#HBDThalaivaa முதலில், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அண்ணாமலை படத்தில் ஒரு காட்சி, எல்லாம் இழந்து நிற்கும் ரஜினி தன் நண்பனை பார்த்து கை விரல்களில் சொடுக்கு போட்டபடி இப்படி ஆரம்பிப்பார், அசோக் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ இந்த நாள்... உனக்கு எனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடுச்சு, இந்த யுத்தத்துல உன்ன விட பேர், பணம், புகழ், அந்தஸ்து சம்பாரிச்சு பல அடுக்கு மாடி ஹோட்டல்கள் கட்டி உன் முன்னேற்றத்த தடுத்தி நிறுத்தி நீ எப்ப்டி என் வீட்டு இடிச்சு என் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ அதே மாதிரி உன் வீட்ட இடிச்சு உன் குடும்பத்த நடுத் தெருவுக்கு கொண்டு வரல எம்பேரு அண்ணாமல இல்லடா... அத்தனை பெரிய சவாலை கோவம், ஆத்திரம், இயலாமை எல்லாம் கலந்து, கைல ஒரு பைசா கூட கிடையாது அடுத்து எண்ணப் பண்ணும்னு தெரியாது. படிப்பறிவும் இல்ல ஆனால் முழுத் தன்னம்பிக்கையோட மீசையை சுண்டி, திமிரோட தொடைய தட்டி, தலைமுடியில் வேர்த்து தேங்கியிருக்கும் வேர்வைத் துளிகள் தெறிக்க தலை சிலுப்பி சொல்லிவிட்டு திரும்பி நடந்து வரும்போது, அப்டியே உடம்பு சிலிர்த்துப் போகும். இந்தக் காட்சியை ரசிக்க ரஜினி ரசிகனாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கைல முன்னேறனும்னு நெனைக்கிற ஏதோவொரு ஆத்மாவாக இருந்தாலே போதும். ஏனெனில் ரஜினி தன் படங்களில் பெரும்பாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சியம் என்பத்தைத்தான் பால பாடமாக வைத்திருந்தார்.
விமர்சனம் இல்லாத கடவுளே கிடையாது. ரஜினி மனிதன்தானே, மகள்கள் திருமணத்திற்கு பிரியாணி விருந்து தருவதாய் சொல்லி இன்றுவரை செய்யவில்லை. இது இப்போதைய பரவலான குற்றச்சாட்டு. போக்கிரியார், அமலா குற்றச்சாட்டு ஒன்றைச் சொன்னார், நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். வேலைக்காரன் படத்தில் ரஜினியுடன் நடித்த அமலாவை ரஜினி துரத்தி துரத்தி இம்சை செய்ததாகவும், அதனால் கொதிப்படைந்த திருமதி. லதா ரஜினி அவர்கள், ரஜினியை விரட்டி விரட்டி அடித்ததாகவும் செவிவழி செய்தி கேட்டிருக்கிறேன். உண்மையில் நடந்ததை நானறியேன். ஸ்ரீதேவியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று, தாம்பூலம் மாற்றும்போது பவர் கட் ஆனதால் செண்டிமெண்ட் சரியில்லை எனச் சொல்லி ரஜினி வேண்டாமான சொன்னதாகவும் சொல்வார்கள். எல்லாமே செவிவழி செய்திகள்தான்.
பத்திரிக்கையாளர் சாவி ஒருமுறை ரஜினியிடம் ஏதேதோ சுற்றம் பற்றி கேட்டுவிட்டு இறுதியில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார், உங்களிடம் வரும் பெண்களை எப்படி அணுகுகிறீர்கள்? அதற்கு ரஜினி, அடக் கடவுளே இதுக்குத்தானா இப்டி சுத்தி வளச்சீங்க... என்கிட்டே வர்ற பொண்ணுங்க அம்மாவா வந்தா அம்மா, சகோதரியா வந்தா சகோதரி, தோழியா வந்தா தோழி, acceptedனு வந்தா accepted. ஒரு காலத்துல பொண்ணு இல்லாம நைட் தூக்கம் வருமான்னு கூட யோசிச்சிருக்கேன் இப்போலாம் அப்டி இல்ல நெறைய மாறிட்டேன். எண்பதுகளின் மத்தியில் எடுத்த பேட்டி என நினைக்கிறேன்.
ரஜினி படங்களில் முதல் பாதியில் ஒரு காமடியான சண்டைக் காட்சியும், கதாநாயகியுடன் சேர்ந்து கொஞ்சம் காமடி காட்சிகளும் இருக்கும். நிஜ வாழ்வில் ரொம்பவே சீரியசாக ஆரம்பித்த அவர் அரசியல் அத்தியாயம் பெரும் நகைப்புக்குறியதாய் மாறிப்போனது. 1991-1996 ஜெயலலிதா தமிழக முதல்வராக முதன்முறை பதவி வகித்த காலகட்டம். ஆடம்பரத் திருமணம், கும்பமேளா குளியல் கூத்து, அதுவரை தமிழகம் கண்டிடாத அளவுக்கதிகமான செக்யூரிட்டி கெடுபிடிகள் என தமிழகத்திற்கு புதிது புதிதான கலாச்சாரங்கள் ஊடுருவியது. தனியார் மீடியாக்களும் இந்த காலகட்டத்தில்தான் தோன்றி பெருக ஆரம்பித்தன. முதல்வர் தங்கியிருக்கும் அதே போயஸ் கார்டன் ஏரியாவில்தான் ரஜினியின் வீடும் அமைந்திருந்தது. காரில் வந்து கொண்டிருந்த ரஜினி, தடுத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு காரணங்கள் காட்டி நடந்து போக பணிக்கப்பட்டார். வழக்கம்போல் அமைதியாக நடந்து சென்றுவிட்டார். ஆட்சி முடியும் தருவாயில் சண் டிவி மிகப்பெரும் மீடியாவாக உருப் பெற்றிருந்தது. அரை மணிக்கொருமுறை ஜெயலலிதாவின் ஆடம்பர வாழ்வை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களோ கலைஞரை நம்பவும் தயாராக இல்லை. ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா படங்களின் அரசியல் பஞ்ச் வசனங்கள் பெரிய விவாதப் பொருளாகின்றன. மூப்பனார் காங்கிரசிலிருந்து பிரிந்து த.மா.கா என்ற கட்சியை தொடங்குகிறார். இந்த சமயத்தில் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்க செல்லும் ரஜினியை மறித்து நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்க, இன்னொருமுறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, எனச் சொல்லி கையெடுத்து கும்பிட்டு சிரித்தவாறே டாட்டா காட்டிச் செல்கிறார். எளிதில் உணர்ச்சி வசப்படும் தமிழக மக்கள், இதற்கும் உணர்ச்சியினை வெளிக்காட்ட தயாரானார்கள். திரும்பி வந்து கட்சி ஆரம்பி தலைவா, நாங்க உங்கள சிஎம் ஆக்குறோம் தலைவா என தமிழ்நாட்டின் தலைஎழுத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ரஜினிக்கு தரத் தயாராகுகிரார்கள். இடையில் வைகோ, ரஜினியின் ஆதரவை தனக்கு தரும்படி கேட்டு அதனை ரஜினி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் சொல்வார்கள். அமெரிக்காவிலிருந்து மொட்டை போட்டுக்கொண்டு வந்தார் ரஜினி.
என்ன செய்யப்போகிறாரென ஆவலோடு மீடியா, மக்கள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் காத்திருக்க... ஏதேதோ அரசியல் காய் நகர்த்தல்கள் நடக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்பது தெளிவாகிறது. தமாகா, திமுக கூட்டணிக்கு ரஜினிதான் வித்திட்டதாகவும் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நான் ஆதரவு அளிப்பதாக ரஜினி சொன்னதாகவும் செய்திகள் வந்தன. அப்படியொரு கூட்டணியே அமைந்தது. சன்டிவி நேரடி ஒளிபரப்பில், கலைஞர்ஜி, மூப்பனார்ஜி என ஆரம்பித்து இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தரும் வகையில் சரியாக இருபது நிமிடம் பேசினார். ரசிகர்கள் இந்த கூட்டணி வெற்றிபெற அதிகமாக உழைத்தனர். எதிர்கட்சியின் முதல்வர் வேட்பாளரே தோற்றுப்போகும் அளவிற்கு அமோக பெற்றியை பெற்றது. சில மணி நேரங்களிலேயே காட்சிகள் மாறத் துவங்கியது. அத்தனை நாட்களாக ரஜினி படம் தாங்கிய போஸ்டர்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்தன. மன்ற ஆட்களின் உழைப்பை சுரண்டிய கட்சிக்காரகள் அவர்களை தரக்குறைவாக நடத்தத் தொடங்கினர். கட்சி அலுவலகங்களுக்கு வரக் கூடாதென உத்தரவிட்டனர். ரஜினி ரசிகர்கள் கட்சி வேலைகலிருந்து நேரடியாகவே ஒதுக்கப்பட்டனர். மிக மெதுவாக அரசியல் என்பது கோஷம் போடுவதும், போஸ்டர் ஓட்டுவதும் மட்டுமே அல்ல என்பது ரசிகர்களுக்கு புரிய ஆரம்பித்தது. புகார்கள் ரஜினிக்கு கொண்டு செல்லப்பட்டது வழக்கம்போல் மௌனத்தை பரிசாக தந்துவிட்டு இமயமலை சென்றார். அங்கே சென்றாவது அரசியல் தெரிந்ததா என்றால் அதுவும் இல்லை.
உலக தேர்தல் வரலாற்றிலேயே, எந்த ஒரு மனிதனும் செய்யாத ஒரு புதுமையை ரஜினி புகுத்த நினைத்தார். மறக்கவே முடியாத நிகழ்வது. கர்நாடக நடிகரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று, பல உள்ளடி வெளியடி வேலைகள் செய்து கிட்டத்தட்ட 108 நாட்களுக்கு பிறகு அவரை வீரப்பனிடமிருந்து மீட்கிறார்கள். இந்த நேரங்களில் ரஜினி மிகவும் துடித்துப் போனார். ஒரு மேடையில், வீரப்பன் ஒரு 'ராட்சசன்' என்கிறார். சக வன்னியனை ஒரு கன்னடத்தான் ராட்சசன் எனச் சொன்னதை பாமக நிறுவனர் ராமதாசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் ஒரு மேடையில், ரஜினியை அவன், இவன் என ஏக வசனத்தில் பேசி சிகரட் பிடிக்கிறதையும், தண்ணி அடிக்கிறதையும் கத்துக் கொடுத்தத தவிர நீ என்னடா செஞ்சிருக்க நாட்டுக்கு? என மிகக்காட்டமாக சாட, ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். பாபா படத்தின் ரிலீஸ் சமயமது. மதுரைக்கு ஏதோ கூட்டத்திற்கு சென்ற ராமதாசிற்கு கருப்பு கொடி காட்டுகிறார்கள் ரஜினி ரசிகர்கள். கூட்டத்திலேயே அவர்களுக்கு தர்ம அடி கிடைக்கிறது. பாபா படத்தின் படப்பெட்டி சூறையாடப்படுகிறது. ரஜினி, நான் அவர்களை தேர்தல் சமயத்தில் கவனித்துக் கொள்கிறேன் என சூளுரைக்கிறார். லோக்சபா தேர்தல் வந்தது. பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்கிறது. இப்போதுவரை ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையில் எவ்வித சமாதானமோ, உடன்பாடோ, பேச்சுவார்த்தையோ ஒன்றும் நிகழ்ந்திருக்கவில்லை. இப்போதும் ரஜினியின் விரோதி ஜெயலலிதா என்றே சித்தரிக்கப் பட்டிருந்தார். (படையப்பா படத்திலும் ஒரு அதீத திமிர் பிடித்த பெண்தான் வில்லி. படையப்பா படத்தைக் காண அவர் போலவே உள்ளே ரௌண்ட் நெக் டி ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் மேல் ஒரு சட்டையும் போட்டுக்கொண்டு போய், டிக்கட் கவுண்ட்டரில் நெருக்கியடித்து பிதுங்கும் கூட்டத்தில் கிட்டத்தட்ட் 45 நிமிடங்கள் நிற்கிறேன் சுவாசிக்க காற்று குறைந்து மயக்கமடையும் சூழ்நிலையில் கவுண்ட்டர் திறக்கப்பட்டு காற்று வந்து உயிர் பிழைத்தேன். இந்த கஷ்டம் எல்லாம் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற எழுத்துக்கள் மின்னும் வரைதான், அதை கண்டவுடன் மயக்கமாவது, சுவாசக் காற்றாவது) கலைஞர் இன்னும் ரஜினியின் குட் புக்கில்தான் இருந்தார். புதிய விரோதியாக சேர்ந்தவர் ராமதாஸ் மட்டுமே. ரசிகர்களின் மனநிலையும் அஃதே. விட்டார் பாருங்கள் ஒரு அறிக்கை, என் விரோதிகள் என் நண்பர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே பாமக போட்டியிடம் 6 தொகுதிகளில் மட்டும் அவர்களை தோற்கடியுங்கள், என்று. தமிழகமே கொஞ்சம் மிரண்டுதான் போனது. அதே சமயத்தில்தான் முக்காடு போட்டுக்கொண்டு குத்தவைத்து அமர்ந்தவாறு இருக்கும் ரஜினியின் படத்தோடு, 'இறைவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று' என்ற வாசகம் தாங்கிய 'ஜக்குபாய்' படத்தின் விளம்பரங்கள் தமிழகத்தின் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளி வந்தது. 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிவிட, ரஜினி வாய்ஸ் மீதான பிம்பம் சறுக்கியது. தலைவர் வழக்கம்போல் இமயமலை பறந்தார்.
எல்லாவற்றையும் உதறிவிட்டு, ஜக்குபாய் படத்தை நிறுத்திவிட்டு, அன்புமணி ராமதாசின், படங்களில் சிகரட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என்ற கோரிக்கையையும் ஏற்று, பி. வாசுவை இயக்குனராக்கி, சிவாஜி ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், சந்திரமுகி எனும் படத்தை அறிவித்தார். அவர் அரசியல் செய்தால் என்ன? இமயமலை போனால் என்ன? எங்களுக்குத் தேவை இம்மாதிரியான புதுப்பட அறிவுப்புகள்தானே. சந்திரமுகி பாடல் வெளியீட்டு விழாவில், கண்ணா யானை விழுந்தா எழுந்திரிக்கிறது கஷ்டம். நான் குதிரை டக்குனு எந்திருச்சிருவேன். என்றார் தனக்கே உரித்தான ஸ்டைலில் மைக் ஸ்டேண்டை தட்டியவாறு. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் படமும் ரஜினி படமும் ஒரே நாளில் வெளியானது. கோயம்பத்தூரில் முதல் நாள் முதல் ஷோ எப்படியோ அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கியாயிற்று. சூப்பர் ஸ்டார் ரஜினி என மின்னி மறையும் எழுத்துக்களை காணும்போதே உடலின் ரத்த நாளங்கள் சிலிர்க்கிறது. மின்னல் மாதிரி வரும் காரின் கதவுகளை திறந்துகொண்டு ரஜினி நடந்து வருகிறார். தியேட்டர் சத்தத்திலும் ஆராவாரத்திலும் கிழிந்தே விட்டது. ஒவ்வொரு ரஜினி படத்தின் முதல் காட்சியிலும் விசில் அடிக்க தெரியாமல் போனதை எண்ணி வருந்துவேன். அதற்கு பதிலாக தொண்டை கிழிய கத்தி தொண்டை கட்டி அடுத்த இரு நாட்களுக்கு ஹஸ்கி வாய்சிலேயே பேசி பாவப் பரிகாரம் தேடிக் கொள்வேன். வேட்டையன் வரும்வரை அரங்கு முழுதும் சின்னச் சின்ன ஆராவாரங்கள். நிச்சியதார்த்திற்கு பிறகு வரும் சண்டையில் கையில் இருக்கும் கம்பியை சுற்றிவிட்டு மேல் சட்டையை இரு கைகளால் விலக்கி உதடு தூக்குமாறு கைகளை வைப்பார் ஓரத்தில் அந்தக் கம்பி சுழன்றுகொண்டே இருக்கும். த்தா தியேட்டர்ல இடி விழுந்த மாதிரியான சத்தம் இதெல்லாம் அந்த இடத்துல உணரனும் அப்போதான் தெரியும். வேட்டையன் வரும்போது தியேட்டர் குண்டு வெடித்த கலவர பூமி போல் ஆகிவிட்டது. அந்த சின்ன கண்களில் ரஜினி காட்டும் குரூரமும், கோபமும், வன்மமும் அடடா. படம் பார்த்து வெளியில் வந்தவுடன், ரஜினி தன் ரசிகர்களுக்கு சொன்னது புரிந்தது. ஏற்கனவே ராஜாதி ராஜா படத்தில் சொன்னதுதான், எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம். அட டாங்கு டக்கர டக்கர டக்கர டக்கர டக்கர டோய். நான் புரிந்துகொண்டேன். படமும் ஏ பி சி என எல்லா சென்டர்களிலும் அடித்து நொறுக்கி மேய்ந்து பெரிய கலக்சனை தந்தது. பாபா சமயத்தில் ரஜினி இனி அவ்ளோதான் என பேசிய, எழுதிய அனைவருக்கும் அவருடைய பாணியிலேயே பதில் சொல்லிவிட்டார். அவர் பாணி என்பது பட வெற்றி மட்டுமே. பஞ்ச் இல்லை, சிகரட் இல்லை, அச்சுறுத்தும் வில்லன் இல்லை, சவால் இல்லை ஆனால் சந்திரமுகி எகிடு தகிடு ஹிட்டடித்தது. தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தான்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார்.
காலம் அப்படியேவா விடும்? வந்தது ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சனை வழக்கம்போல், சம்பந்தமே இல்லாத திரையுலக புள்ளிகள் இந்த திட்டத்தை ஆதரித்து உண்ணாவிரதத்தை அறிவித்து பந்தலை போட்டு குத்த வைத்தனர். பந்தலின் முன்பு நடிகர்களை காண மக்கள் திரண்டிருந்தனர். நடிகர் விஜயகுமார் ரஜினி துதி பாடிவிட்டு அமர்ந்தார். (நான் கேட்டனா முருகேஷா?? ) சத்யராஜ் மைக்கை பிடித்தார், உண்மையில் அவர் ரஜினியைத்தான் ஒரு பிடி பிடித்தார். முதல் வார்த்தையே எவன் பேரச் சொன்னா நீங்க கை தட்டுவீங்கன்னு தெரியிம் அப்டி அவன் பேரச் சொல்லித்தான் கைதட்டல் வாங்கணும்னா அதுக்கு நான் நாக்க புடுங்கிட்டு சாவன்யா... என ஆரம்பித்து முழுக்க முழுக்க ரஜினியை மட்டுமே குறிவைத்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் இப்டியே இருந்தேனா... முபுனா ஆய்டுவே கேகூனா ஆய்டுவ என தமிழர்களின் சொரணையையும் உரசிப்பார்க்க தவறவில்லை. இவை அனைத்தையும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் கன்னத்தில் விரல்களை அழுந்தப் பதித்து கவனித்துக் கொண்டிருந்த ரஜினி, விருட்டென மைக் அருகே வந்தார். எப்போது மைக் பிடித்தாலும் எந்த விழாவாகினும் மேடையில் இருப்பவர்களின் பெயர்களை வரிசையாக சொல்லும் ரஜினி இம்முறை, நான் ரொம்ப கோவமா இருக்கேன். என்ன பேசறது? நம்ம இடத்துல நமக்காக நாம ஒரு திட்டம் போட்டு நல்லது செய்யலாம்னு போனா அத கூடாதுன்னு தடுக்கிறவன ஒ ஒ ஒதைக்க வேணாம்?? என உணர்ச்சிகரமாக பேசுகிறார். நீங்கெல்லாம் தெய்வம் என மக்களை கை காட்டுகிறார். கூட்டம் ஆர்பரித்து சிலிர்க்கிறது. சில கர்நாடக அரசியல் தலைவர்களின் பெயரைச் சொல்லி அவர்களையும் சாடுகிறார். என் ரத்தமெல்லாம் சூடேறுகிறது. தலைவர திட்டினவனுக்கெல்லாம் கால் பண்ணி திட்றேன். கொண்டாட்டமா இருக்கு. தலைவர்டா, பேச்ச கேட்டியா, என்னமோ சொன்னியே, என்றவாறே பித்து பிடித்தது போல அலைகிறேன் அன்று முழுதும்.
நாம் சந்தோஷமாக இருப்பது ரஜினிக்கு எப்படித் தெரிந்து என்பது பற்றித் தெரியவில்லை. அடுத்தநாளே ஒரு அறிக்கை விட்டார். இம்மாதிரியாக நேற்று நான் பேசிய வார்த்தைகளால் கர்நாடக மக்கள் புண்பட்டிருந்தால் ப்ளா ப்ளா ப்ளா மன்னிக்கவும். அதன்பின் அந்தத் திட்டம் என்னவானதேன்றே தெரியவில்லை. ஆனாலும் சிவாஜி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். அதே சிலிர்ப்பு, அதே பரவசம், அதே ஆராவாரம், அதே தொண்டை கட்டல் எல்லாமே எல்லாம்.
ரஜினி தான் சண்டையிட்டிருந்த எல்லோருடனும் சமாதானமாக போக ஆரம்பித்தார். எந்தக் கட்சிக்கும் வாய்ஸ் தர மறுத்தார். தந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது என்பதையும் உணர்ந்திருந்தார். ஜெயலலிதாவை அஷ்டலக்ஷ்மி என புகழ்ந்தார். ராமதாஸ் வீட்டிற்கு பூங்கொத்து அனுப்பினார். அழகிரி வீட்டு திருமண நிகழ்விற்கு பயணித்தார். படம் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது போல் காட்டிக் கொண்டார். எந்திரன் படம், வியாபாரத்தில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ரஜினியை பயன்படுத்த தெரிந்தவர்கள் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அவரின் மகள்களும் விதிவிலக்கல்ல.
ராணா படத்தின் அறிவிப்பு வெளியாகி, ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உடைந்துபோன கரகரப்பான குரலில், வந்தர்றேன் ராஜாக்களா உங்களுக்கெல்லாம் என்ன செய்யப்போறேன் கண்ணுகளானு.. குரல கொடுத்துட்டு உயிர் பிழைத்து வந்தார். எத்தனை ரசிகர்கள் மொட்டையெடுத்து, காவடி தூக்கி, பால் குடம் எடுத்து, அலகு குத்தி, தேர் இழுத்து தீ மிதித்து அத்தனை பிரார்த்தனைக்கும், நேர்த்திக் கடன்களுக்கும் ரஜினி எதையும் திருப்பித் தரவில்லை. உண்மையில் அவர் எதுவும் தருவார் என யாரும் எதுவும் செய்யவில்லை. அவர் மீதான ரசிகர்களின் மாசற்ற அன்புதான் அத்தனையையும் நிகழ்த்திக் காட்டியது. தமிழருவி மணியன் கூட, சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட வட மாவட்ட மக்களுக்கு நீங்கள் ஏதேனும் நல்லது செய்தால் அது உங்களை இதுநாள் வரையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரும் கைமாறாக இருக்கும் என்றார். சில லட்சங்களை நிதி உதவியாக வழங்கிவிட்டு விலகிக் கொண்டார். படையப்பா வெற்றி விழாவில் தன சொத்துக்களில் பாதிக்கும் மேல் ராகவேந்திரா ட்ரஸ்டிற்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்தார். அதைப்பற்றிய தகவல் அதன் பின் ஒன்றுமில்லை.
எனக்குத் தெரிந்து அவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் அடுக்கிவிட்டேன். ரஜினி என்பது ஒரு brand. பிரியாணி போடுவார், தாலிக்கு தங்கம் வழங்குவார், வீட்டுக்கொரு மரக்கன்று தருவார் போன்ற எதிர்பார்ப்புகளே அற்பமானவை. யோசித்துப் பாருங்கள், எம்ஜிஆர், மக்களைப் பார்த்து என் ரத்தத்தின் ரத்தங்களே.. என்பார். நானும் நீயும் ஒரே ரத்தம் உனக்கான குறைகளை என்னிடம் சொல்லலாம் நான் செய்வேன். என்பதாக பொருள் கொள்ளலாம். ரஜினி அப்படியா, என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே என்பார். நம்மை தெய்வம் என்கிறார், நாமல்லவா தர வேண்டும்!. ரஜினி, தமிழகத்தில் சம்பாதித்துவிட்டு, கர்நாடகாவில் சொத்துக்கள் வாங்குகிறார் என்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் சென்னையிலோ, வெளி நாட்டிலோ, வெளி மாநிலத்திலோ சம்பாதித்த பணத்தில் அங்கேயே சொத்துக்கள் வாங்குகிறோம். சொந்த ஊரில்தானே வாங்குகிறோம் இதை ரஜினி செய்வதில் என்ன குறைந்து விட்டது?. தமிழ் திரைப்படங்களில், ரஜினிக்கு முன்னாள் நடித்துக் கொண்டிருந்தவர்களில், கருப்பாக திராவிட நிறத்தில் ஒரு கதாநாயகன் முகத்தையாவது காட்டுங்களேன். எதார்த்தமான கதை மாந்தர்களையும், எதார்த்தமான கிராமங்களையும் தமிழ் திரையில் படரச் செய்த பாரதிராஜாவே புதுநெல்லு புதுநாத்து வரை கதாநாயகனாக சிவப்பான ஒருவனைத்தான் நடிக்க வைத்திருந்தார். (கமல், சுதாகர், கார்த்திக், காதல் ஓவியம் ஹீரோ, சத்யராஜ், ராஜா..). ரஜினி மட்டும் இல்லையெனில் இன்றைய தேதியில் கருப்பு நிறத்தில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் கதாநாயகர்கள் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே....
ரஜினி திரையில் கோமாளித்தனங்கள் செய்கிறார், துப்பாக்கியால் சுட்டு சிகரட் பற்ற வைக்கிறார். சும்மா வாயில் சிகரட் வைப்பதை விடுத்து தூக்கிப் போட்டு பிடிக்கிறார். இதெல்லாம் ஒரு ஸ்டைலா?? நாம் ஸ்பைடர் மேன் படத்தை ரசித்தது போல்தான், ஜப்பானியர்கள் முத்து படத்தை ரசித்தார்கள் போன்று என்னன்னவோ சொல்வார்கள். ரஜினிக்கு பிறகு எத்தனை காந்துகள் வந்தார்கள்... யாராவது நின்றார்களா? இந்த சிம்பு விரலை வைத்து ஏதேதோ வித்தைகள் செய்து கொண்டிருந்தாரே போடா கோமாளி என ஒதுக்கி விட்டார்கள். கண்களிலும் சிரிப்பிலும் இயல்பிலேயே ஈர்ப்பிருக்கும் ரஜினிக்கு மட்டும்தான் இது சாத்தியம். காலில் கயிறைக் கட்டி ஜீப்பை நிறுத்துவது அதால பள்ளத்தாக்கை குதிரை வண்டியில் தாவுவது, கத்தியை கழுத்தருகில் சுத்த விடுவது, இது போன்ற மாயாஜாலங்களை ரஜினியைத் தவிர்த்து வேறெந்த ஹீரோ செய்திருந்தாலும் ஊரே சிரித்திருக்கும். நீங்கள் ஏதோ ஒரு சோகத்தில் கண்களை மூடியபடி தனிமையில் அமர்ந்திருக்கிறீர்கள், அப்போது முகமே அறியாத குழந்தை வந்து உங்கள் கன்னத்தில் முத்தமிடுகிறது. கண் விழித்துப் பார்த்து குழந்தை உங்களுக்கு முத்தமிட்டதை அறியும்போது உங்கள் மனபாரங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டுருப்பீர்கள். எனக்கு ரஜினி அப்படியொரு குழந்தையின் முத்தம்.
அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கு, நிம்மதி போய்விடும், சுமைகள் அதிகரிக்கும், பெரிய பொறுப்பு அதான் பயம் கொள்கிறார் போன்ற ஆயிரத்திற்கும் அதிகமான காரணங்களை அடுக்குவார்கள். என் சிற்றறிவிற்கு எட்டியவரை இதுநாள் வரை அவர் சம்பாதித்த பணத்தை இழக்க அவர் விரும்பவில்லை. நீங்களோ, நானோ பணத்தை சம்பாதித்து சேர்த்து வைக்கிறோமா?? இல்லை சமூக தொண்டிற்கென இத்தனை சதவீதத்தை ஒதுக்கி தொண்டு செய்கிறோமா?? அவர் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? மனதிருப்பர்வர்கள் செய்யட்டும் இல்லையேல் போகட்டும் இதையெல்லாம் ஒரு குற்றமாக கருதிக் கொண்டிருக்க முடியாது. நாங்க கொடுத்த பணம்தானே? நாங்கள் அடித்த விசில்தானே? கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்? என கேட்போமானால், புதுகவிதை, அதிசியபிறவி, மாவீரன், நாட்டுக்கொரு நல்லவன், பாபா, குசேலன் போன்ற படங்களுக்கும் கொடுத்தோமா?? விசில் அடித்தோமா? ஆக நமக்கே தெரியும் அது சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் சரக்கில்லாத படத்திற்கு நாம் பணம் விரயம் செய்வதில்லை. 3 மணி நேரம் சந்தோஷமா ரசிச்சு படம் பாத்தோம் பணம் கொடுத்தோம். அத திருப்பிக் கொடுன்னு இப்போ கேட்பது எந்த வகையில் ஞாயம்?!
இன்றுவரை ரஜினியின் நடிப்பிற்கான படங்களாக, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற ரொம்ப முந்தைய சிற்சில படங்களையே சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில் ரஜினி மிகச் சிறந்த நடிகர். கடைசி வரை அவரை சந்தையில் விலைபோகும் கோமாளி பொம்மையாகவே வைத்திருந்து வீணடித்து விட்டோம். என்னை நம்பி பணம் போட்ட புருட்யூசர் நஷ்டமடையக் கூடாது, ரஜினி அடிக்கடி சொன்ன வார்த்தைகள் இவை. இதனை சரியாக கணித்து அவரை வியாபாரத்திற்கு மட்டுமே பயன்படுத்திகே கொண்டது முதலாளி வர்க்கம். பாலசந்தரும் இதற்கு விதிவிலக்கல்ல குசேலன் சமீபத்திய உதாரணம். இதில் நமக்கும் கணிசமான பங்கிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. கவனித்திருக்கிறீர்களா?? ரஜினி பொதுவாழ்வில் அளவிற்கதிகமான விமர்சனமும், பிரச்சனையும் எதிர்கொண்டது அவர் சொந்தமாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்த பின்னர்தான்.(அருணாச்சலம், படையப்பா, பாபா மூன்றும் ரஜினியின் சொந்தப் படங்கள்) அவரை வைத்து மற்றவர்களால் பணம் சம்பாதிக்க இயலவில்லை என்ற நிலை வந்த பின்னர்தான் அவர் மீதான விமர்சனங்கள் வலுப் பெறுகிறது. பாபா படம் சரியாக போகாததிற்கு பணத்தை திருப்பிக் கேட்ட விநியோகதஸ்கர்கள், நினைத்ததை விடவும் அதிக லாபம் ஈட்டிய ரஜினியின் படங்களுக்கு அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்களாம்?
ரஜினி திரையில் பிரதிபலிப்பது நம்மைத்தான். ஆட்டோ ஓட்டுவார், மூட்டை தூக்குவார், கார் மெக்கானிக்காக இருப்பார், தங்கைகளின் திருமணத்திற்கு பாடுபடுவார். தம்பிகளின் எதிர்காலத்திற்கு உழைப்பார். வஞ்சிக்கப்படுவார், ஏமாற்றப்படுவார், எள்ளி நகையாடப்படுவார். எல்லாவற்றிலிருந்தும் மீண்டு ஜெயித்துக் காட்டுவார். நாமும் அதானே, எத்தனை பேரிடம் அவமானப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம் இவர்கள் முன்னாள் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தை வாழ்வின் ஒருமுறையாவது நமக்குள்ளே சொல்லிக் கொண்டிருப்போம். நாம் வைராக்கியாக்யத்திற்காய் காலம் முழுதும் போராடுவோம். ரஜினி மூன்று மணி நேரத்தில் வென்றிருப்பார். நிஜவாழ்வில் ராஜியின் பிம்பம் எதுவாகினும் இருந்துவிட்டுப் போகட்டும் எங்களுக்குத் தேவை சவாலில் ஜெயிக்கும் திரை பிம்பம்தான். எங்களுக்கு உற்சாகம் தருவது அதுதானே ஒழிய அவரின் நிஜ வாழ்வுக் குணங்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது முற்றிலும் தேவையில்லாத ஒன்று.
ரஜினி திரையில் பிரதிபலிப்பது நம்மைத்தான். ஆட்டோ ஓட்டுவார், மூட்டை தூக்குவார், கார் மெக்கானிக்காக இருப்பார், தங்கைகளின் திருமணத்திற்கு பாடுபடுவார். தம்பிகளின் எதிர்காலத்திற்கு உழைப்பார். வஞ்சிக்கப்படுவார், ஏமாற்றப்படுவார், எள்ளி நகையாடப்படுவார். எல்லாவற்றிலிருந்தும் மீண்டு ஜெயித்துக் காட்டுவார். நாமும் அதானே, எத்தனை பேரிடம் அவமானப்படுகிறோம், ஏமாற்றப்படுகிறோம் இவர்கள் முன்னாள் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தை வாழ்வின் ஒருமுறையாவது நமக்குள்ளே சொல்லிக் கொண்டிருப்போம். நாம் வைராக்கியாக்யத்திற்காய் காலம் முழுதும் போராடுவோம். ரஜினி மூன்று மணி நேரத்தில் வென்றிருப்பார். நிஜவாழ்வில் ராஜியின் பிம்பம் எதுவாகினும் இருந்துவிட்டுப் போகட்டும் எங்களுக்குத் தேவை சவாலில் ஜெயிக்கும் திரை பிம்பம்தான். எங்களுக்கு உற்சாகம் தருவது அதுதானே ஒழிய அவரின் நிஜ வாழ்வுக் குணங்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது முற்றிலும் தேவையில்லாத ஒன்று.
என்னால் ரஜினியை திரைக்கு உள்ளே எந்தவித மனச் சோர்வும் இன்றி ரசிக்க முடிகிறது. அவர் என்னை சிரிக்க வைக்கிறார், சிலிர்க்க வைக்கிறார். தர்மதுரை படத்தை அழாமல் பார்த்ததாக நினைவிலேயே இல்லை. திரையில் ரஜினி ஜெயித்தால் நானே ஜெயிப்பது போல் குதுகலமடைகிறேன். அவரை ரசிப்பது என்பது, ஒரு குழந்தையுடன் விளையாடுவது போல், ரயில் பயண ஜன்னல் போல், தலை வைக்கக் கிடைத்த தோழியின் மடி போல் அத்தனை சந்தோசம் தருவதாகவும் பரவசம் கொள்வதாகவும் இருக்கிறது. எனக்கு ரஜினியை ரசிப்பதுவும், பார்ப்பதுவும், கொண்டாடுவதுவும் பிடித்திருக்கிறது. செய்கிறேன்.. செய்தேன்.. செய்வேன். கொச்சடையான் ட்ரைலர் பிடிக்கவில்லை, தலைவரை பொம்மையாக பார்க்க மனம் ஒப்பவில்லை ஆனாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்தே தீருவேன் ஏனெனில் அது ரஜினியின் படம். என் மகளுக்கு 2 வயதாகிறது. லேப்டாப்பில் பாபா படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக அவளும் அந்தப் படத்தின் வாலிபால் சண்டைக் காட்சியிலிருந்து அப்படியே கொஞ்சம் சீன்ஸ் பார்த்தாள். சிறிது நேரம்தான் பீரோவைத் திறந்து ஏதோ துணியொன்றை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு நிற்கிறாள். என்ன பாப்பா இது? எனக் கேட்டால், பாப்பா எந்தப் பக்கமும் சாயாத பாப்பா என்கிறாள் மழலைக் குரலில். அதான் ரஜினி !
இதை எழுதிக் கொண்டிருந்த இடைவேளையில், நண்பர் ஒருவருடன் காஃபி குடிக்க சென்றிருந்தேன். இன்னைக்கு ரஜினிக்கு பொறந்தநாளாம் என ஆரம்பித்து அவர் மீதான அத்தனை எதிர்மறை விமர்சனகளையும் சொல்ல ஆரம்பித்தார். ஏற்றுக்கொண்டேன் இதில் நான் சொல்லியிருக்கும் பதில்களையும் சொல்லி வாயடைத்தேன். அவர் மீதான விமர்சனங்கள் எனக்கும் உண்டு, அதனால் என்ன?! ஹேப்பி பர்த்டே தலைவா.....
அருமையான பதிவு நண்பா
ReplyDeleteநன்றி நண்பா :)
DeleteSuper ji
ReplyDeleteநன்றி நண்பா :)
Deleteஎந்த பலனும் எதிர்பார்க்காமல் ..
ReplyDeleteஅவரின் வசிகர காற்றில் பிறந்து ..வளர்ந்து ..
ரசிகனாய் ரசித்து கொன்டிருக்கும் என்னற்ற
ரசிகர்களில் மனதை..
படம் பிடித்திருக்கும் ஒரு ரசிகனின் அழகிய பதிவு.....வாழ்த்துக்கள்! !
நன்றி நண்பா :)
Deleteஅட்டகசம் ப்ரோ ;-)
ReplyDeleteநன்றி நண்பா :)
DeleteVazhga Super star..
ReplyDeleteநன்றி நண்பா :)
DeleteWell balanced article ...
ReplyDeleteநன்றி நண்பா :)
Deleteநான் தான் முதல் கமென்ட் போட்டேன் என்று நினைத்தேன், என் கமேன்டையே காணோம் :(
ReplyDeleteஒரு ரஜினி ரசிகனாக உங்கள் எண்ணங்களை அருமையாக எடுத்துவைத்துள்ளீர்கள். இதைவிட நேர்மையாக எந்த ரசிகனும் பேசமுடியாது. உங்கள் மகளைப் பற்றி சொன்னது தான் ரஜினி அனைவரையும் ஈர்க்கும் சக்திக்கு ஒரு எளிய உதாரணம். வேகமும் விவேகமும் உள்ள ஒரு பதிவு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரஜினி :-)
amas32
நீங்க சொன்ன உடனே வந்து பாத்தேன். கமெண்ட்டைக் காணாம் சரி எங்கயோ தொலஞ்சு போச்சுன்னு மனச தேத்திக்கிட்டேன் நன்றிங்க்மா :)
Deleteநல்ல பதிவு இத படிச்சதும் ரஜினியப் புடிக்குதோ இல்லையோ உங்களப் புடிக்குது -லாரிக்காரன்
ReplyDeleteஹாஹா நன்றி மாம்ஸ் :)
Deleteஉங்கள் பதிவில் சில அம்சங்கள் நன்றாக இருந்தது,ஆனால் ரஜினியின் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லவில்லை.தமிழக மக்கள் மீது கொண்ட அன்பினால்-தமிழகத்தின் பக்கம் இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்டி தான் வாழ்ந்த கர்நாடகத்தையே எதிர்த்து "உதைக்க வேண்டாம்"என்ற மிகப் பெரிய வார்த்தையை-எந்த தமிழ் நடிகனும்,எந்த அரசியல்வாதியும்,எந்த தமிழ்க்குடி மகனும் சொல்ல துணியாத வார்த்தையை அவ்வளவு பெரிய மேடையில் சொன்னாரே-(சில ப்ரச்னைகளால் மறு நாள் வருத்தம் தெரிவித்தாலும்)அதற்கு எவ்வளவு பெரிய மனம்,தைரியம் வேண்டும். அடுத்து,கர்நாடகத்தில் சிலர் ரஜினியை எதிர்த்து அவர் படங்கள் இனி கர்நாடகத்தில் வெளியாகக் கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள்,அரசின் பாதுகாப்புடன் ஒரு வேளை படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் இங்கிருக்கும் சிலரே (ரஜினியின் மீதுள்ள பொறாமையினால்)ரஜினி இப்படி ஆவேசமாக பேசியிருக்க கூடாது,அப்படி பேசியிருந்தாலும் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்று அப்படியே திருப்பி விடுவார்கள்.இதனால் தான் தன்னால் யாருக்கும் பிரச்னை வரக் கூடாது என்பதால்-குசேலனை காவு கொடுத்து-வருத்தம் தெரிவித்து பிரச்னையை அதோடு முடித்தார்.(நீங்கள் குறிப்பிட்டது போல் சிவாஜி படம் அல்ல)அவர் வருத்தம் தெரிவிக்காமல்-கர்நாடகத்தில் குசேலன் ஒரு வேலை வெளியாகாமல் இருந்திருந்தால்-தமிழகத்தில் குசேலன் செம ஹிட்டாகியிருக்கும்.ஆனால் அவர் பணத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை.அந்த மேடையில் போலி தமிழன் சத்தியராஜ் பேசும்போது "திருப்பதிக்கு போகாதீங்க,சபரிமலைக்கு போகாதீங்க,பழனிக்கு திருத்தணிக்கு போங்க என்று தமிழ்க்கடவுளுக்கு ஆதரவாக(?) பேசிவிட்டு பிறகு தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளவும் இல்லை,காரணம் அவருக்கெல்லாம் அவ்வளவு தான் மதிப்பு. அடுத்து ஜெயலலிதாவை பற்றி அவர் கூறியது ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற ஓரிரு வரிகள் மட்டுமே.அடுத்த தேர்தலில் திமுகவும் தமாகாவும் பிரிந்ததால் தன் ஆதரவை விலக்கி கொண்டு நடுநிலைமை ஆகிவிட்டார்.பின் ஜெ.முதல்வராகி அப்போது விசிடியை ஒழித்ததற்காகவும்,வீரப்பனை அழித் தற்காகவும் நடந்த பாராட்டு விழாவில் பாராட்டி பேசினார்-இதில் என்ன தவறு இருக்கிறது,அவர் ஜெ.விற்கு ஜென்ம விரோதியில்லையே.அடுத்து நதி நீர் இணைப்பில் ஆர்வம் காட்டியதால் வாஜ்பாய்க்கு ஆதரவு-தன்னுடைய தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு வாக்கு என்று பகிரங்கமாக (எந்த கொம்பனுக்கும் அந்த தைரியம் வராதே) தெரிவித்தார்.கவிஞர் வைரமுத்து கூறியது போல(எந்த கட்சியினாலும் சுய ஆதாயம் அடைந்ததில்லை என்பதை) இது வரை ரஜினி "சூரிய" குளியல் குளித்ததில்லை,"இலையில்"சோறு உண்டதில்லை. அடுத்து பல நல்ல தர்ம காரியங்களை வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்து கொண்டு தானிருக்கிறார்,(சிலவற்றை (பலனடைந்தவர்கள் நட்பு வட்டங்களிடம் கூறி- ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூறியதால் எனக்கு தெரியும்) ஈகை இல்லாமல் கிடைத்து விடாது இவ்வளவு பெரிய வாகை. அடுத்து,படையப்பா வெள்ளி விழாவில் கூறியது-தன் வாழ்நாளுக்கு பிறகு தனது பாதி சொத்துக்கள் ராகவேந்திரா ட்ரஸ்டுக்கு போகும்,தன் குடும்பத்திற்கு போகாது என்பதே. சுட்டி- http://youtu.be/hsU9jVtXQkg. வாழ்க தலைவர் ரஜினி,வளர்க அவர் புகழ், நன்றி சகோ:-))- rajinirams@twitter.com
ReplyDeleteநன்றி... ஒரு ரஜினி ரசிகரிடம் இன்னொரு ரஜினி ரசிகன் ரஜினியின் செயலபாடுகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அழிப்பது போன்றதொரு அவஸ்தையான தருணம் ஒன்றும் இராது. குழந்தையின் மீது நானா, நீயா யார் அதிக பாசமாய் இருக்கிறோம் என ஒரு அப்பாவும் அம்மாவும் போட்டியிட்டுக்கொள்ளும் சங்கடத்தை ஒத்தது அது. சத்யராஜ் போலியா, அசலா, நகலா என்பது பற்றி ஆய்வகளை ஒதுக்கிவிடலாம். ஒக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டு, தான் தமிழன் என்ற பாதுகாப்பான அடையாளத்தை சுமந்துகொண்டு, அவர் சொன்னது ரஜினி தமிழன் இல்லை, தமிழரே இல்லாத ஒருவருக்கு தமிழர் பாலும், அவர்தம் வாழ்வின் பாலும் என்ன அக்கறை இருந்துவிடும் என்பதுதான். உண்மையில் சத்யராஜ் ரஜினியை மிகவும் பதட்டம் கொள்ளச் செய்தார் அந்த வேளையில்.. அத்தனை கோபமாக ரஜினியை எந்த மேடையிலும் யாரும் பார்த்திருக்க முடியாது என நம்புகிறேன். உடல் நடுங்கியபடியே, நெஞ்சை தட்டி ஆவேசமாக பேசும் சூழ்நிலைக்கு சத்யராஜ் தள்ளினார் என்பதே என் புரிதல். சத்யராஜின் எடுத்துரைத்த அந்த அக்கறையின்மையை பொய்த்துப்போக செய்ய வேண்டும் என்கிற பதட்டமும், நடுக்கமும் ரஜினியின் உடல் மொழியிலும் தெளிவாகத் தெரிந்தது. பொதுவாகவே மேடையில் கோர்வையாக வார்த்தைகளை அடுக்கி பேசும் தேர்ந்த மேடைப் பேச்சாளன் ரஜினி இல்லையெனினும், இத்தனை சம்பந்தமில்லாத வார்த்தைகளை உதிர்த்த ரஜினியின் பேச்சு, அவரை ஒரு பதட்டநிலை ஆட்கொண்டதையே காட்டியது. அந்தப் பேச்சை பார்த்தபின் உடலெல்லாம் புல்லரித்து, அப்போதைய என் நிலையை எந்த வார்த்தை கொண்டும் நிரப்ப முடியாது எனவே கருதுகிறேன். நீச்சல் தெரியாமல் கட்டையை பிடித்து தத்தளித்தபடி ஒரு மாதமாய் கடல் நடுவில் கிடந்த ஒருவனுக்கு, அடுத்த நொடி செத்துவிடும் தருவாயில், தோணி ஒன்று வந்து அவனை ஏற்றிக்கொண்டால் அவன் எப்படியொரு பரவசம் கொள்வான் அப்படியான மனநிலையில் இருந்தேன். சத்யராஜ் ஏற்படுத்திய இதே போன்றதொரு நிர்பந்தத்தை கர்நாடகாவிலும் ஏற்படுத்துகிறார்கள். எப்போதுமே தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையான ரஜினி இப்போது தன குருநாதர் தயாரிப்பாளர் என்றால் சொல்லவும் வேண்டுமா? அவர்கள் நஷ்டமடையக் கூடாது என்ற நோக்கத்தில், தான் அப்படி பேசியதற்காக கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்தாக கொள்ளலாம்.
Delete//கர்நாடகத்தில் குசேலன் ஒரு வேலை வெளியாகாமல் இருந்திருந்தால்-தமிழகத்தில் குசேலன் செம ஹிட்டாகியிருக்கும்//// உங்களின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உண்மைதான் நான் வேண்டுமென்றேதான் காலத்தை கணக்கில் கொள்ளாமல் சிவாஜி என்றேன். ஏனெனில் குசேலன் படத்தை நான் அப்படியொன்றும் ரசித்துப் பார்க்கவில்லை. நாடகம் போல் சென்றுகொண்டிருந்த படத்தில், ரஜினி வந்தபின் பட்டைய கெளப்பும் என்றிருந்த என்னை நிரம்பவே ஏமாற்றினார் இயக்குனர் வாசு. இதை பார்த்துவிட்டுத்தான் நான் கத பறையும் போள் பார்த்தேன். அற்புத அனுபவம் அது. ஆனால் மணி சித்ரதாழ் ஏற்கனவே பார்த்திருந்தேன், எனினும் எந்த உறுத்தலும் இன்றி முழுதாய் சந்திரமுகி படத்தில் ஒன்றிப்போகும்படி ரஜினி இழுத்துக்கொண்டார். படு கேவலமான திரைக்கதையால் ரஜினியால் கூட குசேலனை காப்ற்ற முடியவில்லை.
வைரமுத்து சொன்னதிலிருந்து, படையப்பா பட வெற்றிவிழாவில் ரஜினி பேசியது வரையிலான உங்கள் நான் உடன்படுகிறேன் :)
எனக்கு ஏன் ரஜினியைப் பிடிக்கிறது எனப் பலமுறை யோசித்திருக்கிறேன்!எப்போதும் ஒரே விடை தான் தோன்றும்!என்னுடைய எதோ ஒரு குணத்தை அவர் பிரதிபலிக்கிறார்!அதுதான் அவரிடம் என்னை இழுத்து செல்கிறது!நம் போட்டோவைப் பார்த்து நாமே மகிழ்வதைப் போல!..மிக அருமையான பதிவு!...
ReplyDeleteநன்றி நண்பரே :)))
Deleteகட்டுரை படிக்கும் போதே புல்லரிக்குது, first day first show தலைவர பாக்குற மாதிரி
ReplyDeleteஒரு சில factual errors இருந்தாலும் கட்டுரையை வெகுவாக ரசித்தேன். மிக சிறு வயதிலேயே ரஜினியின் நடிப்பால் கவரப்பட்டவன் நான். எனக்கு அவர் படங்களைத் தவிர எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவரிடம் எந்த விமர்சனமும் இல்லை.
ReplyDelete