வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனை உண்டு. அவர்களால் எளிதாக சமைத்திட முடியும் ஆனால் என்ன சமைப்பது என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. பதிவெழுதலாம் என நினைக்கும் போதெல்லாம் என் பிரச்சனையும் அதுதான், என்ன எழுதுவது?? சரி இருக்கவே இருக்கிறது 'காதல்', காதல் சலித்துப்போகும் அளவிற்கு நாம் இன்னும் தரம் இழக்கவில்லை என்பதால், மீண்டும் ஒரு காதல் கதை....
நான் கல்லூரி படிக்கும்போது, என் சீனியரி.......
ஹே நிறுத்து... நிறுத்து..... இப்ப எதப்பத்தி எழுத போற??
நீ யாரு??
ஹே எரும நான்தாண்டா......
வாடி நல்லாருக்கியா??
நான் நல்லாருக்குறது கெடக்குது... இப்ப நீ எந்தக் கதைய எழுதப்போற??
ஏன் நம்ம கதையத்தான்.....
இல்ல கூடாது நம்ம கதைய நீ எழுதக் கூடாது....
ஏன்??
நீ எழுதினா உண்மைய அப்புடியே எழுதுறேன்னு..... என்னைய சந்தி சிரிக்க வச்சுபோடுவ...
ச்சீ ச்சீ நான் அப்டி செய்வேனா???
கண்டிப்பா செய்வ.. உன்ற நகக்கண் அசைவு கூட எனக்கு தெரியும்.
சரி சரி இப்போ கை பரபரங்குது நான் எதையாவது எழுதியே ஆகணுமே...
அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்ல.... நம்ம கதைய எழுதுறதுக்கு நீ எதுக்குடா?? கோயம்புத்தூர்ல சுத்திட்டிருக்குற நாய், எரும, காக்கா, குருவிக்கு கூட நம்ம கத தெரியுமே அதுங்களே எழுதும் அதுவும் உன்ன விட சூப்பரா ..
அப்போ ஒன்னு பண்ணலாம்.. எப்போ காக்கா குருவி கூட நம்ம கத எழுதும்னு சொன்னியோ, நம்ம கதய நீ எழுதலாம் எழுதுறியா??
நானா.. ஒதச்சே போடுவேன் ஓடிப்போய்டு. நானும் ஒன்னயாட்டம் வெட்டினு நெனச்சியாக்கும்??
அட டையலாக் எழுதும்போது பழகுதமிழ், பத்தி எழுதும்போது உரைநடைத் தமிழ் அவ்ளோதான் அனுபத்தத்தான எழுதப்போற.. கற்பனை செஞ்சு எழுதுறதுதான் கொஞ்சம் கஷ்டம்.
சரி, நானே எழுதுறேன் ஆனா இனி இந்தப்பக்கம் நீ எட்டியே பாக்கக்கூடாது சொல்லிப்போட்டேன் ஆமா, இப்டியே ஓடிப்போய்டு எழுதி முடிச்சுப்போட்டு கூப்புடுறேன்.
இனி இந்திரனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை, உங்களுக்கு கதை சொல்லவிருப்பது நான், நான் யாரென்று சொல்லி விடுறேன். என் உண்மையான பெயரைச் சொல்வதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அவனிடம் கேட்டால், அபர்ணா என்று வைத்துக்கொள்ள சொல்வான். அந்த பெயரை சூட்டிக்கொண்டால் கண்களில் புகுந்து தூசியாய் உறுத்துகிறது. எனக்கு இந்தக் கதையில் பெயர் இல்லை. அவனுக்கு பெயர் இருக்கிறது அதை கடைசியில் சொல்கிறேன். நான் அப்படியொன்றும் பேரழகி கிடையாது, உங்கள் பக்கத்து வீட்டில், அடுத்த வீட்டில் இருக்கும் 12வது படிக்கும் பெண் யாரையேனும் நானாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே இருக்கும் பெண்ணை கற்பனை செய்து கொள்ளச் சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் நான் காதலிக்கிறேன், காதலிக்கும் பெண்கள் அடுத்த வீட்டில் இருப்பதே நம் ரசனைக்கு உகந்தது. நான் சொல்லப்போவது, உலகில் இதுவரை சொல்லப்படாத கதையொன்றும் இல்லை. நீங்கள் படித்து ரசித்த கதையாகவோ, பார்த்து சலித்த சினிமாவாகவோதான் இருக்கும் எங்கள் கதையும். இது மற்றுமோர் காதல் கதையே.. இதை நான் உங்களுக்கு சொல்வதுதான் இதில் இருக்கும் சிறப்பும், குறையும்.
அவன் யாரென்றே எனக்கு தெரியாது, பெயர் என்ன? ஊர் என்ன? ஒன்றுமே தெரியாது. அன்று அந்த தொலைபேசியை அவன் தொட்டிருக்கவே கூடாது. அண்ணா, ஊட்டியில் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான். அந்த கல்லூரியில் பெண்களுக்கு மட்டுமே விடுதி இருந்தது. அண்ணா தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தான். மொத்த விடுதிக்கும் ஒரே ஒரு தொலைபேசிதான். நான் வீட்டிலிருந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், பேசியது அண்ணா இல்லை அந்த ராட்சஷன்.
ஹலோ ****** மேன்சன் ...
கருணா இருக்கானா???
இல்லீங்க இன்னும் கால்ஜ்லேர்ந்து வரல இன்னும் பத்து நிமிசத்துல கூப்டுங்க.. நீங்க??
நான் அவனோட சிஸ்டர்.
ஓ சரிங்க்கா வந்த உடனே சொல்றேன்....
டொக்
அக்காவாம். எப்படியும் எனக்கு மூத்தவனாகத்தான் இருக்க வேண்டும். பின் எப்படி என்னை அக்கா எனலாம்?? கருணா வரட்டும் அவன்கிட்ட சொல்லி அவனை உண்டு இல்லைன்னு செஞ்சிடலாம். எனதான் மனதில் நினைத்துக்கொண்டேன். ஏனோ அவனுடன் பேசத் தோன்றியது. ஐந்து நிமிடங்களில் மீண்டும் டயல் செய்தேன். விதி இப்படித்தான் விளையாடும் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. இன்னும் வரவில்லை என்றான். இப்போதும் அக்கா என்றுதான் சொன்னான். பெயர் கேட்டேன் சொன்னான். என் பெயரை கேட்பான் என நினைத்தேன். இறுதிவரை கேட்கவே இல்லை, 'ஏதாது பேசுங்க அண்ணா வர்ற வரைக்கும்' என நான்தான் ஆரம்பித்தேன். பிற்பாடு அவன் நிறுத்தவே இல்லை. அவனை நிறுத்தச் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. இடையிலேயே அண்ணா வந்துவிட்டான். முதல் புகாராக அந்த பொடியன் என்னை அக்கா என விளித்ததை கூறி கண்டிக்கச் சொன்னேன்.
அண்ணா கண்டித்திருப்பான் போல, இம்முறை பேசும்போது அக்காவென சொல்லவில்லை. ஆம் அடுத்தநாளும் டயல் செய்து பேசினேன். தினமுமான உரையாடலில் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறைய ஆரம்பித்தது. அம்மாவின் பார்வையில் வித்தியாசமும் தெரிய ஆரம்பித்தது. நல்ல வேலையாக செமஸ்டரும் முடிந்து விட்டிருந்தது. பைனல் இயர் முடித்து அச்சடிக்கப்பட்ட ஆட்டோகிராப் நோட்டோடு வந்த இறங்கினான் அண்ணா. ஒரு குறுகுறுப்பான ஆர்வத்தோடு அந்த நோட்டை புரட்டியதில், அவனும் எழுதியிருந்தான். டிஸ்லைக்ஸ் என்ற காளத்தில் ஸ்மோக்கிங் என எழுதி இருந்தான் ஆஹா. அண்ணாவுடனான க்ரூப் போட்டோவில் சிரித்தவாரு ஒரு பக்கமாக சாய்ந்து நின்றிருந்தான். அழகாக இருக்கிறான் போல்தான் இருந்தது. அண்ணாவிடம் கேட்காமலே அவன்தான் அந்த ராஸ்கல் என்பதை அறிந்துகொண்ட என் மூளையை நானே வியந்து கொண்டேன். ஆட்டோகிராப் நோட்டில் இருந்த அவன் வீட்டு தொலைபேசி என்னை யாருமறியாமல் குறித்து வைத்துக் கொண்டேன்.
தாய்மாமாவின் கல்யாணம் வந்தது, அவனையும் அழைக்கச் சொல்லி கர்ணாவிடம் சொன்னேன். நானே அழைக்கத்தான் போகிறேன் என்றான். பத்திரிகையில் அவன் முகவரியை நான்தான் எழுதினேன். கால் செய்து, தான் வரமுடியாது எனச் சொன்னதாக கர்ணா சொன்னான். அன்று இரவே அவனுக்கு போன் செய்தேன். கிரிக்கெட் விளையாட போயிருப்பதாய் சொன்னார்கள். என்ன இது இந்த இரவு நேரத்தில், யாராவது கிரிக்கட் விளையாடச் செல்வார்களா.. அவன் செல்வான். எப்போது பார்த்தாலும் கிரிக்கெட்தான் அவனுக்கு மதியம் 3 மணி, காலை 6 மணி இப்படி எத்தனை மணிக்கு டயல் செய்தாலும், சார் கிரிக்கெட் விளையாடத்தான் சென்றிருப்பார். (அப்போதெல்லாம் செல் போன்கள் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை). அடுத்தடுத்த முயற்சிகளில் எப்படியோ பிடித்து விட்டேன், என் தாய்மாமா என்னை திருமணம் செய்துகொள்ள நிர்பந்தித்ததையும் அதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், ஒரு வருடம் என் படிப்பு தடை பட்டதையும் அவனிடம் சொன்னேன், ஆமாம் ஏன் சொன்னேன்?? இதையேதான் அவனும் கேட்டான்
இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற???
தெரியல தோனுச்சு சொன்னேன்.... என்னை பாக்கனுன்னு உனக்கு ஆசை இல்லையா??
பாக்கனுந்தான் உங்க அண்ணா கல்யானம், இல்ல உன்னோட கல்யாணம்னா பரவால... உங்க மாமா கல்யாணத்துக்கு எப்டி வர்றது??
ஏன் வந்தா என்னா?? நீ வைக்கிற அம்பத்தோர்ருவா மொய்ய திரும்ப வைக்காம போய்டுவாங்களா??
ஒருவாறு பேசி அவனை கல்யாணத்திற்கு வர சம்மதிக்க வைத்துவிட்டேன். கல்யாணத்தில் நடந்த சம்பவமெல்லாம் இன்னுமொரு அழகான சிறுகதை. மண்டபத்தின் உள்ளே ஒரு குழந்தையை தூக்கி வைந்திருந்தேன். ஏதோ இரு கைகள் அதுவாகவே வந்து குழந்தையை தூக்கிக் கொண்டது திரும்பி பார்த்தால் என்னைக் கவனியாமல் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான். நானும் அவனும் ஒரே நிறத்தில்தான் உடை அணிந்திருந்தோம். முன் ஒத்திகை எதுவும் இல்லாமல் தற்செயலாக நடந்த சம்பவமிது. இதிலென்ன இருக்கிறது? தினம் நம்மை கடந்து செல்லும் எத்தனயோ பேர் நம்மை போன்றே உடை அணிந்து செல்கிறார்கள். அவன் என்னை கடந்து செல்லும் ஏதோ ஒருவன் போல் எனக்கு தோன்றவில்லை. யார் கண்டது இன்று ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்கும் நாங்கள், நாளை ஒரே மேடையில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ளலாம், அதுவும் இதே மண்டபமெனில் யார் தடுப்பார்கள்!. தானாக முன் சென்று சிரித்தேன் சில நொடிகள் யோசித்து ஹே ****** நல்லா இருக்கியா?? என்றான். அவன் கண்கள் மிகப் பெரியதாக விரிந்தது முட்டைக் கண்ணன். ம் என்றேன். அப்புறம் பேச்சு வரவில்லை. அத்துணை பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பந்தியில் என் கண்கள் அவன் இலையில் மட்டுமே இருந்தது. நான் சற்று அதிகமாக வைத்த கேசரியோடு என் கண்களையும் சேர்த்துத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு வடை, 4 பணியாரம், ஒரு ஊத்தப்பம் என்ற எண்ணிக்கை கட்டுப்பாட்டையெல்லாம் மீறி அவன் இலையில் சற்று அதிகமாகவே பரப்பினேன். அவனுடன் யாரோ இரண்டு பேர் வந்திருந்தனர் சரியாக கவனிக்கவில்லை. வீட்டிற்கு வரச் சொல்லி கேட்டேன் முடியாதெனக் கூறி அன்றே சென்று விட்டான். என்னையும் அவனுடனே அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம்.
செமஸ்டர் ஹாலிடேய்ஸில் அவனுடன் சரியாக பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவதே அரிதாகிப் போயிருந்தது. எப்போடா காலேஜ் திறப்பார்கள் என்றிருந்தது. ஒருமுறை, எப்பப்பாரு கிரிக்கெட் விளையாட போறியே?? இன்னிக்கு எத்தன ரன் அடிச்ச?? என்ற என் கேள்விக்கு, டக்கவுட் என்றான். 50, 60 ரன் அடிச்சேன்னு சொல்ல வேண்டியதுதான... எனக்கு தெரியவா போகுது? என்றேன். சின்ன விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்லக் கூடாது என்றான். கல்லூரி தொடங்கியது, அவன் தனது இரண்டாமாண்டு படிப்பை தொடர்ந்தான். நானும் கோயம்பத்தூர் காலேஜ் ஒன்றில் சேர்ந்தேன். வீட்டில் அம்மாவின் சந்தேகப் பார்வையில் தொடங்கி பின் அவளின் அனுமதியோடவே அவனுடனான தொலைபேசி உரையாடல் நீண்டது. அவனொருமுறை வீட்டிற்கு வந்திருந்தான். மிகுந்த சங்கடத்துடனையேதான் வந்தான். வற்புறுத்தி அழைத்தது நான்தான். நான்தான் சமைப்பேன் என்று அடம்பிடித்து சமையலறை நுழைந்தேன். அதிக அனுபவம் இல்லையெனினும் உப்பு முதல் உள்ளது வரை அளந்தே செய்தேன். எனக்கே தெரியாத என்னிடம் இருந்த சிரத்தை சிறப்புற வெளிவந்தது. மனது முழுதும் சிரித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறும்போது அவளிடம் இருக்கும் ஆத்மதிருப்தியோ, ஆயுட்கால பலனோ ஏதோ ஒன்றை பார்த்திருக்கிறேன். இவனுக்கு பரிமாறும்போது நானதை உணர்ந்தேன். அண்ணாவின் பார்வையில் நிறையவே சகுனித்தனம் தெரிந்தது, பொருட்படுத்தவில்லை. அவனை ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. எங்கள் வீட்டு மத்தியில் என் அருகில் அமர்ந்திருக்கிறான், நான் பறந்து கொண்டிருக்கிறேன். அடிக்கடி தலை முடியை கோதுகிறான்.... இவனுக்கு அறிவே கிடையாது அருகில்தான் நானிருக்கிறேனே... என்னிடம் சொன்னால் என்ன.... என் விரல்களே அவன் தலை முடியை கோதுவதற்க்குத்தான் படைக்கப்பட்டது என திடமாக நம்பினேன். பெரிய இளையராஜா ரசிகன், ராஜா பாடல்கள் பற்றி நிறையச் சொல்லுவான். எனக்கும் ஏ ஆர் ரஹ்மான்தான் பிடிக்கும். இதை முன்னிட்டு பல சண்டைகள் நிகழ்ந்திருக்கிறது எங்களுக்குள். ரஹ்மான், ராஜா இருவருமல்லாதவர்கள் இசையமைத்த பாடல்கள் நிறைந்த கேசட் ஒன்றை பரிசளித்தான். பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்துக்கொடுக்கும் ஒருவன். உள்ளுக்குள் காதலோ என்னவோ ஒன்று அலாரம் அடித்தவாறே இருந்தது. யார் முந்தி சொல்வது என்பதில் இருவருக்குமான பொதுவான தயக்கத்தில் இருவருமே சொல்லவே இல்லை. இடையில் இன்னுமொரு செமஸ்டர், நான்கு முறை கோயம்பத்தூரில் திருட்டுச் சந்திப்பு, சினிமா என என்னென்னவோ கடந்திருந்தது. இதோ வந்தே விட்டது பிப்ரவரி 14. உள்ளுணர்வு எப்படியும் அவன் சொல்லிவிடுவான் என்றே சொல்லியது. சில ரிங்குகளை கடந்து அவன் குரல், பின்னணியில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பேச்சுவாக்கில்தான் சொன்னான்,
நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொறக்குற கொழந்த ரொம்ப அழகா இருக்கும்ல....
இருக்குந்தான்... உன்ன யார்ரா கட்டிக்குவா???
எரும.. நான் ஐ லவ் யூனு நேரா சொல்லாமா அப்டி சுத்தியடிச்சு சொன்னேன்.
திடீர்னு கேட்டா எப்டி?? நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.
எத்தன நிமிஷம்??
பன்னி.... ஒரு டூ டேய்ஸ்??
ம்
ரீசீவரை வைக்கும்போது பின்னணியில் 'லவ் பண்ணு ஹைய்யோ பண்ணு' என்று ஒலித்தது, பண்ணிட்டேன்.
வாரம் தவறாமல் அவன் கோயம்பத்தூர் வந்தான். நான் ஸ்பெசல் கிளாஸ் எனச் சொல்லி வந்துவிடுவேன். என்ன மாயம் செய்தானோ என் அம்மாவிற்கு அவனை ரொம்பவே பிடித்திருந்தது, அந்த தம்பி இருக்கே... என ஆரம்பித்தால் ஒரே தம்பி புராணம்தான். நான் சொல்லவேண்டியது அனைத்தையும் அவளே சொல்வாள். பேசாம அவன நீயே கட்டிக்கலாம் என்பேன் அடிமனத்தின் வெளிப்படுத்த இயலா பொறாமை காரணமாய். அடி செருப்பால.. என்பாள் நிஜமான கோபத்துடன். நான் இரண்டாமாண்டு முடிக்க போகிறேன் அவனும் மூன்றாமாண்டு முடிக்க போகிறான் இடையில் மூன்று முறை எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தான். அதையெல்லாம் முழுமையாக எழுத வேண்டுமெனில் இச்சிறுகதையை குறு நாவலாகத்தான் மாற்ற வேண்டும். அவன் இல்லாத அடுத்த நொடி தீக்கங்குகளை மென்று தின்னுவது போல் இருந்தது. அப்பாவின் சந்தேக பார்வை, சங்கேத மொழி அனைத்தையும் தாண்டி அவ்வப்போது அவன் நினைவு என் உதடுகளை புன்னகையில் நனைக்கத்தான் செய்தது. பெண்ணாய் இருப்பதன் மொத்த சந்தோசங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். யோசித்துப் பார்த்ததில் இவன் மேல காதல் வந்த காரணம் இதுவரை புரியவில்லை. இவனை காதலித்தது சரியென்று மட்டும் பட்டது. (இடையில் அவன் வீட்டிற்கு போன் செய்து அவனில்லாமல், என் மாமனார் ஹலோ சொல்லி, நான் யாரென்பதை உளறி அல்லது சொல்லியே தீருவேன் என்ற ஆர்வத்தில் கொட்டித் தீர்த்து, அதனால் அவன் சந்தித்த இன்னல்களை சொல்லச் சொன்னால் இன்னும் 7 அத்தியாயம் எழுதலாம். ) கர்ணா எங்களை முன்னமே மோப்பம் பிடித்திருந்தான். இப்போது கையும் காதலுமாக பிடித்துவிட்டான்.
அண்ணா என்னை தனியாக அழைத்து, தீராத வார்த்தைகளில் திட்டி தீர்த்தான். அம்மாதான் ஆறுதல் கூறினாள், பிற்பாடு அவளையும் வந்து திட்டினான். இவனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். அம்மாவும் அப்படித்தான் சொன்னாள், எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். வழக்கத்திற்கு மாறாக அவன் அமைதி காத்தது விசித்திரமாய் இருந்தது. என்னைச் சுற்றி ஏதோ ஒரு வலை பின்னப்படுவதை மனம் உணரத் தொடங்கியது. இந்த வாரம் வர முடியாது எனச் சொல்லிவிட்டான். ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறது என்றான். பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டான். என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தது தெரிந்தது காரணம்தான் விளங்கவே இல்லை. அண்ணாவின் அலட்சிய புன்னகையும், எதையோ சாதித்த திமிர் கொண்ட அவன் பார்வையும் என் தலை மயிரை கத்தையாக பிடித்து சுவற்றில் முட்டும் வலியை தந்தது. போர்வைக்குள் புகுந்துகொண்டு பேசியதையும், ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சியதையும் நினைத்துக் கொண்டேன். சேமிப்பு கிடங்கில் ஆனந்தக் கூத்தாடும் அவன் முத்தங்களில் கொஞ்சத்தை அள்ளிப் பருகிக்கொண்டேன், கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இவையனைத்திற்கும் மௌன சாட்சியாய் எங்கள் வீட்டு கருநீல நிற தொலைபேசி என்னைப் பார்த்து சிரித்தது. என்னைப் பாருங்கள், நான் நிறையவே அழுதிருக்கிறேன் கண்கள் வீங்கி, தலை சீவுவதில் கூட அக்கறையில்லாமல் கலைந்த கேசத்தோடு, குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அமர்ந்திருக்கிறேன்.
இந்த வாரம் வருகிறேன் என்றான். என்னையுமறியாமல் என் சிறகுகள் என் மேலாடை தாண்டி விரிந்து விட்டிருந்தது. போனேன், பார்த்தோம் நான் அவனை கட்டிக்கொண்டு கதறியழுதபடியே நடந்த அனைத்தையும் சொன்னேன். சலனமற்ற கண்களினால் அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டான். அவன் உடலில் சிகரட் வாடை அடித்தது, புது பழக்கம். பின்பு, ஏதேதோ சொன்னான் பை நிறைய அவன் கொண்டு வந்ததை என்னிடம் தந்தான்... பிரித்துப் பார்த்...
..............
....
......
ஹே அடுத்து சொல்லுடி இப்டி பாதில விட்டுட்டா எப்டி??
அன்னைக்கு நான் என்னடா பேசினேன்?? நீதாண்டா பேசுன.... நான் அழுதுகிட்டேதான இருந்தேன்... இப்போ மாதிரியே.. போடா இங்கயும் என்ன அழ வச்சுட்டேள.. பொறுக்கி
உங்ககிட்ட அவன் பேர கடைசியா சொல்றேன்னு சொன்னேன் இல்லையா?? "அவம்பேரு பொறுக்கி"