Monday, January 20, 2014

பசித்த இரவு !

தூங்கிவிட்டதாய் நம்பியபடியே படுத்திருக்கிறேன். உண்மையில், கண்கள் மூடி காட்சிகளை மட்டும் உள்ளுக்குள் விரியச் செய்திருக்கிறேன். இந்த இரவை கடந்தே ஆகவேண்டும், ஆனால் அது அத்தனை எளிதல்ல. பசி, பழக்கப்பட்ட ஒன்றுதான் எனினும், பசியோடு இத்தனை நீண்ட இரவை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. சாதம் பிசைந்த கையோடு வெளியே துரத்தப்பட்டிருக்கிறேன். எங்கே செல்வதெனத் தெரியாமல் விரட்டியடித்த வீட்டின் மாடி அறையிலேயே படுத்திருக்கிறேன். எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன் என்பது பற்றி தெளிவில்லை. ஒரு யுகமோ, ஒரு மாதமோ, ஒரு நொடியோ கடந்திருக்கலாம். இரை கொத்தி திரும்பும் கோழியின் தலை போல் நிலையில்லாமல் புரண்டபடியே கிடக்கிறேன். இனி உறங்கமுடியாது.

விளக்கை போட்டு அறைக்கு வெளிச்சம் பாய்ச்சி, அலமாரியில் களைந்து கிடக்கின்ற புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்டுகிறேன். வாசிக்க வாசிக்க எழுத்துக்கள் எதுவும் மூளையைத் தொடாமல் வயிறை மட்டுமே குறி வைத்து தாக்குகிறது. வயிற்றிலிருந்து அவ்வப்போது புறாக் கூட்டத்திலிருந்து வெளிப்படும் சத்தம் மாதிரியான ஒலி உற்பத்தியாகி இம்சிக்கிறது. சுவாச இடைவெளியில் சுருங்கிய வயிறு விரிய மறுக்கிறது. நா வறண்டு உமிழ்நீர் சுரப்பைத் துண்டிக்கிறது. எச்சில் விழுங்கக் கூட வழியில்லாத இயலாமை என்னை ஏளனம் செய்யத் துவங்குகிறது. ஏளனம், அழையா விருந்தாளியாய் கோபத்தை இழுத்து வருகிறது. என் கோபம் தணிக்க புத்தகத்தை ஆக்ரோஷமாக கிழிக்கத் துணிகிறேன். அது கிழிய மறுத்து அடம்பிடிக்கவே கிழித்தே ஆகவேண்டிய வெறி கொள்கிறேன். இரு கைகளிலும் பிடித்து, இலக்கில்லாமல் மருகியோடும் இளங்கன்றுகுட்டியொன்றின் ஓட்டத்திற்கொப்பானதொரு சிறு பிரளயம் நிகழ்த்தி முடிந்தமட்டிலும் கிழித்து அறை முழுதும் வீசி எறிகிறேன். ஆறாம் அறிவு மொத்தத்தையும் கோபம் கபளீகரம் செய்துகொண்டுவிட்டது. இனி என்னால் சிந்திக்க முடியாது.

அங்கிருந்த மின் விசிறியை எட்டி உதைக்கிறேன். அது தலை திருப்பி என் முகத்தில் இனி முழிக்கவே கூடாதென கவிழ்ந்து விடுகிறது. இன்னும் அடங்காத ஆத்திரத்தில் தொலைகாட்சி பெட்டியை கீழே தள்ளிவிடுகிறேன். இத்தனை கோபத்திலும், பைத்தியக்காரச் செயல்களிலும் கூடவே இருக்கிறது வயிற்றில் பசி. நேரம், முன்னிரவை கடந்து விட்டிருக்கிறது. அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த பொருட்களில், கண்களுக்கு சிக்கிய அனைத்துப் பொருட்களையும் இடம் மாற்றி, தூக்கி வீசி எதை தேடுகிறேன் என்ற பிரஞ்ஞை கூட இன்றி எதையோ மும்மூரமாக தேடுகிறேன். எல்லாவற்றையும் அலங்கோலப்படுத்தியத்தில் கிடைத்த சில்லறைக் காசுகளை பொறுக்கிக்கொண்டு, இதுவரை தாழிட்டு என் பசியின் மௌன சாட்சியாயிருந்த கதவினையும் விட்டுவைக்காமல் பெருஞ்சத்தத்துடன் அறைந்து சாத்திவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

பையில் இருக்கும் சில்லறைக் காசுகளுக்கு இரண்டு வாழைப்பழங்களோ அல்லது ஒரு சிகரட்டோ வாங்கலாம். நான் ஒரு சிகரட் வாங்கிக்கொண்டு நகர்ந்தேன். இந்த பின்னிரவில் நான் சிகரட் பிடிப்பதை எவரும் பார்த்து தந்தையிடம் வத்தி வைக்க வாய்ப்புக் குறைவுதான் எனினும், எனக்கிப்போது தனிமை அவசியம். எதிரில் யாரைக் கண்டாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளச் செய்யும் வினோத வியாதியான பசியால் பீடித்திருக்கிறேன். சிகரட்டை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சுடுகாடு நோக்கி நடக்கிறேன். மயான பூமியின் பேரமைதி எத்தனைக் கொடுமையான தனிமைக்கும் சிறிதேனும் ஆசுவாசம் தரவல்லது என்பதில் பெரும் நம்பிக்கையுண்டு எனக்கு. யார் மேல் கோபம் என்பதே விளங்காத பல பொழுதுகளில் மயானம் சென்று தனிமையில் அமர்ந்துவிட்டு வருவது எனக்கு வழக்கமான ஒன்றுதான் என்பதால், எவ்வித உந்துதலும் இல்லாமல் அனிச்சையாகவே மயானம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

சிறிதும் பெரிதுமாய் பத்துப் பதினைந்து சமாதிகளும், சிற்சில மணல் மேடுகளும் ஒரேயொரு தகனக் கொட்டகையும் கொண்ட ஓரளவிற்கு மதிப்பான சுடுகாடுதான். நானும் பிணங்களும் மட்டுமே இருக்கும் இந்தத் தனிமை வசீகரிக்கிறது. தோற்றம் மறைவு கல்வெட்டு பதித்த ஒரு உயர்தர சமாதி மீதேறி அமர்ந்துகொண்டேன். யாரோ அய்யாவு என்பவர் 1927இல் பிறந்து 1999இல் இறந்திருக்கிறார். ஏனென்றே தெரியாமல் சிரிப்பு வருகிறது. எத்தருணத்தில் வேண்டுமானாலும் மடையுடைத்து வெளிவர காத்திருக்கும் ஆற்று வெள்ளம் போல் இரு கண்களிலும் நீர் கோர்த்து முண்டியடித்துக்கொண்டு படிந்திருக்கிறது. மெலிதாய் சிரித்துக் கொண்டேன். எதற்காக இப்போது சிரிக்கிறேன் என்பது தெரியவில்லை.ஒருவேளை அய்யாவுவிற்கு தெரிந்திருக்கலாம். சிலீரென்ற காற்றுப்பட்டு மெலிதாய் உடல் குளிர்கிறது. இன்னும் சிறிது நேரம் இதேபோல் காற்று வீசிக் கொண்டிருந்தால் உடல் நடுங்க தொடங்கிவிடும்.

பையிலிருந்த சிகரட் எடுத்து உதடுகளுக்கிடையில் நட்டுவைத்து, தீப்பெட்டி தேடும்போது உறைக்கிறது, எடுத்து வரவில்லை. காற்று வீசாமலே உடல் நடுங்கத் தொடங்குகிறது. இந்த சிகரட்டை இப்போதே பற்றவைத்தாக வேண்டும். மனதோ, மூளையோ எதன் கட்டளை பொருட்டோ, இருளை கண்களுக்கு பழக்கிக்கொண்டு கண்ணிவெடி தேடும் பதட்டத்திலும் லாவகத்திலும் சுடுகாட்டைச் சுற்றி வருகிறேன். அருகிலிருந்த புதரில் சரசரவென ஏதோவொன்று அவசரமாய் ஊர்ந்து நகர்கிறது. சத்தம் மட்டுமே கேட்க முடிகிறது. இருளில் இம்மாதிரியான சத்தங்கள் வேறெந்த பிராணியையும் தவிர்த்து பாம்புகளைத்தான் நமக்கு கற்பனை செய்யத் தூண்டும். நானும் விதி விலக்கல்ல. இப்போது தீப்பெட்டியை விட்டுவிட்டு மெல்லக் குனிந்து அப்புதரினை நோட்டம் விடுகிறேன். உள்ளிருந்து 'ஸ்ஸ்ஸ்ஸ்' என பாம்பொன்று படமெடுத்து வந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அப்படியெதுவும் நிகழ்ந்திடவில்லை. இன்னும் சற்று முன்னேறி கொஞ்சம் ஆழமாக கண் பதிக்கிறேன். எந்த சலனமும் இல்லாமல் மற்றுமோர் சடலம் போல் கிடக்கிறது அந்தப் புதர். கொட்டகையில் பிணம் எரித்த கங்கிருந்தால் வசதிப்படுமென தோன்ற.. வேகவேகமாய் தகன கொட்டகை நோக்கி ஓடி பார்த்தததில், சாம்பல் குவியலுக்கிடையில் ஒரு மண்டையோடும், சில எலும்புத் துண்டுகளும் மட்டுமே கிடந்தன.

உரக்கக் கத்த வேண்டும்போல் இருந்தது. கத்துகிறேன் ஏதேதோ வார்த்தைகள் நிரப்பி, சத்தம் வந்தால் போதுமென்ற நிலையில் கத்திக்கொண்டே இருக்கிறேன். இன்னும் உரக்க கத்துகிறேன். என் சத்தம், பேய்களை தொந்தரவு செய்து அவைகள் சண்டைக்கு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. என் தலைக்கு நேர் மேலே மரத்தில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களை கலைத்து விடாமல் இருந்தால் போதும். திடீரென ஏதோ தோன்ற, கொட்டகை கம்பியில் கை விட்டுப் பார்த்ததில் ஒரு தீப்பெட்டி அகப்பட்டது. பெருமூச்சொன்று அதுவாய் வருகிறது. இத்தனை நேரம் தீப்பெட்டியை மட்டுமே சிந்தித்து தூங்கிக் கொண்டிருந்த பசி, மீண்டும் முழித்துக்கொண்டுவிட்டது. சிகரட் புகை, வறண்ட தொண்டை வழியே உட்புகுந்து குடலை அடைத்துத் திரும்புகிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்காவது முறை வழிக்கும்போது மனம் கட்டுப்பட்டு மெல்ல நிலை பெறுகிறது. புகைத்தபடியே மீண்டும் அய்யாவு சமாதி மேல் தஞ்சமடைந்தேன். எதிலாவது முட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன்பென்றால் முட்டியிருப்பேன். இப்போது, முட்டினால் வலிக்கும் என்பதை உணர முடிகிறது. கொஞ்சமாய் அழுது கொண்டேன். இந்த இரவில், அதுவும் இடுகாட்டில் அமர்ந்து அழுதாலும்... இதை யாரும் கவனிக்கவில்லை என்பதை சுற்றும் முற்றும் பார்த்து ஊர்ஜீதம் செய்துகொண்டேன்.

இறந்துவிட்ட அட்டைப் பூச்சியொன்றை இழுத்துப்போகும் எறும்புகள் போல் ஏதேதோ நினைவுகள் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போதும் பசி இருக்கிறது. பழகிய நாய்க்குட்டி போல் எவ்வித உறுத்தலும் இன்றி அதுபாட்டிற்கு இருக்கிறது. இந்தப்பசி நெறையவே போதிக்கிறது. நெறைய சவுடால்கள் விடுகிறது. குறிக்கோளை அடையச் சொல்லி நிர்பந்திக்கிறது. எனக்கான உணவை என்னையே தேடச் செய்யும் அற்புத நிலைக்கு துரத்துகிறது. இத்தனை நேரம் கண்ணில் மாட்டாத நட்சத்திரங்கள் மெல்லத் தலை காட்டுகின்றன. அன்னாந்து பார்த்தபடியே அய்யாவு சமாதி மீது சாய்ந்து படுத்துக் கொண்டேன். நட்சத்திரங்களுக்கு பெயர் வைத்து விளையாடுகிறேன். அதில் ஒன்றின் பெயர் அய்யாவு, எத்தனை ஜம்பமாய் வாழ்ந்தாரோ... இத்தனை பெரிய சமாதி எழுப்பியிருக்கிறார்கள். இதோ அடுத்தவேளை உணவிற்கு வக்கில்லாத ஒருவனின் காலுக்கு கீழேதான் கிடக்கிறார். இதே சுடுகாட்டில் நண்பன் ஒருவனின் தந்தையை புதைத்தார்கள். நான் முதன்முதல் பார்த்த மயான நிகழ்வது. பிறங்கையில் மூன்று முறை மண்ணைத் தள்ளியவுடன் மொத்த மண்ணையும் இட்டு நிரப்பி மூடிவிடுகிறார்கள். இரண்டொரு மழையில் அந்த மணல் மேடும் கரைந்து சமதளமாகிவிடுகிறது. எவ்விடத்தில் அவரைப் புதைத்தோம் என்பதை தேடக் கூட முடியாது. நட்சத்திரங்கள் பெயர் மாறி ஒவ்வொன்றிற்கும் காதலிகள் பெயர் சூட்டிக் கொள்கின்றன. பெண்களுக்கு பசியை மறக்கடிக்கச் செய்யும் வல்லமை இருக்கிறது. பசியை துரத்திவிட்டு பெரும்போதையை உள்ளே செலுத்திவிடுவார்கள். காதலிகள் புடைசூழ, சுடுகாட்டு இருளில், அய்யாவு சமாதி மீது பசியோடு படுத்திருக்கும் இந்தச் சூழல் சுகமாயிருக்கிறது.திடும்மென வெண்புடவை கட்டிக்கொண்டு ஏதேனுமொரு மோகினி பிசாசு வராதா...  என்ற ஏக்கம் வேறு சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் மனதில் சேர்கிறது.

நினைவுகளோடு சேர்ந்துகொண்டு மெலிதாய் காற்றும் வீச, சுருண்டு படுத்துக்கொன்டதில் எப்போது தூங்கினேன் என்பதே தெரியவில்லை. விடிந்து விட்டது. இரவு முழுதும் பின்னணி வாசித்துக் கொண்டிருந்த தவளைகள் ரீங்காரம் நின்றிருந்தது. நட்சத்திரங்களை காணவில்லை. சூரியன் மட்டும் முகத்தில் அறைந்து இளஞ்சூட்டை நிரப்பி என் தூக்கத்தை கலைத்து விட்டிருந்தது. சமாதியை விட்டு அகன்று மெல்ல நடக்கத் தொடங்குகிறேன். இரவு வந்த பாதைதான் ஆனால் இப்போது வெளிச்சம் நிரம்பி காட்சிகளுக்குள் புது நம்பிக்கை தருகிறது. மயான முடிவுவரை வந்தபின் திரும்பிப் பார்த்தேன். அய்யாவு பலமாகச் சிரித்தார். மெதுமெதுவாய் மொத்தப் பிணங்களும் இடி இடித்தது போல் பெருஞ்சத்தத்துடன் சிரிக்கத் தொடங்கின. காதுகளை அடைத்துக்கொண்டு பிரதான சாலைக்கு வந்துவிட்டேன். இருளைவிட வெளிச்சத்தில் பாதை தெளிவாகத் தெரிகிறது. நிச்சியம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும் !


     


   

15 comments:

  1. அற்புதமான எழுத்து நடை! படிப்பவர் மனத்தைக் கட்டிப் போடுகிறது.

    //சிகரட்டை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சுடுகாடு நோக்கி நடக்கிறேன்.// அது தானே உண்மை நிலையும். தெரிந்தோ தெரியாமலோ புகைப் பிடிக்கும் பழக்கம் எங்குக் கொண்டுபோய் விடும் என்று சொல்லியிருக்கிறீர்கள் :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா இப்டி யோசிச்சு எழுதல. அப்டி வந்தது சந்தோசமே :))))

      Delete
  2. // எத்தனை ஜம்பமாய் வாழ்ந்தாரோ... இத்தனை பெரிய சமாதி எழுப்பியிருக்கிறார்கள். இதோ அடுத்தவேளை உணவிற்கு வக்கில்லாத ஒருவனின் காலுக்கு கீழேதான் கிடக்கிறார். // யதார்த்த வரிகள்... :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த மொத்தக் கதைளையும் எனக்கு பிடிச்ச வரிகளும் இதுதான் மாம்ஸ். நன்றி :)))

      Delete
  3. கண்ணெடுக்காமா வாசிச்சேன் .. Interesting read.. எங்க கடைசிவரைக்கும் உங்க காதலிகளை உள்ள இழுக்காம‌ விட்டிடுவீங்களோன்னு நினைச்சேன்.. இழுத்துட்டீங்க. :-)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா சுடுகாடென்ன.... அகலிகை உள்ளார போனாக்கூட காதலியையும் இழுத்துட்டுத்தான் போவேனாக்கும். நன்றி :))

      Delete
  4. செம... படிக்க ஆரம்பிச்சதும் தெரியல முடியறதும் தெரியல..

    அடுத்த ஆண்டு சிறுகதை வெளியிடறோம் ஜி

    -beingbritz

    ReplyDelete
    Replies
    1. வெளியிடுறோம், கிச்சடி ஆர்டர் கொடுக்குறோம். நன்றி :)))

      Delete
  5. அருமையான கதை, தௌிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, வாசிக்கும் பொழுதில் காட்சிகள் கண்முன்னால் விரிகிறது, வாசகனை கட்டிப்போட வைக்கும் தடங்கலில்லாத கதையோட்டம், இது மட்டுமல்லது என் விருப்பமான இரவு நேரத்தை சார்ந்த கதை.. அத்தனையும் அருமை !! இந்த அளவு இல்லையென்றாலும் இது போன்றதொரு கொடுமையான பசித்த இரவை கடந்து வந்த அனுபவம் எனக்கும் உண்டு ! ரசித்தேன், மறந்து போன கடந்த கால நாட்களை சில நிமிடங்கள் கண்முன் பார்ப்பது போன்ற பிரமிப்பு ! பிரமாதம் தோழரே.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. நன்றி :) #சுப்ரமணி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க :) தொடர்ந்து எழுதி துன்புறுத்துறேன் கண்டிப்பா :)

      Delete
  6. மேலே எழுதி இருக்கும் கதைக்கு பொழிப்புரை, பொருளுரை, முன்னுரை, என்னுரை எல்லாம் கொடுத்தால் நல்லாருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பேருதான் இலக்கியம் மச்சி :)

      Delete
  7. விரக்தியிலும்,பசியிலும் பீடிக்கப்பட்ட
    ஒருவனின் மன நிலையை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள் தோழர்..கதை என்ற உணர்வு எனக்கு கடைசி வரை இல்லை..

    ReplyDelete

அடிச்சு.... துவைங்க....