Friday, March 13, 2015

பந்து புராணம்...


நம்மூரில் கிரிக்கட் கதைகளுக்கு பஞ்சமிருக்காது. திரைப்படங்கள், சிறுகதைகள் என கிரிக்கெட் தழுவி நிறையப் பார்த்திருப்போம். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கூட ஒரு கிரிக்கெட் கதை உண்டு. இந்தியா முதன்முதலில் உலகக்கோப்பை வென்றவுடன், இந்தியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கிரிக்கெட் விளையாடுவதில் அபரிவிதமான திறமை கொண்டவர்கள் என்பதை நம்பத் தொடங்கினார்கள். நானும் நம்பினேன். போகவும், கிரிக்கட் மற்ற விளையாட்டுக்களை விட ஆடுவது எளிதானதாயிருந்தது. ஆட்டத்தின் இடையில் இத்தனை ஓய்வெடுத்துக் கொள்ளும் சவுகர்யம் வேறெந்த விளையாட்டிலும் இருக்காது. நான் சொல்லப்போகும் கிரிக்கெட் சர்வதேச போட்டிகளை சடுதியில் காலி செய்துவிடும் அளவிற்கான விதிமுறைகள் கொண்டவை. டக்வொர்த் லூயிஸ் விதி போலில்லை. எங்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு விதிமுறை பிறப்பின் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.

      என் இடது கையின் பெருவிரல் நகம் பிய்ந்து தெறித்தது, என் தம்பியின் நடு நெற்றி பிளந்து ஆறு தையல் போட்டது மேலும் சிற்சில ரத்தம் உறையும் திகில் சம்பவங்களால் கார்க் பாலிலிருந்து டென்னிஸ் பாலுக்கு மாறினோம். தனியொருவனால் பந்து வாங்குமளவிற்கு எங்கள் யாருக்கும் வசதி போதாது. அவரவர் சட்டைப் பையிலிருப்பதைப் பகிர்ந்துதான் பந்து வாங்குவோம். பின்னாளில் அதுவும் சிகரட் பிடிக்க ஆரம்பித்த பின்னர்தான் அப்பா சட்டைப் பையில் கைவைக்கும் அவசியம் வந்தது. டென்னிஸ் பால் விலை கருதியும், எத்தனை எளிதாக வந்தாலும் குருமணியின் கைகளுக்குள் அடங்காத கேட்சும், உடைந்துபோனால் திண்டுக்கலில் படிக்கும் நான் மட்டுமே வாங்கி வரும்படியான சூழ்நிலையும் நிலவியதால், ரப்பர் பாலுக்கு தாவினோம். KRI என்ற லேபிளில் வெள்ளை நிற பந்தது. பந்து வீச துக்கியடிக்க, பாய்ந்து பிடிக்க என எல்லா வகையிலும் சவுகர்யம் தந்தது. ஒரே குறை ஒரு மேட்ச் முடிவதற்குள்ளாகவே தெறித்துவிடும். ஊக்கினால் சிறு துளையிடும் எங்களின் விஞ்ஞான மூளையும் தகர்த்துவிட்டு உடைவது அதிலடிங்கிய சிறு சோகம். சில மாதங்களில் Stumper என்ற பெயரில் வந்த பல நிறத்திலான பந்துகள் எங்களை கவர்ந்தன. அடிக்கடி உடையவும் இல்லை, சவுகர்யத்திற்கும் குறைவில்லை.

      டோர்னமெண்ட், பக்கத்து தெரு/ஊர்களுடனான மேட்ச் தவிர்த்து, எங்களுக்குள் இரு அணிகள் பிரித்து விளையாடுவதில்தான் எங்கள் கவுரவம் அடங்கியிருந்தது. அணி பிரிக்கும் முறைகள்தான் குறிப்பிடத் தகுந்தவை. ஆரம்பத்தில், இரு கேப்டன்கள் நியமித்து, அவர்களாகவே பிடித்தமான ஆட்களை தேர்வு செய்துகொள்ளும் எளிய முறையைத்தான் பின்பற்றினோம். பின்னாளில் அவன் மட்டும் நல்ல நல்ல ப்ளேயரா எடுத்துக்கிறான் எங்களுக்கு மட்டும் டொச்சா.. போன்ற குற்றசாட்டுக்களால் அம்முறையை கைவிட்டொம். பின் கேப்டன்களை ஓரமாக நிற்கச் செய்துவிட்டு இவ்விருவராக தூரம் சென்று.. தங்களுக்கு வேறுவேறு பெயர் சூட்டிக்கொண்டு கேப்டன்களிடம் யார் வேண்டுமென கேட்ப்போம். உதாரணத்திற்கு, ரஜினி கமல் என்ற பெயர் சூட்டிக்கொண்டு ரஜினி வேண்டுமா கமல் வேண்டுமா எனக் கேட்போம். கேப்டன் எவர் பிரியரோ அவரை எடுத்துக் கொள்ளலாம். சில சமயம் இதில் பிக்ஸிங்கெல்லாம் கூட நடக்கும். என்ன பெயர் கேட்டாலும், “நீ அவன்ட்ட போயிரு, நான் இவன்ட்ட போயிர்றேன்” என்பது மாதிரி. இங்கே பெயர் என்பது சும்மா பேருக்கு. இப்படி ஆள் பிரிப்பது சலிப்புத் தட்டவே, ரஜினி அணி, கமல் அணி, தல அணி, தளபதி அணி எனப் பிரிந்தோம். கொடுமை என்னவெனில் கமல் அணிக்கும், தளபதி அணிக்கும் ஆட்கள் போதமாட்டார்கள். பெருந்தன்மையாய் மற்ற அணியிலிருந்து அவர்களுக்கு ஆட்கள் தந்து உதவுவார்கள்.

      வெயில், கிரிக்கட்டில் எங்களைப் பாடாய்ப்படுத்திய ஒரே வஸ்து. 20 ஓவர்கள் என்பது பதினைந்தாகி, பணிரெண்டாகி பின்பு 8 ஓவர்களில் நின்றது. பிரச்சனை அத்தோடு தீரவில்லை. டெயில் எண்டர்களுக்கு பேட்டிங்கில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற பெரும் பிரச்சனை வெடித்தது. ஆலோசனைக் குழுவைக் கூட்டி உடனடி தீர்வென்னவென யோசித்ததில் டெஸ்ட் மேட்ச்கள்தான் ஒரே வழியாய் தோன்றியது. எங்களுக்கு வெயில்தான் பெரிய பிர்ச்சனையாயிருந்தது. மைதானத்தின் வெளியே கட்டிடங்கள் சூழ ஒரு அரச மரத்தின் அடியில் பிட்ச் உருவாக்கினோம். அப்போது எங்களுக்கு எல்லாமே கிரிக்கட்தான். ஊர் மத்தியில் புதிதாக அமைத்த மெர்குரி விளக்கு வெளிச்சத்தில் கூட எங்களால் கிரிக்கட் மட்டுமே ஆட முடிந்தது. தீபாவளி, பொங்கல், ஊர்த் திருவிழா என எதுவாகினும் எங்கள் கொண்டாட்டம் பேட் பாலோடு மைதானத்தில்தான் இருக்கும். ஆயுத பூஜைக்கு பேட், ஸ்டம்புகளுக்கு பொட்டு வைத்த நிகழ்வுகளும் உண்டு.

      டெஸ்ட் மேட்ச்கள், எங்களுக்குள் இருந்த ராகுல் ட்ராவிட்களை உசுப்பிவிட்டன. ஒருத்தர் விடாமல் கட்டை போட்டு சாவடித்தனர். போதாக்குறைக்கு ஒரேயொரு ஸ்டம்பைத்தான் நட்டு வைத்திருந்தோம். நேரடியாக அல்லாமல் ஒன் பிட்ச்ட் பிடித்தாலே அவுட் என முடிவானது. இது ஓரளவு பலன் தந்தது. சரியாக ஸ்கொயர் ஃஆப் திசையில் யுவராணி வீடு இருந்ததால், ஆளாளுக்கு அங்கே தூக்கியடிக்க சுவரேறி இறங்கி தாவு தீர்ந்தது. சிலர் தவிர்த்து அனைவருமே எல்லாத் திசையிலும் தூக்கியடித்தனர். கட்டடத்தின் மேலே தூக்கியடித்தால் அவுட்டென முடிவானது. சிக்ஸர் என்பது கட்டிட சுவரில் நேரிடையாக மோதினால் மட்டுமே எனச் சுருங்கியது. விதிமுறைகள் இறுக்கமாகமாக வினோத் அடுத்த அஸ்திரத்தை எடுத்தான்.

போட்ட பந்துகள் ஒன்றினைக் கூட மட்டையில் வாங்காமல், உடம்பிலேயெ வாங்கி, நிழலில் நின்றவர்களையும் சோர்வடையச் செய்தான். வேறென்ன செய்ய… தொடர்ந்து மூன்று முறை உடலில் வாங்கினால் அவுட் என்ற விதிமுறை இயற்றினோம். அதிலும் இரண்டு முறை உடலில் வாங்கி மூன்றாவது பந்தினை அடிக்காமல் விலகியோடும் பெருமூளை வீர சாகசங்களும் அரங்கேறின. அடிக்கடி டாஸ் பந்துகள் போட்டு அதனால் நல்ல பேட்ஸ்மேன்கள் கூட ஒன் பிட்சில் தன் விக்கட்டைப் பறி கொடுத்த இழி நிலையப் போக்க டாஸ் பால் வீசக் கூடாது என முடிவானது. நெடுங்காலன் வெங்கடேஷ் செய்தது அராஜகத்தின் உச்சம், லெக் சைடில் மரநிழல் இருக்கிறதெனினும் கட்டிட மறைவில்லையென்பதால், எத்தனை ஃபீல்டர்கள் இருந்தாலும் ஃஆப் சைடில் மட்டுமே நிறுத்தியிருப்போம். போட்ட பந்துகள் அனைத்தையும் லெக் சைடிலேயெ அடித்து ஃபீல்டர்களை தெறிக்க விட்டான். பிறகென்ன மூன்று முறை லெக் சைடில் ஷாட் அடித்தால், லெக் சைடில் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பந்து நேரடியாக விழுந்தால் அவுட் என்ற விதிமுறை தயாரானது.

      இத்தனையித்தனை விதிமுறைகளுக்கு பின்னால் நடந்த சண்டைகளும் கூச்சல், குழப்பங்களும் அழகழகான நாரதர் கழகங்கள். தவறுதலாக ஒரு பந்து அதிகம் வீசிவிட்டால் அதற்கொரு பஞ்சாயத்து. பந்து வீச இருக்கும் கோட்டினை கால் கட்டைவிரல் தாண்டினால் அதற்கொரு சண்டை. ஒரே பக்கத்தில் 50 மற்றும் சிங்கத்தை வடிமைத்த ஐம்பது பைசா நாணயத்தில் எது டெய்ல், ஹெட் என்பதில் இருந்த குழப்பம் இந்திய அரசையே கேள்வி கேட்கவல்லது. அடித்த பந்து மரத்திலிருந்து ஒன் பிட்ச்ட் பிடித்து அவுட் கேட்டதால் கோபமுற்ற ஆனந்த், பேட்டினை இரண்டாக உடைத்தது மாதிரியான போர்க்காட்சிகளும் உண்டு. மரத்திலிருந்து நேராக அன்றி தரையில் பிட்சாகி பிடித்தால் அவுட்டில்லை என்றானது. சர்வதேச மேட்ச்கள் எதிர்கொண்ட ‘பந்தை எறிகிறான்’ பிரச்சனை எங்களையும் தாக்கியது. இதற்கும் நாங்கள் பந்து வீசியல்ல எறிந்துதான் விளையாடினோம். எறிவதிலும், எறிகிறான் பஞ்சாயத்துக்கள் விழுந்தது சுவாரஸ்ய முடிச்சு. தூஸ்ரா, கேரம் முறைகள் போல் ‘அய்யய்யோ கொல்றான்’ முறையில் அம்மாதிரியான எறிபந்துகளை நோபால் என அறிவித்தோம். லெக் சைட் எல்லை தாண்டிய பந்துகளை மயிரிழையில் ஸ்கெட்ச் போட்டு காப்பாற்றும் கண்கட்டு வித்தைகளுக்கும் பஞ்சமில்லை. ஒரே நாளில் ஏழு டெஸ்ட்கள் கூட ஆடியிருக்கிறோம். பதினாங்கு இன்னிங்ஸ். களைப்பென்ற வார்த்தைக்கு அர்த்தமே கூட தெரியாத காலமது.

யுவராணி தவிர்த்து இன்னும் இரண்டு பென்கள் பற்றி சொல்லாமல், இந்தக் கட்டுரையை நிறைவு செய்யமுடியாது. காலம் போன கடைசியில் சைக்கிள் கற்றுக்கொள்ள வந்த பாக்யலஷ்மி. அவள் சைக்கிள் கற்றுக்கொள்கிறேனென மைதானம் சுற்ற நாங்கள் பந்தெடுக்கிறோம் என அவளைச் சுற்றினோம். ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல், ‘நானும் உங்களோட கிரிக்கட் விளையாட வரவா?’ எனக்கேட்டு அவளே கோதாவில் குதித்தாள். அவளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்தது நான்தான். திரைப்படங்களில் கதாநாயகிக்கு, நாயகன் வயலின் வாசிக்க கற்றுக்கொடுப்பானே அதுபோல். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, துப்பட்டாவை இடுப்பில் கட்டிக்கொண்டு அவள் எங்களுடன் ஆடிய கிரிக்கட்தான் இதுவரையிலான எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான சற்றே சங்கடமான கிரிக்கட். ஒரு நன்பகல் நேரத்தில் தெருச்சண்டைகளில் பெரும்புகழ் பெற்ற அவளம்மா, பாக்யலஷ்மி மயிர்க்கற்றையை கொற்றாக பிடித்து இழுத்துப் போனபோது முடிந்தது அந்த கிரிக்கட்.

இன்னொரு பெண், இந்தப் பள்ளி வாட்ச்மேனின் மனைவி. ரொம்பவே களையான முகம் கொண்ட அக்கா. சோர்வான நேரத்தில் அவர் வீட்டில்தான் தண்ணீர் கேட்டு குடிப்போம். சொம்பில் தந்து கொண்டிருந்தவர், எங்களின் எண்ணிக்கை கருதி தினமும் ஒரு குடம் நிறைய தண்ணிரும் அதற்கொரு சொம்பும் வைத்துத் தந்துவிட்டார். தன் ஐந்து மற்றும் மூன்று வயது குழந்தையுடன் அவ்வப்போது மைதானம் விஜயம் செய்து பிள்ளைகளை ஓடியாடி விளையாடப் பணிப்பார். ஊருக்கு புதிதென்பதால், ஊர் பற்றி நிறையக் கேட்பார். எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவார். அப்படி போகிறபோக்கில் அவர் கேட்ட கேள்விதான் ரொம்பவே விஷேசமானது. ‘இப்டி இங்கயே திரியிறீங்களே, உங்க எல்லாத்துக்கும் வேலைனு எதுவும் இல்லையாப்பா? இன்னும் எத்தன நாளைக்குத்தான் வீட்ல சும்மா சாப்ட்டுட்டே இருப்பீங்க?’ இந்தக் கேள்விகள் பெரிதாய் எந்த மாற்றத்தையும் எங்களுக்கு தந்துவிடவில்லை. அப்போதைக்கு சிரித்து மழுப்பிவிட்டாலும், அதன்பிறகு அவரை நேருக்குநேர் எதிர்கொள்வதில் இருந்த சங்கடமும், பதற்றமும் எதையோ உணர்த்தியது.

      ஒவ்வொருவராக ஒவ்வொரு திசையில் பறந்துவிட்டோம். இப்போது அனைவருக்கும் வேலையிருக்கிறது. தனியாளாக பந்தென்ன, பேட்டும் கூட வாங்கிவிடும் அளவிலான பொருளாதாரம் இருக்கிறது. கூடி விளையாடத்தான் ஊரில் யாருமில்லை. சமீபத்தில் மகளை அழைத்துக்கொண்டு அவளின் புது சைக்கிளையும் தூக்கிக்கொண்டு மைதானம் சென்றிருந்தேன். நாங்கள் விளையாடிய அரச மரத்தடியில் இன்னொரு கும்பல் விளையாடிக் கொண்டிருந்தது.

ஹேய் பேட்ல படவே இல்ல…

பேட்ட ஸ்ட்ரைட்டா போட்றா…

நான் ரீச்சான பின்னாடிதாண்டா அவன் ஸ்டம்ப்ல அடிச்சான்…

அய்யா ஹிட் விக்கட் இருக்குனு முன்னாடியே சொன்னீங்களா…

நீ கேட்ச் பிடிச்சு ஒருத்தன் அவுட்டாகிப் போறது நான் சாவுறதுக்குள்ளயாச்சும் பாத்துறனும்டா…

என்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மகளுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.