காரர்களையும் சேர்த்தே எழுப்பிவிடும் திறனும் அவர்களுக்கு உண்டு. 

பாட்டி வீட்டில் இந்த அதிகாலை கலாச்சாரமெல்லாம் கிடையாது. பசங்க எழுந்திருக்கும் நேரம்தான் அவர்களவில் அதிகாலை நேரம். எட்டரை மணிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில் கணக்குபிள்ளை தாத்தா சூர்ய நமஸ்காரம் செய்து கொண்டிருப்பார். இடது பக்கமாக மூன்று சுத்து, அப்படியே வலது பக்கமாக திரும்பி மூன்று சுத்து. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டவாறே அவர் அவ்வாறு சுற்றுகையில், குடையில்லா ராட்டினம் சுற்றுவது போலிருக்கும். பின்னாளில் சூர்ய நமஸ்காரம் என்பது அதிகாலை சூரியன் எழும்போது செய்வதென்பதும், யோகா கற்றுக்கொள்ள சென்றபோது சூர்ய நமஸ்காரம் செய்வதென்பது கைகளை உயர்த்தி இட வலமாக உடம்பை சுற்றுவது மட்டுமே இல்லையென்பதையும் தெரிந்து கொண்டேன். ஏமாற்றுக்கார கணக்குப்பிள்ளை தாத்தா, தானும் சூர்ய நமஸ்காரம்தான் செய்வதாய் ஊரையே நம்ப வைத்திருக்கிறார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சூர்யோதயத்தை காண்பது அவ்வளவு திவ்யமாய் இருக்குமென கேள்விப்பட்டதோடு சரி இதுவரை நான் பார்த்ததில்லை. காலையில் எழுந்து ஜாக்கிங் செல்ல முடிவு செய்து கிரவுண்டிற்கு செல்லாமல் சாலையில் ஓடினால் சாலையோர பெண்களின் கண்களில் தட்டுப்படலாம் என்ற நப்பாசையில், ஓடுவதற்கு சாலையை தேர்ந்தெடுத்து, நாய்கள் துரத்த ஜாக்கிங்கை ரன்னிங்காய் மாற்றியதுதான் மிச்சம். நான் எத்தனை முறை நாய்களால் துரத்தப் பட்டிருக்கிறேனோ.. அதை விட குறைந்த எண்ணிக்கையிலான செஞ்சுரிகளையே சச்சின் அடித்திருப்பார்!


முந்தைய இரவு அளவுக்கு அதிகமான ஆல்கஹால் அடித்திருந்தால், அடுத்த நாள் அதிகாலை பாறாங்கல்லை தலைக்குள் பொருத்தியிருப்பது போன்ற பிரமையை தரும். உடனுக்குடன் சூடாக சில பல இட்லிகளையோ, உப்புக் கரைசலில் எலுமிச்சை சாறு சேர்த்தோ வயிற்றை நிரப்பும்வரை கல் இறங்காது. பள்ளி காலத்து காலை நேரமெல்லாம் ஸ்கூல் பஸ்  பிடிக்க ஓடியதிலேயே கடந்துவிட்டது. இப்போதுவரை பஸ் கிளம்பும் கடைசி நிமிடத்திற்கு முன் பஸ் ஸ்டாப்பில் நிற்பது அரிய நிகழ்வாகவே நடக்கிறது. முதுகில் புத்தக மூடை இல்லையெனினும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஓடி தொரத்தித்தான் பஸ் ஏற வேண்டியிருக்கிறது. கல்லூரி காலத்தில் எங்களுக்குள் துளிர் விட்ட விபரீத ஆசையொன்றை நிகழ்த்திப் பார்க்க வெகு சீக்கிரமே கல்லூரி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வேறொன்றுமில்லை பெண்களுக்கென்று தனியே அமைந்திருக்கும் பிரத்யேக கழிவறை எவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தோம். ஆளாளுக்கு ஒவ்வொரு கற்பனையை சொல்ல, எதற்கு வம்பென்று, நேரில் சென்று பார்த்து தீர ஆராய்ந்த பின் உறுதி செய்ய முடிவானது. அதற்காகத்தான் இந்த வெகு சீக்கிர அட்வஞ்சர் முயற்சி. காவலுக்கு ஒருவனை படியிலேயே நிறுத்திவிட்டு நாங்கள் நால்வர் மட்டும் உள்ளே சென்றோம். கால்கள் நடுங்கியபடியேதான் இருந்தது. பெரிய வித்தியாசமில்லை, சுமதி மேடத்தை திட்டி இந்த சுவற்றிலும் கிறுக்கியிருந்தார்கள். காவலுக்கு நின்றவன் சத்தம் கொடுக்கவே இடத்தை காலி செய்தோம். வெளியில் ஹாஸ்டல் பெண்கள் அனைவரும் மெல்லிய நைட்டியில், ஜடை பின்னியும் பின்னாத முழுக்க விரித்தும் போடாமல், அள்ளியும் முடியாமல் ஒருமாதிரி கேசத்தோடு, வாயோரம் வடிந்து விட்டிருந்த ஜலவாய் அடையாளம் தெரியும்படி, ப்ரஷ், பேஸ்ட், துண்டு சகிதம் சர்வ சாதாரணமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர். தேவதைகளுக்கு சாத்தான் வேஷமும் பொருந்தித்தான் போகிறது ! எங்களை கண்டதும் சின்ன மிரட்சி காட்டி, தேன் மொழிதான் கேட்டாள், 

என்னங்கடா இந்த நேரத்துல?? ... 
கேண்டீன்ல போண்டா போடுறதுக்கு என்ன எண்ணெய் யூஸ் பண்றாங்கன்னு பாக்க வந்தோம்.... நீங்க என்னடி இவ்ளோ காலைல இங்க??   
ஹாஸ்டல்ல தண்ணி வல்லடா அதான் இங்க வந்தோம்...
முன்பே தெரிந்திருந்தால், பாத் ரூமில் மறைவிடம் தேடியிருக்கலாம் பச்.... அதே பாத்ரூமில் என் பெயரையும் கிருஷ்ண ப்ரியா பெயரையும் இணைத்து கிசுகிசு மாதிரி என்னவோ எழுதியிருந்தார்கள். உங்க டாய்லெட்ல இதுமாதிரி ஒரு சமாச்சாரம் பாத்தேன்னு சொல்லி எப்படி அவளிடம் கேட்பது, இறுதிவரை கேட்கவே இல்லை. (ஆரம்பிச்சுட்டான்டா... )

ஒரு சிலர், காலை எழும்போது உள்ளங்கைகளை பரபரவென தேய்த்து அதில்தான் விழி பதிப்பார்கள். கண்ணாடி பார்த்து எழும் பழக்கத்தை கடைபிடிப்பவர்களும் உண்டு. எழுந்தவுடன் செய்தித்தாள் தேடி, பாத்ரூம் ஓடி, சமையலறை நோக்கி, சாமி படத்தை தலை மாட்டிலிருந்து உருவி... இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி எப்படியோ விடிந்து விடுகிறது. எனக்கெல்லாம் கையினில் சூடாக டீ கோப்பையை வைத்துக்கொண்டு யார் எழுப்பினாலும் எழுந்துகொள்வேன். கோயம்பத்தூரில் டெக்ஸ்மோவில் வேலை செய்துகொண்டே பார்ட் டைம்மாக நாங்கள் குடியிருக்கும் வீட்டு ஓனர் லேத்தில் பணியாற்றினேன். ஒரு ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கீழே சென்று அங்கே 'நல்ல தண்ணீர்' பிடித்துக் கொண்டிருந்த ஓனர் அக்காவிடம், 'கீ கொடுங்க' என்று தெளிவாகத்தான் சொன்னேன். ஐயர் ஒருவர் ஆட்டுக்கறியை பார்ப்பதுபோல் அருவருப்பாய் பார்த்துவிட்டு, 'ஒரு நிமிஷம் தம்பி' எனக் கூறி உள்ளே சென்றார். திரும்பி வரும்போது கிட்டத்தட்ட 110 டிகிரி செல்ஸியஸ் கொதிநிலையில் இருந்த செம்மண் நிற பானம் ஒன்றை தந்தார். என்னங்க இது?, நீங்கதான தம்பி டீ கேட்டீங்க ... என்றார் எரிச்சலோடு. நான் கேட்டது 'க்கீ'ங்க என்றேன் அப்பாவியாய். இருவர் முகத்திலும் அசடு வழிய, வேறு வழியே இல்லாமல் அந்த டீயை நானே குடித்துவிட்டேன். அதன்பிறகு அவர்கள் வீட்டில் பச்சை தண்ணீர் கூட குடிக்க கூடாதென முடிவு செய்துவிட்டேன்.


மார்கழி மாத அதிகாலையில் பெருமாள் கோவிலில் கிடைக்கும் பொங்கலுக்கு நிகர் போதையான திடப்பொருளை ரஷ்யாவாலும் கண்டுபிடிக்க முடியாது. காலை நேர பஜனை கோஷ்டி நெற்றி, நெஞ்சு, கைகளை கூட விடாமல் நாமம் போட்டுக்கொண்டு அந்தக் குளிரிலும் சட்டை போடாமல், பாடும் பாடல் ராகத்திற்கு சற்றும் பொருந்தாத பின்னணி இசையை ஆர்மோனியம், மிருந்தங்கம், கஞ்சிரா முதலான கருவிகளிலிருந்து இசைத்துக் கொண்டு போவார்கள். அப்பாவின் நிர்பந்தம் பொருட்டு ஒரு மார்கழி மாதத்தில் பாதிக்கும் மேல் அவர்களுடன் நானும் அந்த அதிகாலையில் யாத்திரை கொண்டேன். வேற்று உடம்பில் அந்தக் குளிரில் எப்படி முயன்றும் கஞ்சிராவைக் கூட தாளத்தோடு இசைக்க முடியவில்லை. இருந்தும் அவர்கள் தாளம் தப்பி கன்னாபின்னாவென்று கருவிகளை இசைப்பதற்கு குளிருக்கு அப்பாற்பட்ட காரணமும் ஒன்று இருந்தது. தெருவினில் சுற்றித் திரியும் நாய்களிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளவே இம்மாதிரியான வினோத சத்தங்களை எழுப்புகிறார்களாம். அதிகாலையில் கண்ட கனவு நிச்சயம் பலிக்கும் என்பார்கள். நான் ஐந்தாவது படிக்கும்போது, என் மாமா அதிகாலையில் கண்ட கனவொன்று பலிக்கும் என இன்றும் திடமாய் நம்புகிறேன். ஏதோ பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக் கூண்டில் என் மாமா நிற்க, நான் நீதிபதியாக வந்தமர்ந்து, ஆர்டர், ஆர்டர், ஆர்டர் என மூன்று முறை வாயால் சொல்லியதோடல்லாமல் சுத்தியலால் மேசையை வேறு மூன்றுமுறை தட்டி, இது ஒரு வழக்கில் எடுத்துக்கொள்ள முடியாத விசித்திர வழக்கு, ஆகவே என் மாமா நிரபராதி... அவரை நான் விடுதலை செய்கிறேன், என்பேனாம். ஒரு நாள் பலித்து நானும் நீதிபதி ஆகிவிட மாட்டேனா என்ன???


கணம் கோர்ட்டார் அவர்களே.....



டிஸ்கி : இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் அனைத்துமே அதிகாலை நிகழ்வாகவே இருப்பதனால்,  'அதி காலை' என்ற வார்த்தை அதிகளவில் இடம்பிடித்திருக்கும். எவ்வளவோ முயன்றும் தவிர்க்க இயலவில்லை. படிக்கையில் எரிச்சலாய் இருப்பின் மன்னிக்கவும்